1 Oct 2009

நகரை காத்த வீரன்..!பகுதி-57


மானுட நாகரீகத்தின் பயணத்தை உயர்ந்த பாதைகள் நோக்கி நிறுத்திய மக்களாட்சி (Democracy) அரசியல் தத்துவத்திற்கும் மாரத்தான் ஓட்டத்திற்கும் வியப்பான வரலாற்றுத் தொடர்பு உண்டு. சென்னையில் கடந்த ஞாயிறன்று ஏழை மாணாக்கரின் கல்விக்காய் பாடுபட்டு வரும் கிவ் லைஃப் (Give Life) திட்டத்திற்காக தமிழ் மையம் அமைப்பு நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் காலை மழையில் நனைந்து கொண்டே சுமார் அறுபதாயிரம் பேர் ஓடிய காட்சியின் மறக்க முடியா சிலிர்ப்புடன் மாரத்தான் வரலாற்றைத் தேடுகிறேன்.

கிறிஸ்த்து பிறப்பதற்கு முன் 546-ம் ஆண்டளவில் பெர்சியாவும், கிரீசும் உலகின் முக்கிய இரு பேரரசுகளாய் திகழ்ந்தன. மத்திய தரைக்கடலை யும் செங்கடலையும் இணைக்க பெருவாய்க்கால் கட்டும் ஆற்றலை அன்றே பெற்றிருந்த அந்தப் பெர்சியாதான் இன்றைய ஈரான். ஆசிய, ஐரோப்பிய நிலப்பரப்பின் கணிசமான பகுதிகளை பெர்சியப் பேரரசு தன் ஆளுகைக்குள் கொண்டிருந்தது.

கிரேக்க நாடு என பொதுவாக நாம் அறியும் கிரீசுப் பேரரசு அகண்ட நிலப்பரப்பினை கொண்டி ருக்கவில்லை. நகரங்களை மையமாகக் கொண்டு சிறு நாடுகளை உருவாக்கி, சுயாட்சி உரிமை தந்து, ஓர் கூட்டாட்சிப் பேரரசாக உயர்ந்து நின்றது கிரீசு. அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற சிந்தனையாளர்களை உருவாக்கிய பேரரசு இது. இப்பேரரசில் சுயாட்சி உரிமை பெற்று மகத்துவமாய் மிளிர்ந்தவை ஏதென்ஸ், ஸ்பார்ட்டா ஆகிய இரு நகரங்கள். ஏதென்ஸ் சிந்தனை-அறிவு வலுவும், ஸ்பார்ட்டா ராணுவ வலுவும் கொண்டிருந்தன.

கி.மு.490-ம் ஆண்டு பெர்சியப் பேரரசின் பெரும்படை கிரீசுப் பேரரசை மட்டுமல்லாது ஐரோப்பிய நிலப்பரப்பு முழுவதையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் அகண்ட கனவோடு மத்திய தரைக்கடல் கடந்த ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ""மாரத்தான்'' என்ற சமவெளிப் பரப்பில் தரையிறங்கி தாக்குதலுக்குத் தயாரானது. கருத்தமர்வுகள், விவாதங்கள், தத்துவ சங்கங்கள் என அறிவுக்கிறக்கத்தில் கிடந்த ஏதென்ஸ் நகர் அலை அலையாய் வந்திறங்கி நின்ற பெர்சிய ராணுவத்தைக் கண்டு பிரமித்துப் போய் ஸ்பார்ட்டா நகரின் தோழமை உதவியை அவசரமாய் நாட வேண்டியிருந்தது. ஏதென்சுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் இடைப்பட்ட தூரம் 226 கிலோமீட்டர்கள். தொலைபேசும் வசதியில்லா அக்காலத்தில் குதிரைகளும் பாய்ந்து பறக்க முடியா மலைகளாலான அப்பரப்பை பிடிப்பிடெஸ் என்ற வீரன் செய்தியோடு 36 மணி நேரத்தில் ஓடிக் கடந்து சேர்ந்தான். ஆனால் ராணுவ வலு கொண்ட ஸ்பார்ட்டா மூட நம்பிக்கைகளின் நகராகவுமிருந்தது. முழு நிலா நாள் வரும்வரை தங்கள் ராணுவம் நகராது என்று கூறிவிட்டார்கள். ஏமாற்றத்தை சுமந்து கொண்டு 226 கிலோமீட்டர் மீண்டும் திரும்பி ஓடினான் பிடிப்பிடெஸ்.

ஏமாற்றச் செய்தி கேட்டு ஏதென்ஸ் மனம் தளர வில்லை. மாரத்தான் களத்தில் பெர்சியப் பெரும்படையை துணிவுடன் எதிர்கொண்டனர். முதல்நாள் சண்டையில் 6400 பேரை இழந்த பெர்சிய ராணுவம் பின்வாங்கி கடல் வழியே ஏதென்சு நகருக்கு தென்புறம் நோக்கி நகரத் தொடங்கியது. இப்போது இரண்டு செய்திகள் தலைநகர் ஏதென்சு நகருக்குச் சொல்லப்பட வேண்டும். ஒன்று, மாரத்தான் போர்க்களத்தை வென்ற செய்தி, இரண்டு, பெர்சியப் படைகள் ஏதென்சு நகரை இன்னொருபுறத்திலிருந்து தாக்க முயற்சிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை செய்தி. இச்செய்திகளையும் எடுத்துக் கொண்டு கால்கள் கட்டிப் பறந்தான் பிடிப்பிடெஸ். மாரத்தான் களத்திற்கும் ஏதென்சு நகருக்குமிடையே அவன் கடந்த தூரம் 41.8 கிலோமீட்டர்கள்.

ஸ்பார்ட்டா நகருக்கு இடைவிடாது ஓடித் திரும்பி 452 கிலோமீட்டர்கள் கடந்த களைப்பு, நாள் முழுதும் மாரத்தான் களத்தில் சண்டையிட்ட அயற்சி... ஆயினும் மன உறுதியை வரவழைத்துக் கொண்டு, ஏதென்சு நோக்கி ஓடினான் பிடிப்பிடெஸ். சுமார் 3 மணி நேரத்தில் சென்று சேர்ந்து வெற்றிச் செய்தியை முழங்கியவன் களைப்பினால் சோர்ந்து விழுந்து அங்கே இறுதி மூச்சு விட்டான். ஆனால் பிடிப்பிடெஸ் சொன்ன எச்சரிக்கை செய்தி ஏதென்சு நகரைக் காத்தது. அன்று ஏதென்சு நகரம் பெர்சியாவிடம் விழுந்திருந்தால் ஐரோப்பிய கலாச்சாரம், மக்களாட்சி தத்துவம்-அமைப்பு முறைகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் எழுச்சி ஆகியவை நிகழ்ந்திருக்காது என வரலாற்றுத் திறனாய்வாளர்கள் கூறுவர். அந்த பிடிப்பிடெஸ் என்ற ஒற்றை வீரன் வரலாற்றுத் திருப்புமுனையான நிகழ்வின் நினைவாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டமும் இணைக்கப்பட்டது. வியப்பென்னவென்றால் மாரத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்ட முதல் ஒலிம்பிக்கில் முதல் இடம் வென்றவர் கிரேக்க நாட்டு ஸ்பிரிடன் லூயிஸ் என்ற வீரர்.

பயிற்சி, மன உறுதி, உடற்பலம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகிய விழுமியங்களின் அடையாளம் பிடிப்பிடெஸ். இதே மதிப்பீடுகளை அடியொற்றியே அவனது நினைவாக மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறு சென்னையில் தமிழ் மையம் நடத்திய மாரத்தானும் அவ்வாறானதே.

அன்றைய தினம் அதிகாலை மழையினூடேயும் பல்லாயிரம் மக்கள் கூடி வந்து ஓடினார்கள், குடைபிடிக்க முயல வில்லை, தலைமறைக்க இடமெதையும் தேடவில்லை. வண்ணமயமான ஒன்று கூடலாயும் இருந்தது. பேதங்கள் பலவற்றை சில பொழுதேனும் இந்த ஒன்று கூடல் அறுத்திருந்தது. திருவல்லிக்கேணி வீதியை ஓடிக் கடந்தபின் "அடடா... இப்படி பழமையான கட்டிடங்களெல்லாம் சென்னையில் இருக்கின்றனவா?' என பலர் வியந்திருக்கிறார்கள்.

இந்த ஓட்டத்தினால் பெறப்படும் நிதி கிவ்லைஃப் என்ற அமைப்பினூடாக ஏழை மாணாக்கரின் கல்விக்கு வழங்கப்படும். இப்போது 14,600 பிள்ளைகளை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் இந்தியாவில் அகதி மக்களாய் வாழும் ஈழத்துக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சிறப்புக் கல்வி நிதி யொன்றை கிவ்லைஃப் அமைக்க வேண்டு மென்று இயக்குநர்களை கேட்டுள்ளேன்.

ஈழத்தமிழ் மக்களுடன் இன்று இணைந்து நடக்க விருப்பம் உடையோராய் முன்வருவோர் பிடிப்பிடெஸ் போல மாரத் தான் விழுமியங் களோடு வர வேண்டியுள்ளது. மனஉறுதி, விடாமுயற்சி, நித்திய நம்பிக்கை மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

"மறக்க முடியுமா?' எழுதத் தொடங்கிய நாட்களில் எஸ்.ஜே.இம்மானுவேல் என்ற அருட்தந்தை அவர்களைப் பற்றிக் கூறியிருந் தேனல்லவா? அவரோடு மீண்டும் உரையாடுகிற வாய்ப்புக் கிடைத்தது. வயது இப்போது அவருக்கு 79. பெரிய இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டாலும் ஆறேழு மருந்துப் பெட்டி களுடன் தமிழீழ மக்களின் நீதிக்காக எங்கு வேண்டுமானாலும் மாரத்தான் உறுதியோடு பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மன்ட் டூடு, வாடிகன் திருச்சபை உயர் அதிகாரிகள் என ஓய்வும் சலிப்புமின்றி தன் மக்களுக்காக பலரையும் சந்திக்கிறார்.

"நடந்துவிட்ட நிகழ்வுகள் உங்களை சோர்வுறச் செய்யவில்லையா?' என்று அவரை வினவினேன். ""மிகுந்த வேதனையுறச் செய்தன. ஆனால் சோர்வுறவில்லை. முன்பைவிட இப்போதுதான் நான் மன உறுதியோடும், நீதியின்பால் பசி தாகத்தோடும், நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடும் இயங்க வேண்டி யிருக்கிறது'' என்றார். "திருச்சபையின் மூத்த பணியாளராய் இருந்து கொண்டு தமிழீழ மக்கட்பணி செய்வதில் நிறுவன ரீதியான சிரமங்களை எப்படி சமன் செய்கிறீர்கள்?' என்றேன். அவர் சொன்னார்: ""திருச்சபை எனக்கு வீடு. அது தங்கி, உண்டு, ஓய்வெடுக்க. ஆனால் நான் கடமையாற்ற வேண்டிய களம் வெளியே தான் இருக்கிறது. வயல் வெளியோ, கடற் புறமோ, தொழிற்சாலையோ, அலுவலகமோ -எப்படி எல்லோரும் கடமையாற்ற வெளியே வர வேண்டுமோ அப்படித்தான் நானும். நான் இன்று கடமையாற்றும் களம் தமிழீழ மக்களின் விடுதலை'' என்றார்.

"பிரபாகரன் உயிரோடு இல்லை என நம்புகிறீர்களா?' என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் மறக்க முடியாதது. ""தலைவரது குரல் கேட்காத இந்நாட்களில்தான் அவரது குரல் முன்பைவிட பலகோடி மடங்கு பலம் பெற்றிருக்கிறது. லண்டனுக்கு வந்து பாரும். பாராளுமன்றத்தின் முன் நின்று போராடுகிறவர்களும், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுவதும் பழைய தமிழர்களல்ல. இங்கேயே பிறந்து வளர்ந்து துன்பங்கள் எதையும் அறியாத பிள்ளைகள் தான் இன்று களத்தில் நிற்கிறார்கள். இலங்கைக்குச் சென்று ஆயுதமேந்திப் போராடவும் நாங்கள் தயார் என திடமான உறுதியுடன் முழங்கு கிறார்கள். பிரபாகரனின் முகம் காண வேண்டுமென்ற கட்டாயத்தில் தமிழர்கள் இன்று இல்லை. முகம் காட்டாமலேயே எங்கட சனத்தின் மனங்களை பிரபாகரன் வியாபித்துவிட்டார். குரலெடுத்துப் பேசாமலேயே எங்கட இனத்தின் பயணத்தை இதுவரையில்லா உறுதியுடன் அவர் வழி நடத்து கிறார்'' என்றார்.

"நீங்கள் நிறைய படித்தவர். போப்பாண்டவரின் உயர் அவையிலேயே அறிஞராக இருந்தவர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களால் பேரறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர். உங்களுக்குக் கற்றுத்தர பிரபாகரனிடம் என்ன இருந்தது?' என்று நான் கேட்டு முடிக்குமுன்னரே அவர் சொன்னார்: ""எனது மண்ணையும், எனது மக்களையும், எனது மொழியை யும் நேசிப்பதற்குக் கற்றுத் தந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்'' என்றார்.

"இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் என் இனம் நடக்கிறபோதும் தீமைக்கு என்றும் அஞ்சேன்' என்ற உறுதியோடுதான் நடக்கிறோம். கடவுளிடமும், முடிவற்ற நீதியிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் நாங்கள் நேசித்த தந்தையர் நாடான இந்தியா எங்களை காப்பாற்றும் என இன்றும் நான் நம்புகிறேன்' என்று தொடர்ந்தார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடான எனது உரையாடலில் ""தமிழீழம் அமையும்போது உங்கள் வெளியுறவுக் கொள்கை எப்படியிருக்கும்?'' என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதற்கு அவர் தந்த பதில் நிச்சயம் இந்தியாவின் வெளியுறவு அமைப்பை வியப்புறச் செய்யும்.

(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

No comments: