ஆழ்கடல் உண்மைகளாய் பலகதை இங்கு
இருட்டினில் தான் உறங்கும்
அது ஊரறியாது உலகறியாது என்றும்
ஊமையாய் தான் உறங்கும்
கடலலை மேலே நீந்தும் நினைவுகள் என்றும்
கரை வந்து சேர்வதில்லை
அவர் கதைகளைச் சொல்லி அழுதிட
இங்கே அனுமதி ஏதுமில்லை
புகழினை வேண்டி க் குழிகளில் யாரும்
புதைந்திட நினைத்ததில்லை
அவர் புன்னகை இங்கே பூவுலகில்
யாருக்கும் புரிந்திடப் போவதில்லை
கல்லறையில் பெயர்களின்றி வாழ்வார் சிலர்
உள்ளக் கல்வெட்டில் நீடூழி வாழ்வார்
நீளும் கடலிடை உறக்கம் கலைந்திவர்
நித்தமும் நீந்தியே போவார் அங்கு
சீறும் நெருப்பென ஆனவர் பகை
மீது வெடியெனப் பாய்வார்
கடல் நீருடன் நீறென ஆகியே எம்
விழி நீருடன் நீரென ஆவார்
நம் நினைவினில் கனவினில் தோழர்
நித்தமும் உயிருடன் வாழ்வார்
உலகம் உமை ஏற்க மறுத்தாலும் எம்
விழிகள் உமை மறக்காது
தாயகம் தேடி ஓடும் இவர் நினைவுகள்
கடல்மேல் அலையென ஆகும்
தாய்மடி உறக்கத்தை தொலைத்தவர் போலும்
தினம் விழி கரை தேடும்
விழிமூடும் நிலை வரும் போதிலும் அவன்
முகம் நினைவினில் தோன்றும்
அவன் வாழும் காலத்தில் வாழ்ந்தது போதும்
வீழும் அவருயிர் எப்போதும்
உறவுகள் உமை நினைத்தே நாளும் எம்
உள்ளம் துடிக்குது இப்போதும்
1 comment:
கல்லரையில் பெயர்களின்றி வாழ்வார் சிலர்
உள்ளக் கல்வெட்டில் நீடூழி வாழ்வார்
இந்த வரிகள் நன்றாக இருக்கிறது!
Post a Comment