24 Aug 2010

வற்றாது விடுதலைத் தாகம்

விடுதலை பா பாடித்திரிந்த வீதிகளில்
வேரறுந்த பெருமரம் ஒன்று
சாய்ந்து கிடப்பதால்
வேட்கை மட்டும் என்ன
தணிந்தா போய்விடும்..!!

கந்தக வாசனையும்
இரத்த வாடையும் தான்
விதைகளின் அறுவடை என்று
காற்றின் போக்கிற்கு 
தாளம் பாடி செல்வோரை
தப்பு சொல்லி என்ன பயன்

வேண்டா விடுதலை என்று
வீராப்பாய் நீ சொன்னாலும்
வேண்டும் உயிர்கள் இன்றும்
வாழத்தான் செய்கின்றது

விரும்பி நானும்
வன்முறையை தொட்டதில்லை
தாய் மடியும் 
தாலாட்டு பாடலும்
எனக்கும் தான் இதமானது
அதையும் தாண்டி
என்மீதான உங்கள் முத்திரை
என் துாக்கத்தை கெடுத்ததை
யாரறிவர்..!!

போர் ஒன்றின் கோரக் கரங்களுள்
பெரு நகரொன்று புதர் பற்றி கிடப்பதும்
ஒற்றை பனை நடுவானில்
வட்டிழந்து வாடி நிற்பதும்
தீ யின் நாக்குலால்
தீய்ந்து போன உயிர்கள் இங்கே
தனிமை சிறைகளில் 
தவம் கிடப்பதும் எதற்காக

இது விடுதலை வேண்டும் காலம்
வலிகள் மட்டுமே
மலிவு விலையில் கிடைக்கும்
புன்னகை என்பது - எங்களின்
புண்களின் மீதான போர்வைகளே
இருந்தும்....

தாயின் கண்ணீரும் - என்
தாரம் சிந்தும் செந்நீரும்
எனக்கான வேட்கையை 
தணிக்கும் என்றும் 
எள்ளளவும் எண்ணாதீர்


No comments: