12 Sept 2010

தொடரும் எம் பயணம்......


அன்றொரு பயணம்.....
இடர்மிகு பயணம் இருந்தும்
இலக்குடனேயே தொடர்ந்தோம்
வழியெங்கும் குருதியின் எச்சங்கள்
வாசனை வயிற்றை குடைந்தாலும்
விடுதலைக்கு என்று
வீராப்பாய் நடந்தோம்....

வீழ்ந்தவர் பாடல்கள்
செவிப்பறை கிழித்தாலும்
விரல் நுணியில்
விசைப் பல்லே தொட்டு நிக்கும்
இருந்தும்
வீராப்பாய் பயணித்தோம்
விடுதலை நிச்சயம் என்று..

கண்ணீரின் சுவை
நுணி நாக்கை தொட்டபோதும்
உப்பு நீர் பட்டு
உள்விழி சிவந்த போதும்
எதிர்பட்ட பாறையின் மேல்
இருந்ததில்லை
ஓய்வென்று ஓரடியில்
உறங்கியதில்லை

ஓட்டமாய் தொடங்கியது
இன்றும்
இக்கரை தொட்டும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
விடுதலை பயிருக்கு
வாய்க்கால் வரப்புகளை தேடி
அடைபட்ட ஓடைகளை கடந்து
திறக்கப்பட்ட கால்வாய்களை நாடி
மேடாய் இருந்தாலும்
விஞ்ஞானத்தின் புதிரை
மெஞ்ஞானத்திடம் விற்றுவிட்டு
ஓடிக் கொண்டே இருக்கிறோம்

வீணாக போவதிலும்
எங்காவது விளைச்சலுக்கு
ஊற்றாக போவோம் என்று.,
விழுதுகள் எதிர்பட்டாளும்
தங்கிவிடுவதில்லை
வேரின் ஓட்டம்
மண்ணின் எல்லையில்
கற்பாறை தட்டினாலும்
முட்டிப்பார்த்து
முச்சடக்கி
இடுக்குகளின் வழி
பாதை சமைத்து
மண்ணுக்குள் அடி தேடி

ஓட்டத்தின் எல்லை
வெளிச்சத்தை தேடியே
இருந்தாலும்
இன்றைய பயணம்
இருளுக்குள்..
மண்ணுக்குள் வேராய்



No comments: