14 Aug 2009

1977 இனக்கலவரம் - வரலாற்றில் மீண்டும் ஒரு கரும்புள்ளி



நாம் எல்லாம் இலங்கை தாய் மண்ணில் பிறந்த இலங்கையர் என்று பெருமைப்பட்டு கொண்டிருந்த ஒரு காலம்..அன்று அதை பொய்யென்று ஆக்கி நீங்கள் தமிழர்களே...!

உங்களுக்கும் இந்த புனித பூமிக்கும் எந்த விதத்திலும் தொடர்பற்றவர்கள் என்பதை பறை சாற்றும் முகமாக தொடர்சியாக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களில் இன்றைக்கு 32 வருடங்களுக்கு முன்னர் இதே நாள் இதே தினம் கட்டவிழ்த்து விடப்பட்டு தொடர்ச்சியாக 12 நாட்களின் பின்னர் ஒரு தற்காலிக முடிவை கண்ட அந்த ஒரு கொடிய இனக்கலவரம் இந்த கண்ணீர்பூமியில் நடந்து முடிந்தது.

வரலாற்றின் தொடர்ச்சியாக..

1915

1958

இதன் தொடர்ச்சியாக 1977 சிங்கள தமிழ் கலவரமும் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

அன்றைய அந்த காலகட்டம் எமது வரலாற்றில் மிக முக்கிய அரசியல் தோற்றப்பாடுகளை எம் மனங்களில் ஏற்படுத்தி சென்றிருந்தது.இதன் ஒரு அங்கமாக அன்றைய பொதுத்தேர்தலில் (1977 பொதுத்தேர்தல்) தமிழர் விடுதலைக்கூட்டணி அமிர்தலிங்கம் தலைமையில் போட்டியிட்டிருந்தது.தந்தை செல்வா தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழருக்கு தனிநாடு நிறுவவதை தனது இலட்சியமாக கொண்டிருந்த போதும் அன்று அவரது மரணத்தின் பின்னர் இந்த பொது தேர்தலில் போட்டியிடுவது எனறும் தமிழரின் தமிழீழ கோரிக்கையை பெற்றுத்தர மக்களின் ஆனையை கேட்டு தமிழ் இளைஞர்களை தமிழ் தலைவர்கள் சமாதானப்படுத்தி இருந்தனர்.


இதன் பிரதிபலனாக அன்றைய தேர்தலில் வடமாகாணத்தின் பதின்னான்கு தொகுதிகளிலும் கிழக்கு மாகாணத்தின் பதினொரு தொகுதிகளில் நான்கு ஆசனங்களையும் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்கட்சியாக பாராளுமன்றத்தினுள் அக்கட்சி சென்றிருந்தது.அவ்வாரே தென்பகுதியிலும் ஜக்கியதேசிய கட்சியும் பாராளுமன்றத்தின் 168 மொத்த ஆசனங்களில் 139 ஆசனங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருந்தது.

ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக் கலவரம் ஒன்று வெடித்தது.



இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் இது பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு இடம் பெயர்ந்தனர். பல்லாயிரக்கணக்கான மலையக பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களும் இந்த கலவரத்தின் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கினர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.



இதன் பின்னராவது வரலாற்றில் இப்படி ஒரு கரும்புள்ளி விழாது என்று எதிர்பார்த்தோமே ஆனால் அது மீண்டும் பொய்துத் தான் போய் விட்டிருந்தது.

தொடர்ச்சியாக 1983 கலவரமும் அதன் பின்னர் இடம்பெற்ற இந்த இரத்த கண்ணீரும் இதன் ஒரு தொடர்ச்சி தான் என்றால் அதுவும் மிகையில்லையே.

இன்னும் எப்படிப்பட்ட இரத்தக்கண்ணீரை நாம் வடிக்க வேண்டி வருமோ என்பதை இனிவரும் வரலாற்று பக்கங்கள் தான் எழுதித்தீர்க்க வேண்டும். அதுவரை நாம் நடந்த வந்த பாதைகளில் விட்டுவந்த தவறுகள் மீண்டும் ஒரு தடவை நிகழாது பாதுகாக்கப்பட வேண்டியது எம் அனைவரின் முன்னுள்ள தலையாய கடமையாகும்.இதை செவ்வன செய்வோமாக.

No comments: