23 Dec 2000

தமிழுக்காக

தமிழுக்கு நிறமுண்டு என்று
தலைப்பு சொன்னது,
வைரமுத்து வடித்தது என்று
வாசல் சொன்னது
படித்திடும் ஆசையோடு
பக்கங்கள் புரட்டினேன்

பழந்தமிழ் இலக்கியம் முதல்
பாமர இல்லம் வரை
கவி முத்து இவர்
வரி வடித்திருந்தார்

சீர் திருத்தம் என்ற பெயரில் - தமிழை
சீரழித்து வரும் சினிமாவில்
சிந்திக்க சில வரிகளும்
சிரிக்க சில வரிகளும்
சிலிர்க்கும் தமிழில் சினிமா பாடல்
எழுதி வரும் இவரை நான் அறிவேன்

இவன்.......
கவிதை தேனை உண்டு
களிப்புற்றும் இருக்கேன்
கடிந்து கண்டித்தும் இருக்கேன்
என்னுள்ளே

ஆனாலும்
இன்றைய இவன் கவி - என்னுள்ளே
இறைத்த நீர் - எரியும் நெருப்பில்
வாரி தெளித்த எண்ணெய் போன்றிருந்தது


ஆரம்பமே தமிழிற்கு
ஆராத்தி இட்டவன்
தமிழ் வீரம் எழுதி
தலைவணங்கா
தமிழ் வீரம் எழுதி - ஓர்
தமிழனாய் தாண்டவம்
ஆடியிருந்தான்

உயிர்கள் அழிந்த போதும்
உலகம் மாறிய போதும்
உயிர் தமிழ் அழியாத
உண்மைய சொன்னவன்

இன்று...

உயிர்த் தமிழை வளர்ப்பவன் - அவனை
இலை மறை காயாவது
இடித்து உறைத்தானா..?
இல்லை
இவன் தவறி விட்டான் - அதனால் தான்
இவன் மீது கோபம் எனக்கு


விமர்சனம் செய்யும் உரிமை
உணக்கில்லை என்கிறது - மனம்
மனதிற்கு கட்டு போட்டு
மனசாட்சி கூண்டை திறந்து விட்டேன்

வள்ளுவன் வாயால்
வாழ்வு பெற்ற தமிழ்
களப்பிரர் காலத்தில்
நசுக்கப்பட்டு நலிவுற்று
அழியும் நிலையிலும்
நாலடியார் ஏலாதி துாண்களால்
தாங்கி பிடிக்கப்பட்ட தமிழ்
பாதைகள் மாற முற்பட்ட போது
சைவத்தை தன் கண்களாக கொண்டு
தனது தனித்துவம் மாறாத தமிழ்
நாயன்மார் , ஆழ்வார்களால்
துாக்கி விடப்படுகிறது
கவிஞர்களும் காப்பியங்களும்
மாறும் போதும்
மாறாத மங்காத் தமிழ்
தன் உயிர் நாடியை இறுகப் பற்றிய படி
தள்ளாடி வந்து
பாரதி என்ற புரட்சி பாவலன் வாயால்
போர்கொடி துாக்கிய தமிழ்
பாரதிதாசன் அறிஞர் அண்ணா வாயால்
பாரதத்தில் படர்ந்த தமிழ்
கலைஞர் கருணாநிதி மொழி வழியால்
காக்கப்படுகிறதாய்

கவிஞன் இவன்

கவி வடித்திருப்பது
கள பூமியில் வாழ்ந்தும்
காயங்கள் காணா
என் உடலின் மீது
காய்ச்சி எடுத்த கம்பி ஒன்றால்
கணப்படுத்தியது போன்று இருந்தது


கலைஞர் என்ற ஒரு காம்பு
தமிழை காதல் செய்ததாய்
கவிஞன் இவன் கவி வடித்திருப்பது
உண்மையே


