13 Aug 2010

செம்மண்ணில் ஒரு செஞ்சோலை...

செவ்வரத்தை பூக்கும் எம் மண்
செங்குருதியால் சிதறிக்கிடந்தது,
பூக்களும் பிஞ்சுகளுமாய்
கருகிப் போனதெம் 
அழகிய தோட்டம் !
வானேறி வந்து நீ
எம் வம்சம் அழிக்க
முடிவு செய்தாய்
எத்தனை துணிவிருக்கும்
உன் எண்ணத்தில்,
பார்த்துக் கொண்டு
நாம் என்ன
பாடை சுமப்போம்
என்று மட்டும் எண்ணினாயா..!!!!
போட்ட குண்டு பூமி தொட்டதும்..
பூக்கள் அங்கே கருகி மாண்டதும்..
ஒற்றைச் செய்தியாக.,
புயல்களை அடக்கி
அங்கே
உள்ளங்களில் பூக்கள் துாவியதாய்
மேடை போட்டு நீ மேதாவி ஆனாய்.
காட்சிகளும் சாட்சிகளுமாய்
பக்கம் பக்கமாய் கண்ணீராய்
நாம் கொடுத்தும்
கண்மூடிக் கிடந்ததே உலகு..

என்ன உலகமடா என்று
எள்ளவும் நினையாமல்,
உள்ளம் முழுதும்
உறுதியை துாவி
காட்டாற்று வெள்ளம் என
ஓர் அணி
படைகொண்டு எழுந்தது.
விடுதலை வேண்டும் பூமியது,
வீரத்தை மட்டுமே விதைத்தோம்.
கண்ணீரை காட்டி
நாம் என்ன,
பன்னீரா கேட்டோம்
குடிப்பதற்கு.
செந்நீரைப் பாய்ச்சி அங்கே,
செம்மண்ணில் தோட்டம் செய்தோம்.
விளைச்சல் மட்டும் என்ன
வெங்காயமா வரும் !!

கனவு கண்ட நீ,
கண்கள் திறக்கும் முன்னமே
கரு வேங்கைகள் உன்
கண்ணுக்குள் விரல் விட்ட கதை
நீ மறைத்தாலும்
வரலாறு மறக்காது.
சிங்கத்தின் குகைக்குள்
சிறுத்தைகளின் கும்மாளம் கண்டு
சினம் கொண்ட வல்லுாறுகள் இங்கே
பொல்லாத கதைகள் சொல்லி
புலிகளையே அழித்த செய்தி
இன்று எம் முன்னே..

நீ புலிகளை அழிக்கலாம் !!
எம் பூக்களை எரிக்கலாம் !!
ஆனால்,...
சுடர் விட்டெரியும்
விடுதலையை அணைக்க முடியாது.
அடக்க அடக்க
அடங்கிப் போகும்
இனமல்ல நாம்,
முடக்க முடக்க
முடங்கி போபவர்களும் அல்ல,
முட்களுள் இருந்தாலும்...
முள் வேலிக்குள் இருந்தாலும்..
மூச்சுக்கு முன்னுாறு முறை
விடுதலையை மட்டும்
சுவாசிக்க விரும்புபவர்கள்.
நினைவில் வை..

காலங்களின் போக்கில்
இன்னும் காட்சிகள் மாறும்,
கணக்கில் வை,...
விடுதலை மூச்சு
அடங்கி போனதாய்
வரலாற்றில் எங்கேனும்
ஓர் பக்கத்தில் இல்லை
நாம் மட்டும் என்ன
விதிவிலக்க ,..!!!
போராடி தோற்றோமே ஒழியே
போராடத் தயங்கவில்லை,
இன்னும் இங்கே
பூக்கள் பூக்க வில்லை,,
புயல்களுக்கான அமைதி ஒன்றே
கோலமிட்டு கிடக்கிறது,
புரிந்து கொள்வாய் சீக்கிரமே.

No comments: