30 Sept 2011

பாவ மன்னிப்பு


ஆசையுடன் காத்திருந்து
ஆதரவாய் உறவு பெற்றாள்
அழுத வாய்க்கு உடன்
கற் கண்டு ஊட்டி விட்டாள்
பெற்றவள் கண்விழிக்கு முன்
உற்றவள் ஊருக்கு சொன்னாள்
எனக்கும் ஒரு தம்பி உண்டு

கண் திறந்ததும் எனை
கைகளில் தாங்கி கொண்டாள்
கண்ணயர்ந்ததும் தன்
மார்பினில் ஏந்திக் கொண்டாள்
தாயிருந்தும் எனை
தாலாட்டாய் தழுவிக் கொண்டாள்
அவள் தான் அக்கா

ஊர் இருண்டிருக்க என்
உலகிற்கு வெளிச்சம் தந்தாள்
விழி சிவந்திருக்கும் என்
விரல்களுக்கு விலங்கு தந்தாள்
பாதை எங்கும் என்
பயணத்தில் கூட வந்தாள்
புரியாமலே விலகி வந்தேன்

வருடங்கள் கழிந்து போக
வாழ்க்கையில் விலகி போனாள்
விலகி வந்தவனை மீண்டும்
வாழ்கைக்குள் ஏந்திக் கொண்டாள்
உலகம் ஒதுக்கி விட்டும்
உறவுக்குள் வளைத்து கொண்டாள்
புரிந்து கொண்டேன் பாசத்தை

பார்வையின் துாரம் என்
இமைகளுள் வைத்துக் கொள்வேன்
இதயத்தின் ஓசை என்
இடப் பக்கம் தாங்கிக் கொள்வேன்
ஒரு போதும் உனை நான்
விலகிப் போக மாட்டேன் - உறவே
உனை உயிராக பார்த்து கொள்வேன்

1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

அக்காவின் பாச உணர்வை சொல்லும் நல்ல கவிதை!