திராவிடர் இயக்கம் என்ற பெயரில்
திரண் டெழுந்த இயக்கம் - அன்று
திசையற்று போக இருந்த என் தமிழை
திசை காட்டி அழைத்திருந்தனர்
அதில்..
முத்தமிழ் வித்தகனாக
முது பெரும் அறிஞனாக
கலைஞர் இவர்
கருனாநிதி
கம்பீரமாய் கதிரை மேல் அமர்ந்திருந்தார்

என்று எங்கோ படித்ததாய் ஒரு ஞாபகம்

ஆனால் இன்று..... இந்தி என்ற ஆரிய மோகம் போய்
ஆங்கிலம் எனும் நாகரீக பேய்
தமிழை மிதித்திருக்க
கண்கட்டி வாய் பொத்தி
கதிரை என்ற ஒற்றை ஆசையால்
கதியாலாக இருக்க வேண்டியவன்
கத்தியாக அல்லவா மாறிவிட்டான்

இவனால் தான் இன்று - தமிழ்
இறக்காது இருப்பதாய்
இவன் கவி பாடுவது
இங்கு இனி செல்லாது


ஏழு கால் துாரத்தில் இருக்கும்
என் ஈழத்தில் தமிழ் காணும்
எழுச்சியை பாடாத இவன் - தமிழுக்கு
ஏடு தொடக்கிறானாம்...


ஈழம் மலர்ந்தால் மகிழ்ந்திடுவேன்
ஈழத்தில் புலியை ஆதரிக்க மாட்டேன்

என்றவன்.. இன்று

தமிழுக்காக தன் வாழ்வை அழித்ததாக
தமிழகம் எங்கும் பாடி திரிவதும்
தமிழ் காத்த தெய்வமாக - கவி
இவன் பா வடித்திருப்பதும்
எந்த விதத்தில் நியாயம் ஆகும்


தமிழை சொந்தம் பாராட்ட
உனக்கு என்ன உரிமை என்றால்



இன்று...

தனித் தமிழனாக
தமிழ் வாழ
தமிழ் மக்கள் வாழ
தமிழுக்கு தனி கொடி தந்த
தமிழீழ தங்கங்கள்
எங்கள் செல்வங்கள்
தரணியில் விதையாக வீழ்ந்ததை
தமிழன் எவன் அறிந்திரான்
அந்த உரிமையில் நான் உரைப்பேன்
தமிழ் அது இனி எமக்கே சொந்தம்
வீரத்தமிழ் அது இனி எமக்கே சொந்தம்


சங்க காலம் அது மீண்டும் உதித்ததாய்
சரித்திரமே வியந்து நிற்க
சத்தியம் பாட வேண்டியவன்
சாணக்கியம் பேசி
சறுக்கி விட நினைக்கிறான்

தனி ஒருவனாய்
தோழர் பலர் கூடி
தமிழீழ தலைவன்
தம்பி பிராபகரன்
தமிழனாய் போர் கொடி துாக்கியது
தமிழக கவிஞன் இவனுக்கு
தெரியவில்லையா.....???


இல்லை


தெரிந்திருப்பான் இவன் - எம்மை
அறிந்திருப்பான் எம்மை - ஆனால்
பயந்திருப்பான் எம்மை பாடுவதால்
தடா ஒன்றோ இல்லை
படா பலதோ
பாய்ந்திடும் என்று
பயந்திருப்பான்


பயந்தவன் எல்லாம்
புரட்சி கவிஞனாக முடியாது
பயந்தவன் தமிழ் வீரம் பாடும்
தமிழ் கவிஞனாக முடியாது

அன்று

பாரதியும் பாரதி தாசனும்
பயந்திருந்தால்
பாரத்தத்தில் தமிழ் பா
பாடி இருக்க தான் முடியுமா

இன்று

காசி அண்ணனும்
செல்லப்பாவும் பயந்திருந்தால்
பாரதம் எங்கும்
பா தான் படிட முடியுமா...??


அப்படியும் சிலர் வாழ
இப்படியும் சிலர் வாழ்கிறார்


“தமிழுக்காக”

No comments: