25 Jan 2010

ஆயிரத்தில் ஒருவனும் நாமும்


சினிமா விமர்சனம்

என்பதற்குள் நான் அதிகம் நுழைந்து கொள்வதில்லை. நான், அதற்கும் எனக்கும் இடையில் எப்போதும் ஒரு இடைவெளியை வைத்திருக்கவே விரும்புகிறேன் . காரணம் அது பலருடைய பணத்தினால் முதலீடு செய்யப்பட்டு பலருடைய வியர்வையை கூலியாக கொட்டி பல இரவு பகல்கள் கடிண உழைப்பினால் உருவான ஒரு கலை அடையாளம். எங்கே அதை பற்றி நான் எழுதுவது ஒருவனுடைய உழைப்பை குறை கூறுவதாகி விடுமோ என்ற எண்ணத்தால் தான் நான் அதை ஒதுக்குவதே.

ஆனால் இன்று இங்கே ஒரு கட்டுரையை படித்த பின்னர் நிச்சயம் நான் இதை எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது. அது நிச்சயம் அந்த படைப்பை குறை கூறுவதாக இல்லாமல் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் என்ற ஒரு அர்த்ததுள் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன் . அது தற்போது இந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படைப்பின் பின்னால் ஈழத்தமிழர்களது போராட்டமும் அதை சார்ந்தே இந்த திரைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதான ஒரு கருத்தோட்டம் இங்கே பலர் மத்தியில் எழுவதனால் நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறேன்.

- ஆயிரத்தில் ஒருவன் -


நிச்சயம் தமிழ் சினிமாவினை ஒரு அடுத்த நிலைக்குள் துாக்கி சென்ற ஒரு அற்புதமான கலை அடையாளம் என்பதில் எனக்கு எவ்விதத்திலும் எதிர்கருத்து கிடையாது. செல்வராகவனின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து வருகிறேன் .
( துள்ளுவதோ இளமை பார்க்க முடிந்தது என்னவோ புலத்தில் தான் என்பது வேறு கதை ) நிச்சயம் அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் தான். அதுவும் இந்த ஆயிரத்தில் ஒருவனின் பின்னால் முற்றிலும் அவரே ஒரு ஆயிரத்தில் ஒருவனாகி இருப்பது உண்மையே. இருந்தும் திரும்பத் திரும்ப செல்வராகவன் பற்றியோ அவரது படைப்புகளை பற்றியோ விமர்சனம் செய்வதை தவிர்த்து நேராகவே விடையத்துக்கு வருகிறேன்.

