11 Aug 2010

முடிந்து போன என் மரணம்

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று
மரணத்தின் வாசலில்
பிறந்தவன் இவன்

தாய் மடி தவழ்ந்ததும்
மண் மடி புரண்டதும்
ஊர் மடி சுமந்ததும்
இவன் வாழ்வில் பக்கங்களாகின

எழுதாத வரலாற்று பக்கங்கள்
இவன் சொல்லும் பொய்களாகின
எழுதி வைத்த பல இன்று
இவன் மீது வசைகள் பாடின

உயிர் தந்து உயிர் விட்டான்
ஒருவன்
உடல் தந்து கடண் வைத்தான்
மற்றொருவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

வைப்பில் வைத்தே
வட்டி கேட்கும் நாளில்
வயிற்றில் வைத்தால்
அவள் பட்ட கடண்
பாதி இருக்க 
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன 

காலத்தால் விட்ட கடண்
ஒர் பக்க சுமையாய் இருக்க
நாட்டிற்காய் பட்ட கடண் 
மறுபக்கம் ஏறி நிற்க
இடை நடுவில் இவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று

பட்ட கடண் தீரும் வரை
தேசம் அது மீளும் வரை
தோழர் நினைவுகள் 
தோழ் கொடுக்க
மரணம் தாண்டியும்
மீண்டும் மீண்டும்
மரணத்தின் வாசலில்
பிறப்பெடுப்பான் இவன்.