21 Jan 2011

பேசத் தெரியாத அறிவு


காற்றில் வரும் குண்டிற்கு
காதல் கிடையாது
கண்ணீர் உதவாது
உடல் தைத்த பின்னும்
அதற்கு உயிர் ஒன்றிருக்கும்

இடம் மாறும் தடம் மீறும்
சிலவேளை வாய் திறந்து
பொருள் வேறு சொல்லும்
நீரோடு ஓடும் இலையாக
உள் ஓடி குளித்து கும்மாளம் போடும்

உச்சி தெடும் சூரியனும்
உறையவைக்கும் குளிரும்
உணர்வுகளை சிறையுடைத்து
குருதியை மட்டுமா விடுதலை செய்யும்
சேர்ந்தே சன்னத்தையும் சீண்டிப் பார்க்கும்

புன்னகைக்கும் அவன் முகத்திரை யுள்ளே
புதிரோடு ஒரு கேள்வியிருக்கும்
விழிகளும் சேர்ந்தே அங்கே
விடைதேடும்
உன் பார்வைக்கு இது தெரியாது

பார்த்துக் கொண்டே பைத்தியம் என்பாய்
கோபத்தில் அவன் முதலிடம் சொல்வாய்
நீளும் அவன் வாழ்வின் கதைகேட்ட உன்
செவிகளும் செவிடாகவே தோன்றும்
பாவம் நீ ! அவன்....

பாசறை வாழ்வு தெரியாது
அவன் பாசத்தின் விலை புரியாது
நேசத்தை தேடும் அவன் உள்ளத்தில்
நீ வேசத்தை தேட முடியாது
பிழைத்து கொண்டது அவன் மட்டுமல்லவே

வெடியோசை மத்தியில் விடும் மூச்சு
வீடு வந்து சேர்ந்தாலும்
ஓசை மட்டும் ஓய்வதேயில்லை
அவன் செவிகளுக்கு
அமைதி தேடும் உள்ளம்
அடைக்கலம் காணும் ஆங்கே
அவன் கல்லரையில் மட்டும்.

துாங்கும் நாள் காத்திருந்த குண்டும்
அவனோடு சேர்ந்தே துாங்கிப் போகும்
வரலாறு மீண்டும் வாய் மூடி
மௌனித்து அமைதி கொள்ளும்
“ பேசத்தெரியா அவன் அறிவை ” போல.

No comments: