9 Aug 2009

தாயை சந்திக்கும் தருணங்களில்....!பகுதி-43


எல்லாம் நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன்.

வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் பார்த்து "வியாபாரம்' இல்லாதிருந்த புண்ணிய இடம் அது. அதீத பக்தியெல்லாம் பொதுவில் எனக்கு வராத சமாச்சாரம். ஆனால் இத்தூய மண்ணில் காற்தடம் பதித்த கணத்திலேயே கண்கள் பனித்தன. சுமார் பத்து நிமிடங்கள் கட்டின்றி அழுதுகொண்டி ருந்தேன். சடங்குகளில்தான் விருப்பில்லையே தவிர சரணடையும் ஆன்மீகத்தில் ஆசையுண்டு. அதுவும் ஏழாவது வயதில் தந்தையை இழந்து, தாய் வளர்த்த பிள்ளை நானென்பதால் ஆழ்மனதில் மாதா பற்று அதிகம்.

முதன்முறையாக நான் லூர்துமாதா திருத்தலம் சென்றது 1997-ம் ஆண்டு ஐரோப்பாவின் கோடை காலத்தில். திருத் தலத்தினூடே ஓடும் அருவியை பார்த்துக் கொண்டே மரநிழலொன்றில் முன்பகல் முழுதும் அமர்ந்திருந்த வேளை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ""குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை யொன்றும் இல்லை கோவிந்தா'' -பாடல் நினைவுக்கு வந்து மனதை நிறைத்தது. மனதெல்லாம் இனம்புரியா நன்றியுணர்வில் நிறைந்து சிலிர்ப்பாயிருந்தது.

அக்கணத்தில் என் நாட்குறிப்பேட்டை எடுத்து, ""சொல்லில், சொல்லில் வடிக்க முடியா நன்மைகளை நீ செய்தாய், குறை யென்று என் வாழ்வில் ஏதுமில்லை'' என்று எழுதிய பாடலுக்கு 2001-ம் ஆண்டு இசையும் அமைத்தேன். உண்மையில் நிர்வாகம், பேச்சு, எழுத்து இவற்றையெல்லாம்விட என் இயல் பான தாய்மாடி இசை. கிடார், கீ போர்டு எல்லாம் ஒரு காலத்தில் நன்றாக இசைப்பேன். அவற்றையெல்லாம் இழந்துவிட்டேனே என்று அவ்வப்போது மனம் கிடந்து தவிக்கும்.

திருத்தல மர நிழலில் அமர்ந்து எழுதிய அந்தப் பாடலின் சரணத்தில் ""வளர்த்த ஆசைகள் வசமாக வில்லை, நினைத்த காரியம் நிறைவேறவில்லை, ஆனாலுமே அன்பானவா... குறையென்று என் வாழ்வில் ஏதும் இல்லை'' என்ற வரி அவ்வப்போது என் நாவில் வந்து போகிற மறக்க முடியாத வரி. உண்மையில் என் வாழ்வும் அதுதான். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இரண்டிலும் சமநிலை பேணப் பயின்றுவிட்டால் குறையென்று வாழ்வில் எதுவுமில்லைதான்.

நான் 1997-ம் ஆண்டு வேரித்தாசில் லூர்துமாதா திருத்தலம் பற்றி படைத்த நிகழ்ச்சியை, வன்னிக் காடுகளுக்குள்ளிருந்து அப்போது கேட்ட போராளியான சிவரூபன் 12 ஆண்டுகளுக்குப் பின் அவர் அத்தலத்தில் நின்றபோது நினைவுகூர்ந்து என்னையும் நினைத் திருக்கிறார். வாழ்வு பாரபட்சம் காட்டி பரிசாகத்தரும் பெறுமதியான பொக்கிஷங்கள் பொன்னோ, பொருளோ, பணமோ அல்ல. இத்தகு முகம் தெரியா மானுட உறவுக்கண்ணிகள்தான்.





இன அழித்தலின் பிணக்காடு வழியே ரத்தமும் சதையும் மிதித்து தன் உயிரை மிச்சப்படுத்திய சைவரான சிவரூபனுக்கு அழுவதற்கோர் தாய்மடி அவசியப்பட்டிருக்கிறது. லூர்துமாதா வீடு நோக்கி ரயில் ஏறியிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் சிலுப்பிய கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு பரிசேயக் கூட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதென்ன கடவுளின் அருட்செயலோ தெரியவில்லை. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், அவரது உடல் வைக்கப்பட்ட கல்லறைக் கோயிலில் கடமையாற்றும் தமிழகத்து அருட்தந்தை ஒருவர் விடுமுறைக்காய் வந்திருந்தார். காஞ்சிபுரத்துக்காரர். கிறித்தவ உலகின் மிகப்புனிதமான கோயில்களில் ஒன்று இது. இந்தக் கல்லறையினின்றுதான் இயேசுபிரான் சாவின் தளைகளை அறுத்தெறிந்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவ மக்கள் நம்புகிறார்கள்.

