8 Apr 2010

இல்லறம்

எதிர் முனைகளின் ஈர்ப்பே
உலகத்தின் சுழற்சி
இனங்களின் ஈர்ப்பே - இந்த
வாழ்க்கையின் சுழற்சி

ஒற்றை விழியால் நீ
உலகத்தை பார்த்தால்
பாதி அழகும்
பார்வைக்குள் தவறும்
ஒற்றை பயணமாய் நீ
வாழ்க்கையை தொடர்ந்தால்
உன் பாதி வாழ்வும்
தனிமைக்குள் முடங்கும்

தவறுகளைக் கண்டு நீ
பிரிவுகளை வேண்டாதே
பிரிவுகள் ஒன்று தான் - தவறின்
முடிவாக எண்ணாதே
நினைவுகளே போதும் என்று நீ
வாழ்க்கையை தொடராதே
இனிமைகள் தொலைந்ததாக
உனக்குள்ளே புழுங்காதே

முடிவான முடிவென்று - அதையே
முடிவாக செய்யாதே
முடித்துப் போட்டதை - நீ
முறையின்றி அறுக்காதே
விரல்களை மீறும் நகங்களை
வெட்டுவது ஒன்றும் தவறல்ல
தவறென்று எண்ணியே - நீ
நகங்களைப் பிடுங்காதே

வலிகளை விதைத்து விட்டு - நீ
வாழ்க்கையை ரசிக்காதே
வலிமையான ஆளென்று - உனை
நீயே நினைக்காதே
இதற்கான முடிவொன்றை
தனியாக எடுக்காதே
நானாக சொல்வதால் - இதை நீ
தவறென்று எண்ணாதே

வாழ்க்கையின் அர்த்தத்தை - எந்தன்
வார்த்தைக்குள் தேடாதே
வாசலை பூட்டி வைத்து நீயே
வாழ்க்கையை தொலைக்காதே

மரகந்தம் சேராத எந்த
மலருக்கும் மணமில்லை
தேன் கண்டு சுவைக்காத - எந்த
தேனிக்கும் உணர்வில்லை
நிலவோடு சேராத - அந்த
இருளுக்கும் அழகில்லை
உயிரோடு சேராத - எந்த
உடலுக்கும் பொருள் இல்லை
இங்கே
ஆணோடு சேராத எந்த
பெண்மைக்கும் முழுமை இல்லை
பெண் வந்து கோர்க்காத - எந்த
ஆணுக்கும் சிறப்பில்லை

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - ( திருக்குறள் அதிகாரம் 5 குரல் 45


No comments: