9 May 2010

முள்ளிவாய்க்கால் மீன்கள்

நேற்று வரை நீர் இருந்த இடத்தில்
நினைவுகளை இருத்தி விட்டு
உயிர்களை புதைத்து விட்டு
உறவுகள் இங்கே கருவாடாய் காய்ந்திட

அன்று

கரை நாடி உலக கரம் நாடி
உறவகள் கை பிடித்து காத்திருந்தீர்
மீண்டும் பெருங்கடல் புகும் ஓர் நாள்
வரும் என்று விழி பார்த்திருந்தீர்

கண்முன்னே பார்த்திருக்க
கறுத்த விழி பூத்திருக்க
விழி மடல் பிரித்து
எம் விரலே எம் கண்ணைக் குத்தியதே

பின்னே அலை ஆட வந்தவன்
உனை சுற்றி வலை படுத்தவன்
வல்லரசுகள் சதியோடு சூட்சும
சமராடி உமை பாடையில் ஏற்றினர்.

தொடர்ந்து..

இழந்தவை தொலைந்தவை என்று
விட்டது கடலோடு போக - மிகுதி
அகப்பட்ட சில மீன்கள் ஒன்றாய்
அடைபட்டு வதைபட்டு சாவிற்கே விடைகேட்க

எல்லைகள் தாண்டிய மீன்கள் இங்கே
ஏதிலிகள் ஆகிட , அங்கும்
எடுத்தவன் பிரித்தவன் என்று
தமக்குள்ளே தடுமாறி தவித்திட

ஆண்டொன்று தாண்டி
பிரளயங்கள் சுழன்று

கடல் கொண்ட பூமி மீண்டும்
கரை நாடி வாராதா உறவுகள்
கரம் கோர்க்க வாராதா எம்
கனவுகள் நனவாக வாராதா

அடி தொட்ட முத்துக்கள் பல
அரிதான சொத்துக்கள் பல
எதிர் கால செல்வங்களைத் தேடி
எதிர் பட்டு வாராதா எம் கண்முன்னே
எதிராகா வாராதா..

வருவீர்கள் நீங்கள் வருவீர்கள் என்றே
அழுவதை கூட நாம் அடக்கி வைத்துள்ளோம்
நாதியற்ற இனம் என்று நாலு வார்த்தை
எழுதும் முன்னர் நாடித் துடிப் பெடுத்து
நாயகரே வாரும் முன்னே

No comments: