22 Oct 2010

உனக்காகவும் பேசுகிறேன்...!!


உனக்காகவும் பேசச் சொன்னது
எத்தனை உயிர்கள் அங்கே
வெறும் மண்ணுக்குள் வேராக
உன்னையும் தானே புதைத்திருக்கிறோம்
மண்ணுக்குள் இல்லை என்றாலும்
உள்ளுக்குள் உணர்வாக..!!

நீயும் ஒரு 
போரின் வடு தானே
உனைபற்றி பேசா விடில்
நீ விதைத்த அன்புக்கு
ஆட்காட்டி விரல் எனைத்தானே
குற்றம் காணும்
அதற்காகவேனும் உனைப்பற்றி
பேசத் தான் வேண்டும்

ஊருக்கு வேலன் காவல் நிக்க
வீட்டு காவல் கேட்டு
உனை அழைத்து வந்தோம்
ஆயிரங்களில் பத்தாம்
உயர் “சாதியாம்”
பாழாய் போன யாழ்மண்ணின்
சாதியபேய் 
உனக்கும் அடையாளம் போட்டது
பிழைத்துக் கொண்டவன் நீ
நம் மொழி புரிவதில்லை
இல்லை அன்றே உரிமைப் போர் 
உங்களையும் விழுங்கியிருக்கும்

பெற்று போட்டவள் 
வீட்டு வாசல் தாண்ட
அள்ளி வந்தோம் உன்னை
ஒற்றை உயிராக.
பால் புட்டியில் பால் குடிப்பாய்
காலடி சூட்டில் கண்ணுறங்குவாய்
நம் வீட்டின் நாயகன் நீ

நடுவீட்டில் மூத்திரம் போவாய்
நமக்கில்லா சுதந்திரம்
உனக்கங்கே கிடைக்கும்
குளிப்பாட்டி முற்றத்தில் விட்டாலும்
முடி துவட்ட உள்வீடு கேட்பாய்
உள்ளத்துள் நீயும் குழந்தையும் ஒன்றே 
நினைவுகள் சொல்லுது

கால ஓட்டத்தில்
தனி வீடு கேட்டாய்.,
கொடுத்தோம் என்றே சொல்லலாம்
ஆட்டுக்கும் மாட்டும்
கோழிக்கும் கூட வீட்டை கொடுத்து
சுதந்திரம் பேசுவோம்
அப்படி தானே நீயும் வளர்ந்தாய்.
பின்னாளில் துணை கூட தேடிக் கொடுத்தோமே 
எண்ணிப் பார்த்தால் இன்றும்
சிரிப்பு வரும் நிகழ்வு அது ,
ஒற்றை உயிராக 
உனை வதைக்க விரும்பவில்லை..,
காரணம் வேறு.

நாட்டை காக்கும் வீரர்களின்
கோட்டைத் தாண்டி நீ புகுந்தாய்
உள்ளுக்குள் வந்த உன்னை அவர்கள்
உள்ளத்துள் சிறை பிடித்தார்கள்
நீ அங்கே ஓருநாள் முதல்வன் !!
மறுநாள் விடியல் 
அழுகையோடு விடிந்தது எனக்கு

வீரர்கள் உன்னை விலைபேசி வீடு வர
விம்மி விம்மி நான் அழுத கதை
இன்னும் சிதறாமல் நினைவிருக்கு
“ எங்கள் தம்பிக்கு வேணுமாம்
அதனால் தம்பிமார் முடியாது ” என்று
அப்பா சொல்லி உனை காத்த கதை 
உயிரோடு நீ இருந்தால்
உனைக்கட்டி அழுதிருப்பேன்
இப்போதும்

பொல்லாத இடம்பெயர்வு அன்று
எங்கள் “யாழ்” பற்றி எரிந்தது 
வலிகளாய் தொலைத்தோம் பல
உயிர்களும் உடைமைகளுமாய்
நினைவுகளை மட்டும் அள்ளிக் கொண்டு
நிஜங்களை விட்டோம் அங்கே
உன்னையும் தான் அங்கே எங்கோ !
நிஜங்களோடு தொலைத்த கதை
பத்தாண்டு கழித்தே பாவி நான் 
அறிந்து கொண்டேன்...

ஏங்கும் விழிகளாய் அங்கே
யாரை நீ தேடியிருப்பாய் !!!
உணவோடு உயிரை கொடுத்தேன்
உணர்வோடு பிடுங்கி கொல்கிறாய்
நாட்டை நினைக்கும் உள்ளங்கள்
வீட்டின் நினைவுகளை மறப்பாரா
இல்லையென்றால் நானும்
மறக்கவில்லை உன்னை .!! 
இன்னும் நினைவில் இருக்கிறாய்
நினைத்துப் பார்க்கிறேன்......

1 comment:

RAJA RAJA RAJAN said...

அருமை...

தொடர்க...