இந்த காஞ்சிபுரத்து அருட்தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களிடம் சிறியதோர் வேலை ஆகவேண்டியிருக்கிறது, உதவ முடி யுமா என்று கேட்டுத்தான் வந்திருந் தார். உரையாடிக் கொண்டிருந்த போது சொன்னார்:

""உங்களது தயாரிப்பில் இசைஞானி ஆக்கினாரே சிம்பொனியில் திருவாச கம்... என்னமான படைப்பு... (ரட்ஹற் ஹ ஙஹள்ற்ங்ழ் ல்ண்ங்ஸ்ரீங்) என்று சிலாகித்து வியந்தவர் தொடர்ந்தும் சொன்னார். ""ஏறக்குறைய எல்லா நாட்களுமே இயேசுவின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட அத்திருக்கோயிலில் பக்தர்களெல்லாம் அகன்றபின் இரவு பத்துமணிக்கு மேல் நான் சிம்பொனியில் திருவாசகம் கேட்பேன்... அப்படியொரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்...'' என்றார்.

மதவெறியின் விஷவேர்கள் இந்த மண்ணில் ஒருபோதும் இங்கு ஆழம் போக முடியாதென்பதற்கு சிவரூபனும் இந்த அருட்தந்தையும் சமீப நாட்களில் நான் கண்ட சாட்சிகள்.

தாயின் திருத்தலத்தில் நின்று சுமார் பத்து நிமிடங்கள் பேசிய சிவரூபன், விம்மி அழுதார். எனது முகவரியை பெற்றுக்கொண்டார். கடைசி நாட்களில் முல்லைத்தீவில் கண்டவற்றையெல்லாம் எழுதி அனுப்பு வேன் என்றார். அவரது கடிதம் நேற்று வந்தது. கடிதம் வடித்த ரத்தக் காட்சி களை அடுத்த இதழில் பதிக்க விழைகிறேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் பெரியார் வழி. கடவுள் நம்பிக்கை இருக்க வில்லையென்பது நேர்காணலினூடே தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இயற்கையை, ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் ஓர் அர்த்தம் இருப்பதைத் திடமாக நம்பினார். வாழ்வை மதித்தார், நேசித்தார். நட்பை, மானுடத்தின் மென்மையான உணர்வுகள் யாவற்றையும் கவித்துவத் தன்மையோடு போற்றினார்.

நேர்காணலில் அவரிடம் நான் கேட்ட முதற்கேள்வி அவரது தாயின் நினைவுகளைப் பற்றித்தான்.

""உங்கள் தாயை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? பார்க்க முடியவில்லை, அவர் அருகில் இல்லை என்ற ஏக்கம் எழுவதுண்டா? உங்கள் தாயின் நினைவுகளை உலகத் தமிழரோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்..'' என்றேன். இதோ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மகனின் பதில் :

""தாயை சந்திக்கணும் என்று ஆசை இல்லாமல் ஒரு மகனும் இருக்கமாட்டான். ஆனால் என்னுடைய சூழலை பொறுத்த வரைக்கும் 19 வயதிலேயே நான் தலைமறைவான வாழ்க்கை தொடங்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே எனது வீட்டை விட்டு பிரிந்ததால் எனக்கு அவர்களோடு வாழும், பார்க்கும் அந்த சந்தர்ப்பம் குறைவாகவே இருந்தது. என்னுடைய தாயுடன் நான் செலவிட்ட காலங்கள் அந்த 19 வயது வரைதான். அதிலேயும் 18-19 வயதிலேயே நான் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கிட்டேன்.

அந்த காலகட்டங்களில் போலீஸ் என்னை வெளிப்படையாக தேடவில்லையே தவிர, நான் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டதால் அப்பவே வீட்டில் இருப்பது குறைவு. பிறகு தலைமறைவு வாழ்க்கை யோடு வீட்டுக்குச் செல்வதையே தவிர்த்து விட்டேன்.

அந்த நேரங்களில் என்னைத்தேடி போலீஸ் எப்போதும் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். எனது தாயைக்கூட விசாரிப்பார்கள். ஒருமுறை என் தாயை போலீஸ் ஸ்டேஷனுக்கு பிடித்துக்கொண்டு போய் ஒருநாள் வைத்திருந்தார்கள்.

அப்படிப் போராட்ட வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுத் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டேன். எப்போதாவது 5 வருடம் அல்லது 6 வருடம் என நீண்ட இடை வெளிகளுக்குப் பின்புதான் ஒருநாள் அல்லது இரண்டு நாள் என தொடர்ச்சியாக சந்திப் போம்.

இப்பகூட கடைசியாக 87-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த கால கட்டத்தில் நாங்கள் ஒரு சுமூக சூழலில் இருந்த நேரத்தில் என் தாயை நான் சந்தித்தேன்.

அதன்பிறகு இந்தியாவோடு மோதல் வர, தலைமறைவாக இருந்ததோடு கிட்டத்தட்ட 87-லிருந்து இதுவரைக்கும் என் தாயை சந்திக்கவில்லை.

(நினைவுகள் சுழலும்)

No comments: