26 Feb 2010

தாய்மை

“ பெண் ”அவள் “ பேரழகி ” அவள்
“ நிலவு ” அவள் “ நெருப்பு ” அவள்
“ பூ ” அவள் “ புயல் ” அவள்,

பல நுாறு வர்ணனை வைத்தார்
பருவத்தில் என்னை என் - தோற்றத்தில்
மயில் தோகையில் வைத்தார் அன்று.

காலத்தை தாண்டி நான் ஓருநாள் ,

கை பிடித்தேன் , பிடித்தவனை
என் கட்டிலில் அணைத்தேன்,
என் இதயத்தை கொடுத்து
அவன் உதிரத்தை ஏற்றேன்.
ஒர் துளி வடிவில் ஓர் உயிராக வந்தாய்,
வந்து என் கருவறை சேர்ந்தாய்.

தொன்னுாறு நாள் கடந்து - என்
தோற்றத்தில் சொன்னாய்,
“  பெண் ” என்ற என்னை
“ தாய் ” என்று  அன்று.
ஆயிரம் வர்ணனைகளும்
அரைநொடியில் தோற்றது - நீ என்னை
“ தாய் ” என்ற போது.

என்னுள்ளே நீ வந்த நாள் தொட்டு
எனை மாற்றிக் கொண்டேன்
நாளாக நாளாக ,
என் நடை மாற்றிக் கொண்டேன்
அடி வயிற்றில் ஒர் வலி கூட
அதிசயம் இருந்தது.

இனிப்புக்கும் கசப்பிற்கும்
இடைவெளி மறந்தது
பார்க்கும் பொருள் எல்லாம்
பாசத்தை சொன்னது
கேட்கும் இசைகூட
உன் விருப்பம் கேட்டது

நீ வரும் நாள் பார்த்தே
நாட்காட்டி நகர்ந்தது - என்
நாட்களும் நகர்நதது.

உலகமே எனக்குள்ளே உருள் வதாய்
உன் உருளல்கள் சொன்னது,
உன் உதைப்புகள் சொன்னது.
“பாரம்மா பாராம்மா” என்று நீ
பாடி ஆடும் ஆட்டம்
நான் மட்டும் அறிந்தது,
நயமாக இருந்தது.

உனக்கான மூச்சை நான் வாங்க
எனக்கான இதயமாய நீ துடித்தாய்
அங்கே ,
எனக்குள்ளே நீ இருந்து
எனை நீ இயக்கியது
யாரும் அறியாதது
நீ மட்டும் அறிந்தது.

“ தாய் ” என்று நீ அழைத்தாய்
எனை இயக்கும் தாயாக நீ மாறி,
என் தாய் நீ என்பதால் - அங்கே
“ சேய் ” ஆகிப் போனேன் நான்.
உலகமே உனைப் பார்த்து
 “ சேய் ” என்ற போது
நான் மட்டும் சிரிப்பேன் - இது
நீ மட்டும் அறிந்தது.

முன்னுாறு நாள் கடந்து
முன்னுாறு வலி சுமந்து
கண்ணே ,
நான் உன்னை
உந்தி தள்ளிய போது.......

உயிர், வலி அறியவில்லை..!!!
விழி கூட அழ விரும்பவில்லை..!!
இருந்தும்,
கண்ணில் நீர் கசிய
உயிர் நரம்பறுத்து..,
என் உலகமே இருண்டது.,!!

“ நான் ” என்ற ஒன்று - அங்கே
“ நீ ” ஆக வந்தாய் - மறு கணமே
தொப்புள்க்கொடி அறுத்து
இருவேறு உலகானோம்.,

அங்கே,
வெட்டப்பட்டது வெரும் தசை பிண்டமென்று
நீ என் முளை தொட்டு உதிரம் வாங்கிச் சொன்னாய்.
மீண்டும்
நாம் இருவரும்
ஒர் உலகானோம்.
நான் “ சேய் ” ஆனேன் - நீ ,
எனை இயக்கும் “ தாய் ”ஆனாய்.
எனக்கு “ தாய்மை ” நீ தந்தது .


ஒரு சில நொடிகள் ஒரு பெண்ணாக உருவகித்து தாய்மையை உணர்ந்தேன். உயிர்கொடுத்தேன் உணர்வுகளுக்கு.கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

உங்களது கவிதைகளில் சிறந்த ஒன்று இது ! வாழ்த்துக்கள்!