அந்த 1000 இல் ஒருவன் நிச்சயம் செல்வராகவனுக்குள் இருந்த ஒரு மேலைத்தேய சினிமா படைப்புகளுக்கும் ரசிகர்களான நமக்கும் இடையேயான ஒரு ஈர்ப்பின் பால் அதையும் தாண்டி இளம் ரசிகர்கள் செய்யும் கேலிகளுக்கும் நகைப்புகளுக்கும் ஒரு பதில்அடியாகவே அவரால் உறுவாக்கப்ட்டிருக்கலாம் என்பது எனது ஊகம். ஏனெனில் நாம் அனைவருமே எப்போதும் எந்த ஒரு பிரமாண்ட சினிமா வெளிவரும் போது அதை மேற்குலக சினிமா படைப்புகளுடன் ஒப்பிட்டு நகைப்பதையும் அதையும் தாண்டி அந்த படைப்பை நையாண்டி செய்வதையும் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளோம். அப்படியான ஒரு வட்டத்திற்குள் நிற்கும் எம்மை தமிழ் படைப்பாளிகளாலும் மேலைத்தேய சினிமாக்கு நிகரான பிரமாண்ட படங்களை உறுவாக்க முடியும் எமக்குள்ளும் அப்படிப்பட்ட கலைஞர்கள் உள்ளார்கள் என்று எடுத்துக்காட்டவும் அதை ஒரு பரீட்சை களமாக தனக்குள் எடுத்துக் கொண்டு பெரிய ஒரு முதலீட்டுடன் ஒரு புதிய களத்தை திறந்து வைத்துள்ளார் என்பது மறைக்கப்பட முடியாத உண்மை.
( இதற்கு பின்னாலும் இப்படியான ஒரு முயற்சி இருக்குமா என்பது இதன் வருமானத்தை பொருத்தே தங்கியுள்ளது என்பது வேறு கதை ) .
இந்த பரீட்சையில் நிச்சயம் இவரை சித்தியடைய வைப்பது நம் ஒவ்வொருவரது கரங்களிலும் உள்ளது. அதற்கு அவர் தான் ஒரு தமிழ் இயக்குனராக இருந்து தமிழர்களது வரலாற்று சம்பவங்களில் தமிழரது பொற்காலம் என சொல்லப்படும் சோழர் காலத்து வீழ்ச்சி யின் பின்னரான ஒரு கதை கருவை எடுத்து கொண்டார் என்பது தான் இங்கு தமிழர்களான எம்மால் பாராட்டப்பட வேண்டிய விடையம். சோழரது வீழ்ச்சியும் பாண்டியர் வருகையும் என்ற ஒரு வரலாற்று திருப்பத்தில் நின்று கடல் கடந்த சோழர்களது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அங்கு ஒரு கற்பனைக் கதை களத்தை திறந்து விட்டுள்ளார்.
( இப்படியான ஒரு கற்பனை கதை அம்சம் தான் “ mummy returns ” மற்றும் “ timeline ” என்ற திரைக்களமும்) .
ஆனால் இவற்றை ஒட்டியே இவர் இதை எடு்த்துள்ளார் என்றால் இல்லை என்பதே எனது பதிலும். மேற்குலக சினிமா அவர்களது வரலாற்று கதையை பின்னனியாக கொள்ள ஒரு தமிழ் இயக்குனராக இவர் தமிழரது வரலாற்று கதை களத்தை எடுத்துள்ளார் என்பது தான் ஒற்றுமை.

அதையும் தாண்டி நாம் இதை ஈழத்தமிழர்களை தான் செல்வராகவன் தனது படைப்பில் அடையாளப்படுத்தி உள்ளார் என்பதும் ஈழத்து வலிகளை தான் அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதும் உண்மை என்று நமக்குள் நாமே ஒரு விமர்சனம் செய்வது நம்மை நாமே சிறுமைப்படுத்தி கொள்வதற்கு சமன்.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே அது மிகத் தெளிவாக சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையேயான ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்பதும் அங்கு அந்த கதைக்களம் அதை பின்னனியாக கொண்டு கற்பனைக்குள் பயனிப்பதாகவும் தெளிவாகவே சுட்டிக்காட்டப்படும் போது நாம் நம்மை இவ்வளவு துாரம் தாழ்த்தி கொள்கிறோம் என்பது தான் இங்கு வேடிக்கையாக உள்ளது.

பலரது விமர்சனங்களுக்கும் காரணமான அந்த இடைவேளையை கடந்து நகரும் கதைக்களம் ஏதோ வன்னி வாழ் மக்களையும் அவர்களது இறுதி யுத்தகளமுமே என்று நீ்ங்களே உங்களுக்குள் கற்பனை செய்துகொண்டு ஏதோ மாய உலகத்துள் கட்டுண்டு அந்த படத்தை பார்க்கும் போது அது உங்கள் மனத்திரையில் அப்படியான ஒரு எண்ணப்பதிவை விதைப்பதை உங்களால் தவிர்க்கமுடியாததே. சரி நீங்கள் சொல்வதாகவே அது அப்படியாக இருக்குமானால் அங்கு பார்த்தீபன் கதாப்பாத்திரமும் அவரை சூழ்ந்து நடக்கும் காட்சிகளும்
( பற்றாக்குறைக்கு ரீமாசென் சோனியா என்ற முத்திரை வேறு. என்ன கொடுமை இது )
யாரை குறிப்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ளுகிறீர்கள் ???? சொல்லுங்கள் ??
( இல்லை அதை விதிவிலக்காக விட்டு விட்டீர்களா ?)
அந்த இறுதிக் களம் கடற்கரை பகுதியில் நடப்பதாகவும் அங்கு காப்பாற்றப்பட்ட சோழ இளவரசன் தளபதியின் துணையுடன் காட்டுக்குள் போவதும் மீண்டும் சோழர்கள் வருவார்கள் என்பதும் மக்கள் கடற்கரையில் கப்பலை எதிர்பார்த்து காத்திருப்பது என்பதும் என்றும் அந்த முள்ளிவாய்க்கால் சம்பவத்துடன் இதை ஒப்பிடுகிறீர்களா...????????????????????
( உங்களை எப்படிச் சொல்லித் திட்டுவது என்று எண்ணுகிறேன்) .

இப்படியான மிகவும் கீழ்த்தரமான சிந்தனை எப்படி உங்கள் மனங்களில் எழுகின்றன என்பது தான் எனது கேள்வி.

ஈழப்போரில் அந்த முள்ளிவாய்க்கால் களத்தில் இருந்த சாட்சிகள் இன்னும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் போது அவர்கள் பட்ட துன்பங்களை நீங்கள் இப்படி ஒரு 3 மணிநேர சினிமாவுக்குள் ஒப்பிடுவது எப்படிப்பட்டது என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். தயவு செய்து இனிமேலும் ஒரு சினிமாவை சினிமா என்ற ஒரு வட்டத்தை தாண்டி உங்கள் வாழ்க்கையுடன் அதுவும் ஈழத்தமிழர்களது வாழ்க்கையுடன் ஒப்பிடாதீர்கள்.
ஏற்கனவே - தம்பி - கன்னத்தில் முத்தமிட்டால் - என்று நீங்கள் பட்ட அனுபவங்களை தாண்டியும் இன்று ஒரு ஆயிரத்தில் ஒருவனும் கேக்கிறதா உங்களுக்கு ??

ஈழத்து அனுபவங்களை நிச்சயம் ஈழத்துக்குள் இருக்கும் ஒரு படைப்பாளியால் அன்றி அதை வேறு யாராலும் அவ்வளவு இலகுவில் படைப்புக்குள் கொண்டு வந்து விடமுடியாது என்பது தான் உண்மையே. அப்படி உங்களுக்கு ஒரு ஆசை , வேட்கை இருக்குமானால் அதை அப்படியே உங்கள் முயற்சியால் ( விமர்சனம் செய்பவர்கள் தயவு செய்து முயற்சிக்காதீர்கள் ) நீங்களே பதிவு செய்ய முற்படுங்கள். அதை விட்டு இந்திய தணிக்கை குழுக்களை தாண்டி , இந்திய அதிகார வர்க்கத்தை தாண்டி , அந்த வர்த்தக மோகத்தை தாண்டி , அந்த சீர்கெட்டு போகும் கலாச்சார வட்டத்துக்குள் நின்று ஒரு கலைஞனால் இந்த ஈழத்தமிழர்களது அவலங்களை அவலங்களாகவோ, காட்சிகளாகவோ, ஒரு கலை இலக்கிய படைப்பாகவோ வெளிக்கொணர முடியாது என்பது தான் இங்கு உண்மை. பதிவு செய்ய வேண்டும் என்ற தாக்கம் அங்கு அதிகமாகவே பல படைப்பாளிகள் மத்தியில் உள்ளது என்பது வேறு, ஆனால் அதற்கான உகந்த சூழல் இல்லை என்பதும் உண்மை தானே.

எனவே தயவுசெய்து இனிமேலும் இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஒப்பீடுகளை தவிர்த்துக் கொண்டு சினிமா என்ற வட்டத்துள் நின்று அதை அதன் வட்டத்துள் விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
உங்கள் விமர்சனங்களால் நொந்து போன
- து.தயாளன்-

1 comment:

தயாஜி வெள்ளைரோஜா said...

அற்புதம் நண்பா....