14 Oct 2009

இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது..?!!



வாழ்வில் நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு.

ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர்.

வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன.

வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி

ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே

சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும்

சீவியம் பெறுவதற்கே -விடுதலை

சீவியம் பெறுவதற்கே! - என்ற தமிழீழ

வானம்பாடி சிட்டு அவர்களின் பாடலை ஒரு கடிதத்தில் அறிமுகம் செய்து என்னை சிலிர்க்கச் செய்தவரும் ம.செ.பேதுருப்பிள்ளை அவர்கள்தான்.

2002-ம் ஆண்டு வன்னிக்கு சென்றிருந்தபோது அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுடன் என்னை வரவேற்க ஓமந்தைக்கு அன்புமிகுதியால் வாழைத்தண்டும் பேழைக்குள் பூமாலை பூட்டி வந்து, ஓமந்தை வீதியில் எனக்கு அதை அணிவித்து கூச்சமுறச் செய்தவர். அன்பு செய்ய மட்டுமே தெரிந்தவர், கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறவர். 

கிளிநொச்சியில் இருந்த தனது குடிலுக்கு என்னை கூட்டிச் சென்று அம்மா- அவரது வாழ்க்கைத் துணை சுட்டுத் தந்த பருத்தித்துறை வடையின் சுவை இப்போதும் என்னால் இனிதே நினைக்க முடிகிறது.

சிங்களமும், ஆங்கிலமும் நன்றாக அறிந்த காரணத்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராயிருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மொழிபெயர்ப்புத் துணையாளராக அமர்த்தப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல என்றபோதும் மிக முக்கியமான கடமைக்கு அவர் நியமிக்கப்பட்ட காரணத்தால் ம.செ.பேதுருப்பிள்ளை என்ற பெயர் மாற்றப்பட்டு ஜார்ஜ் என்ற பெயர் தரப்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தை களின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பல்வேறு நாடு களுக்கும் சென்று வந்த ஜார்ஜ் மாஸ்டர்தான் வேரித்தாஸ் வானொலியில் என் நிறைவு நாட்களில் ""தந்தை போல் ஆனவருக்கு...'' என விளித்து நான் கடிதங்கள் எழுதிய ம.செ. பேதுருப்பிள்ளை. மனைவி மாசறு பொன், வலம்புரி முத்து, எப்போதும் புன்சிரிக்கும் இறையருள் வசந்தம், கட்டுக்கோப்பான சிவபக்தை. இவரோ கத்தோலிக்க கிறித்தவர். அன்றில் பறவைகள் போல் ஆண்டாண்டு காலம் அன்பில் ஒன்றி வாழ்ந்த இவர்களின் இல்லற ஒழுக்கம் ஒளி நிறைந்தது.

முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின் தொடக்க நாட்களில் இலங்கை ராணுவம் தங்களிடம் புலிகளின் முக்கிய இரு அரசியற் தலைவர்கள் வந்து சரணடைந்ததாக உலகிற்குப் பிரச்சாரக் கடை விரித்ததை நீங்கள் பின்னோக்கிப் பார்த்தீர்களென்றால் நினைவுபடுத்த முடியும் -பலவீனமுற்ற நிலையில் இரு வயோதிக மனிதர்கள் -வதனத்தில் வியாகுலம் பதிந்தவர்களாய் உலக ஒளி ஊடகங்களில் உலாவரப்படுத்தப்பட்டார்கள். ஒருவர் தயா மாஸ்டர், இன்னொருவர் ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் ம.செ. பேதுருப்பிள்ளை.


தொலைக்காட்சியில் அவரது முகம் கண்ட அந்நாளில் என் மனம் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன். புலிகள் இயக்கத்திற்குள் பிளவு வந்துவிட்டது. தலைமையின் மேல் மூத்த தலைவர்கள், தளபதிகள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதாக இந்த இருவரையும் காட்டி இலங்கை ராணுவம் பரப்புரை செய்தது. தமிழுலகமும் இவர்களை "கோழைகள்' "துரோகிகள்' என்பதாகப் பார்த்து முத்திரை பதிக்க முற்பட்டது.

என் மனமோ ஒத்துக்கொள்ள மறுத்தது. என்றேனும் மெய்ப்பொருள் அறிந்தே தீர வேண்டுமென உறுதி கொண்டது. வாழ்வில் என் ஆதார நம்பிக்கைகளில் ஒன்று இது. முன்பே கூட எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுது கிறேன்: ""பொய்மையின் பயணம் வேகமானது. உண்மையின் பயணமோ மெதுவானது, காயங்கள் நிறைந்தது. ஆனால் உறுதியானது. என்றேனும் ஒருநாள் பொய்மையின் குப்பைமேடுகளினின்று உண்மை உயிர்த்தெழும்''.

தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் பேதுருப்பிள்ளையும் இலங்கை ராணுவம் காட்ட விரும்பியது போல் கோழைகளாகவோ, துரோகிகளாகவோ நிச்சயம் இருக்க மாட்டார்கள் என நம்பியவனாய் இறுதி யுத்தத்தைப் பார்த்தவர்கள், களத்தின் நம்பகமான செய்திகளுக் குரியவர்கள் என என் தொடர்புக்கு வந்தோர் எல்லோரிடத்தும் உண்மையில் தயா மாஸ்டருக்கும், ஜார்ஜ் மாஸ்ட ருக்கும் என்ன நடந்ததென்று விசாரித்து வந் தேன். விடாத, விட விரும்பாத, விடாப்பிடியான என் ஐந்து மாத கால தேடலுக்கு விடை கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கிடைத்தது.

அதுவும் முதுமலை கார்குடி காட்டுப் பகுதியில் வாரணங்களும் மான் கூட்டங்களும் இரு நண்பர்களோடு கண்டு பாரதியின் வியனுலகை அமுதென நுகரும் அனுபவம் வாங்கி நின்ற பனிவிழும் நள்ளிரவொன்றில் அந்த உண்மை கிடைத்தது. காடுகளுக்குள் அச்சம் அறுத்து விட்டேத்தியாய் சுற்றித் திரிவதுபோலொரு விடுதலைச் சுகம் உலகில் வேறில்லை.

தயா மாஸ்டரும் ஜார்ஜ் மாஸ்டரும் சரண டைந்துவிட்டதாக உலகிற்குச் சொல்லப்பட்ட அந்நாளில் உண்மையில் நடந்தது இதுதான்:

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நிலப் பகுதியை அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத் தீவுக்குச் செல்வதானால் மாத்தளன், பொக்கணை, வலையர்மடம், கள்ளப்பாடு, முள்ளிவாய்க்கால் பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இருமுறை இவ்வழி யில் நானும் பயணப்பட்டிருக்கிறேன். மொத்தம் சுமார் இரண்டு கி.மீ. தூரம் இருக்கலாம் என நினைக்கிறேன். ஆடு, மாடுகளைப்போல் நான்கு லட்சம் தமிழர்களும் அடித்து விரட்டிக் கூட்டப்பட்டது இப்பகுதிகளில்தான்.

ஜார்ஜ், தயா மாஸ்டர்கள் ஆயுதம் தரித்த களப்போராளிகள் அல்ல, அரசியல் பிரிவில் இருந்தவர்கள். வேறு பணிகள் செய்கிற உடல் வலுவும் இல்லாதவர்கள். மக்களோடு மக்களாய் மாத்தளன் அடைக்கலமாதா ஆலயம் பகுதியில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் முல்லைத் தீவு சாலை கடற்கரை பரப்பிலிருந்து நகர்ந்த இலங்கை ராணுவம் மாத்தளன் பகுதியை ஊடறுத்து அச்சிறு நிலப்பரப்பையும் மக்களையும் இரு பிரிவுகளாய் துண்டாட இவர்களும் சுமார் 300 பொதுமக்களும் தீவுபோல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மாத்தளன் பகுதியில் நின்றிருந்த போராளிகள் உறுதியுடன் களமாடி வீரமரணம் தழுவ, கழுத்தில் சயனைடு குப்பி அணியாத அரசியல் பிரிவின் தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும் மக்களோடு மக்களாய் நின்று ராணுவ கட்டுப்பாட்டு நிலைக்கு தங்களை ஒப்படைத் திருக்கிறார்கள். கோழைத்தனம் என்ப திலும் ஓர் தந்திரோபாயமான முடிவு என்ற மன நிலையில்தான் அவர்கள் அம்முடிவை எடுத்ததாக அருகிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனில் தொலைக்காட்சிகளில் விடுதலைப் போராட் டத்தின்மேல் நம்பிக்கையிழந்த தொனியில் அவர்கள் பேசிட காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். குரூர வெறியோடு ரத்தக்குளியல் நடத்திக்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் கையில் பிடிபட்ட இரண்டு வயோதிபத் தமிழர்களின் நிலையை நாம் உள்ளார்ந்த, நேசம் தோய்ந்த புரிந்துணர்வோடே பார்க்கவேண்டுமென நினைக்கிறேன். 

விரிவாக இதனை இங்கு நான் எழுதத் தலைப்படு வதற்குக் காரணம் உண்மையை, உண்மையானவர்களை வரலாறு நிச்சயம் ஒருநாள் விடுவிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும், போலிகள்-பொய்யானவர்கள் ஒன்றேல் வெளிப்படுத்தப்படுவார்கள் அல்லது அற்பப் பதர்கள்போல் காலவீதியில் பரிதாபமாக விழுந்து கிடப்பார்கள் என்பதை வலியுறுத்திப் பதிவு செய்யவுமே.

போர்க்களத்தில் தமிழர்களை தோற்கடித்தவர்கள் களத்தில் சிந்தப்பட்ட தூய குருதியையும் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். உணர்வாளர்கள் என பிடரி சிலிர்த்துத் திரிகிறவர்களைச் சுற்றியே பல ஊடுருவல்கள் நிகழ்கின்றன. நீதிக்கான தேடலிலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பி சலிப்புறச் செய்யும் திட்டத்தோடு தவறான செய்திகளை பரபபுகின்றார்கள். அவற்றுள் ஒன்று, கடற்புலித் தளபதி சூசை என்ன ஆனார்? பிடிபட்ட அவரது குடும்பத்தாரை இலங்கை அரசு நன்றாகப் பராமரிக்கிறது. அவர் துரோகியாக இருக்கக்கூடும்'' என்பது போன்ற கேவலமான ஓர் பிரச்சாரத்தை உளவு அமைப்புகள் உலவ விட்டன. உண்மைக்கான தேடலுக்கு இறையருளே பதில் தந்ததால் கடந்த புதன் கடிதமொன்று வந்தது. பெயர் இல்லை இலங்கை திரிகோணமலையிலிருந்து தபால் செய்யப்பட்டிருந்தது.

கொண்ட இலட்சியம்

குன்றிடாத தங்களின்

கொள்கை வீரரின்

காலடி மண்ணிலே

நின்று கொண்டொரு

போர்க்கொடி தூக்குவோம்

நிச்சயம் தமிழீழம் காணுவோம்!

-என்ற வரிகளோடு நிறைவு செய்யப்பட்டிருந்த அந்த ஏழு பக்கக் கடிதத்தை எழுதியிருந்தவர் கடைசிவரை களத்தில் நின்ற ஓர் போராளி. கடற்தளபதி மாவீரன் சூசை அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மை விபரங்கள் சுமந்த அக்கடிதம் வரும் இதழில்.

(நினைவுகள் சுழலும்)



நன்றி நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

No comments: