28 Apr 2010

அன்புள்ள பனைக்கு..


ஊருக்குள்ள பல கதைகள்
உசுரோட 
புதைஞ்சு கிடக்கு
எதை வைச்சு 
உன் கதை சொல்ல
எடுத்து கொடுக்க 
இங்க யாரும்
உசிரோட இப்ப இல்ல..,

வடுக்களை தாங்கும் நீயும்
வலிகளை தாங்கும் நானும்
நிஜத்தில ஒன்டாய் 
இன்னும் என்ட
நினைவில் இருக்கு..!!!

இருப்பத கொடுத்தே 
நீ என்ட 
உறவினை காத்தாய்
“ காட்சிகளாய் நீ இருக்க
சாட்சிகளாய் நான் இருக்கன் ”

வந்தவன் போனவன் எல்லாம்
உன்னை பாடைல கட்டிட்டு போக
பாதி வாழ்வும் உனக்கு எனக்கும்
பங்கருக்க தான் கழிஞ்சு போச்சு

ஈராயிரம் ஆண்டில
* இரண்டு நுாறு ஆயிரம் என்டு
ஊருக்குள்ள பல விளம்பரம்
போட்டு வைச்சு 
பாத்திட்டு இருந்தம்

பாத்திட்டே தான் இருந்தம்
பகை வந்து அங்க உன்னை
பாடைல கட்டிட்டு போச்சே
எப்ப வருவீர் என்டு
நீ எனை பாத்து கேட்ட கதை
இன்னும் என்ட காதுக்க 
கேட்டு கொண்டே தான் இருக்கு

வருவம் வருவம் என்டே
இப்ப பல வருசம் 
தாண்டியாச்சு
பகை தாண்டி இப்ப உங்க
படலைக்கையும் வந்தாச்சு

இன்னும் என்னை நீ
எதிர் பாத்து காத்திருக்க
உனை பாக்க நானும்
எதிர் பாத்து காத்திருக்கன்

விடியும் விடியும் என்று இப்ப
விடைய சொல்லிட்டு போயிடுவன்
விடியும் போது நாளை
நீ இருப்பியா என்டே
எனக்கு தெரியாது 

உனை காக்க இப்ப அங்க
யாருக்குமே நேரமில்ல
எனை காக்க இப்ப இங்க 
எனக்கும் வேறு யாருமில்ல

உன்னை நீயே பாத்துக்க
என்னை நானே பாத்துகிறன்
இப்போதைக்கு இது தான் முடிவு
உனக்கும் எனக்கு் ஏற்ற முடிவு























* இரண்டு நுாறு ஆயிரம் = இரண்டு இலட்சம்
( 95 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 2000 ஆண்டில் இரண்டு இலட்சம் பனை வளர்ப்போம் என்று ஒர் திட்டம் அமுல்படுத்த பட்டிருந்தது, ஆனால் 95 யுத்த சூழலால் அது முற்றாகவே முடக்கப்பட்டு விடப்பட்டது )

No comments: