15 May 2010

உண்மைக் கதைகள்

நேற்று வரை உறவுகளாய் இருந்து
நிஜங்களாய் வாழ்ந்து வந்த
உறவுகளின் நினைவு நாள்
நெருப்பாய் சுடுகிறது.

விழி முன் விரிந்து பரவும்
விம்பத்தின் தாடிகளுள்
மறைந்து வாழும்
உண்மைக் கதைகள்.
நாட்குறிப்பின் தாள்களில்
நிஜங்களின் நினைவுகளாய்
நான் மட்டும் அறிந்த
உண்மைக் கதைகள்.
உயிர் கொடுத்து உறவாக்கி
புகைப் படங்களாய் உருமாறி
எனக்குள் புதைந்து  போன
உண்மைக் கதைகள்.
காட்சிக்குள் அடங்காத
சாட்சிகளே அற்றுப் போய்
உயிருக்குள் கலந்து விட்ட
உண்மைக் கதைகள்.

வரிகளுக்குள் எழுதி வைத்து
வார்த்தைகளால் அழுது முடித்து
நாட்களை எண்ணிக் கொண்டே
நான் இங்கே வாழ்ந்து போகிறேன்.
ஊமைகளாய் இருந்து விட
உணர்வுகள் மரிக்க வில்லை
உயிர் மீதி உள்ள வரை
உணர்வுகளுக்கு மரணமில்லை.

தாயாய் ஒர் தந்தையாய்
பாசத்தில் அண்ணாய்
தோள் கொடுத்த தோழனாய்
எத்தனை பிறப்பெடுத்தேன்
ஒருவனாய் உங்களுக்குள்,
வாழும் ஆசையுடன்
வாசலிலே கோலமிட்டேன்
கோலங்கள் காயும் முன்னர்
அதன் கோலங்கள் கலைந்ததன்று.

நெருப்பெடுத்து வந்த பகை
நிஜங்களை பொசுக்கி விட
நான் அறிந்த பல கதைகள்
நினைவுகளாய் ஆனதன்று.
காத்திருந்து கணக்கு முடித்து
காலனுக்கு துாதுவிட
எரிந்து போன சிதைகளுக்குள்
எழுந்து நிற்பேன் உறவுகளே.

No comments: