11 Mar 2010

என்னையும் தாக்கியது இந்த காதல்..

மூடிக் கிடந்த மனக்கதவை
தட்டி திறக்கச் சொன்னது - என்னை
நீ தாண்டிப் போன நிமிடங்கள்,

திறந்து கொண்டதும் நான்
உணர்ந்து கொண்டேன்
காதல்...
என்னையும் காதலித்தது என்று

மை ஊற்று பேனா கொண்டு
ஓவியமாக உனை வரைந்தேன்
கிறுக்கல்களை மிஞ்சி - உன்
சிரிப்புகளில் அடங்கி போனேன்

ஒற்றை வரியில் நீ சிரித்து பார்
ஆயிரம் வரிகளில் நான்
கவிதை வடித்து காட்டுகிறேன்.

நட்பென்ற வார்த்தையில் நாம்
நாகரீகம் செய்தோம்
நாவுக்குள் காதலை மறைத்து கொண்டே

வார்த்தைகளை மறுத்த உன் நாவிற்கு
விழிகளை மூட தெரியவி்ல்லையே
அதையும் சேர்த்தே மூடச் சொல்
காட்டிக் கொடுக்கிறதே அங்கே
உன் புன்னகை போல்.

தீண்டலில் பிறப்பதல்ல காதல் - அது
உன் சிரிப்பு என்னும் துாண்டலில்
பிறந்தது எனக்கு

எட்டியே நின்று நீ காதல் செய் - நான்
உனை தொட்டுவிடும் வரிகளில்
கவிதை செய்கிறேன் இங்கு..,

அசைவுகளையும் அலங்காரங்களையும்
அடகு வைத்து விட்டு என்னிடம்
அன்பை மட்டுமே அள்ளி அள்ளி தந்தாய்
அன்பை பெற்றவன்
அதையே திருப்பி தருகிறேன்
மறுக்கிறேன் என்கிறாயே..
எப்படி...??

உனக்காகவே மூடி வைத்தேன்
எனக்கான மறு பக்கத்தை
மறந்தும் திறக்கச் சொல்லாதே
பாதிக்கப்படுவது நம் காதல் ஒன்று தான்

எண்ணங்களின் துாரம் இங்கே - பல
எல்லைகளை தாண்டும் என்று
உன்னோடு பேசும் நொடிகளில்
நான் உணர்ந்து கொண்டேன்
இருந்தும்
உன் மௌனம் ஒன்று தான்
புரியவில்லை..

“ ஓம் ” என்ற ஒற்றை வார்த்தை சொல்லிப் பார்
வாழ்க்கையின் ஓரம் வரை கூட வருவேன்

உனை பிரிந்திருக்கும் இந்த நொடிகள்
உன்னை அடையாளம் காட்டியது
அதனால் தான் என்னவோ இன்னும்
ரசிக்கிறேன் அதை நான்..

காத்திருந்து பார்த்து தான்
காதலிப்பது என்றிருந்தால்
உனக்காக காத்திருக்கிறேன்
எப்போதும் இங்கே..

இன்று நாம் பிரிந்தவர்களாக இருக்கலாம்
உலகம் மிகவும் சிறியது - அது
உள்ளங் கை அளவு என்கிறேன்
பலமுறை உணர்ந்து தெளிந்தவன் என்பதால்

மீண்டும் எங்கோ ஒரு மூலையில்
நீயும் நானும் சந்தித்து கொள்வோம்
அப்போது..

வார்த்தைகள் பேச மறுத்த பலவற்றை
கண்ணீருடன் பேசிக்கொள்வோம்
அதற்காகவேனும், இன்று....
பிரிந்தவர்களாகவே இருப்போம்.

No comments: