15 Dec 2011

எரிமலை...















இருள் போர்த்த மேகத் திரைகளின் பின்னால்
தேங்கிக் கிடக்கிறது எங்கள் கண்ணீர்
குருதி வழிந்தோடிய கரைகளைத் தழுவி
காத்துக் கிடக்கிறது எங்கள் கரங்கள்

குமுறும் எரிமலைகளின் கொதிக்கும் குழம்புகளாய்
பொங்கித் துடிக்கிறது எங்கள் இதயம்
ஊர்திரும்பும் பறவைகளின் சிறகுகளின் அசைவில்
சிக்கித் தவிக்கிறது எங்கள் விழிகள்

கல்லறைகளைச் சிதைத்து கனவுகளைக் கலைத்து
அடிமை கொண்டதாய் எண்ணங்களில் வரையலாம்
சட்டங்கள் போட்டு திட்டங்கள் தீட்டி
சிறைக்குள் வதைப்பதாய் சிந்தையில் உதிக்கலாம்
காலத்தின் மாற்றத்தில் எங்கள் கதவுகள் திறக்கப்படும்
கோடையின் முடிவில் கொட்டும் அடை மழையுமுண்டு


சட்டென வெடிக்கும் இடி ஓசையின் பின்னால்
பேரண்டமும் கலங்கும்
நில அதிர்வுகளின் இடம்பெயர்வால்
வானுயர எழும் அலைகளின் ஊடே
மீண்டுமொரு சுனாமி உங்கள் ஊர் புகும்
எதிர்ப்பட்ட தடைகளை பொசுக்கி
எரிதணலும் தன் பழிதீர்க்கும்
வல்லுாறுகளின் கோரப் பற்களுள்
குதறும் பிண்டங்களாய்
உங்கள் உயிர்களும் காவு கொள்ளப்படும்

எதுவும் நடக்கும்..! ஏன்
இதுவும் கூட நடக்கும் !! காத்திரு

No comments: