29 Mar 2009

அந்த யாக மர்மம்! பகுதி-07


ராஜீவ்காந்தி நல்லவர். தொழில் முறை அரசியல்வாதியாக வளர்ந்தவரல்ல. டூன் பள்ளி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் என மென்மையாக வளர்ந்தவர். குடும்பம், விமானங்கள், மாலைநேர நண்பர்கள் என இயல்பான ப்ரியங்கள், சந்தோஷங்களால் தன் வாழ்வை அர்த்தப்படுத்தி வாழ்ந்தவர். விமான ஓட்டிகளின் கனவான "போயிங் விமானம் ஓட்டும் உரிமம்' பெற்றதை பாராளும் பதவியைவிட பெரிதாகக் கருதியவர். அதிகார ஆசை தன்னை அணுக விடாது வளர்ந்தவர். தம்பி சஞ்சய்காந்தியின் அகால மரணத்தால் தகர்ந்துபோன தன் தாயின் உலகறியா தனிமையில் துணை நிற்க வேண்டி அரசியலுக்கு வந்த அன்பு மகன் அவர். தாத்தா நேருவின் புன்னகையை விட மாசில்லா மலர்ந்த புன்னகைக்குச் சொந்தக்காரர் ராஜீவ்காந்தி. அரசியல் சதிகள், சதிர்கள் அறியாதவர். அருகிருந்த அரசியல் கயவர்களையும், அகங்கார அதி காரிகளையும் வெள்ளந்தியாக நம்பியவர்.
அன்னை இந்திராகாந்தியின் படு கொலை ராஜீவ் காந்தியை நாட்டுக்குத் தலைவராக் கியது. ஆன நாள்முதல் நல்லவை செய்ய வேண்டு மென அவசரம் காட்டினார். இன்று உலக அரங்கில் அறிவு வளம் கொண்ட நாடாகவும், வருங்கால வல்லரசாகவும் இந்தியா மதிக்கப்படுகிறதென்றால் அதற்கான நுழைவாயில் திறந்து, கால்கோள்விழா நடத்தி, இலக்கினைக் காட்டி, கட்டுமானப் பணிகளையும் தொடங்கியவர் ராஜீவ்காந்தி. தொலைத் தொடர்பு, செயற்கைக்கோள், அறிவுப் பொருளாதாரம் என இந்தியா இன்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும் அத்தனை சாதனைகளுக்கும் வித்திட்ட புதுயுகச் சிற்பி அவர்.
வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 என ஆக்கி ஜனநாயக இந்தியா இளைஞர்களின் ஆடுகளமாக மாறும் வாய்ப்பினை உருவாக்கியது. தேர்தல் ஆணைய சீர்திருத்தம், புரட்சிகர பஞ்சாயத் ராஜ் மசோதா என குறுகிய காலத்தில் அவர் நாட்டுக்குச் செய்த நற்பணிகள் மிகவும் காத்திரமானவை. அவரது இழப்பு நாட்டுக்கும், ஆசியாவின் எழுச்சிக்கும், உலகிற்கும் பேரிழப்பாக அமைந்தது. அப்படுகொலையின் பழி முற்றாக விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டது.
கடந்த இதழில் சிவசங்கரி சில கேள்விகளை கேட்டிருந்தாள். அக்கேள்விகள் கூர்மையானவை. உண்மையை முழுமையாகப் பார்த்திட சிவசங்கரி நமக்கொரு அறைகூவல் விடுத்தாள். இந்தியா வெறும் ஒரு நாடல்ல: நாம் மகத்தானதோர் நாகரீகம். ஆதிக்க வெள்ளத்தில் சுமார் 500 ஆண்டுகள் அமிழ்ந்து கிடந்தபோதும் பண்பாட்டு நெறிகளை பாதிப்பின்றிப் பாதுகாத்த நிலம் இது. நீண்ட விடுதலைப் போராட்டத்தில் நாம் ஆயிரம் பேரைக்கூட இழக்கவில்லை. அறவழியில் போராடினோம் என்பது மட்டுமல்ல அதற்கு காரணம். நம்மை அடிமைப்படுத்தியவர்கள் கொலைவெறியர்களாகவும், இன அழிப்பு செய்யும் ராஜபக்சே போன்ற மாபாதகர் களாகவும் இருக்கவில்லை. ஆயிரம்பேரைக் கூட விடுதலைப் போராட்டத்தில் இழக்காத நாம் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும், 20 லட்சம் பேரின் இடப்பெயர்வுக்கும், ஒட்டுமொத்த இன அழித்தலுக்கும் கூட்டாளிகளாக நிற்கிறோம். மனித குலத்திற்கெதிரான இக்குற்றச் செயலை நியாயப்படுத்த ராஜீவ்காந்தி படுகொலையை இழுத்து நிறுத்துகிறோம்.
ராஜீவ்காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என வாதிடுகிறவர்கள் உண்டு. நாம் அவர்களோடு சேரவில்லை. அவர்கள் செய்தார்கள் என்றே ஏற்றுக் கொள்வோம். ஆனால், படுகொலை சதியில் பங்கேற்ற வர்கள் யார் யார் என கடந்த சுமார் 18 ஆண்டுகளாய் எழுப் பப்பட்டு வரும் கேள்வி களுக்கு இன்றுவரை விடை இல் லை. விடை தேடும் நேர் மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லையென்பதுதான் நமது ஐயங்களை மேலும் வலுப்படுத்துகிறது. உண்மை நம்மை விடுவிக்கும். உண்மை தேடும் புதிய முயற்சிகளை அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் அக்கறையுடன் இன்று மீண்டும் மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இன அழித்தலுக்கு ஆளாகி நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு சில பரிகாரங்களையேனும் காலங் கடந்தாவது நாம் செய்திட அந்த உண்மை உதவும்.
ராஜீவ்காந்தி படுகொலையில் அனைத்துலக சதி உள்ளது என்பது ஓர் ஐயம். உள்நாட்டு முக்கியஸ்தர்கள் சிலருக்கு படுகொலை சதியில் தொடர்பு உண்டு என்பது இரண்டாவது ஐயம். படுகொலை நடக்கப்போவதை சிலர்/பலர் அறிந்திருந்தனர். ஆனால் அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்காதது மட்டுமல்ல -தடுக்க முயன்றவர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பது மூன்றாவது ஐயம். இம்மூன்று ஐயங்கள் தொடர்பாக நான் பல்வேறு தருணங்களில் கேட்ட உரையாடல்களை உங்கள் முன் பதிவு செய்கிறேன். இவை ஐயங்களேயன்றி தீர்ப்புகள் அல்ல. தீர்ப்புகளை நோக்கிய திசையில் புதிய வழக்குகளை பரிசீலிப்பது நம் அனைவருடைய பொறுப்பு.
ஐயம்: 1
ராஜீவ்காந்தி படுகொலை சதியில் மிகுந்த சந்தேகத்திற்கு உள்ளானவர் சந்திரசாமி. இவரை ஜெயின் கமிஷன் விசாரித்தது. அனைத்துலக கள்ளச்சந்தை ஆயுத வியாபாரிகளோடும் மாஃபியாக்களோடும் தொடர்பு வைத்திருந்தவர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பணத்தேவைகளையும் அரசியல் தகிடுதத்த வேலை களையும் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டவர் என இவரைப் பற்றி கூறப்படுவதுண்டு. இவரும் சுப்ரமணியசாமியும் நெருங்கிய நண்பர்கள் என பொதுவாக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. ராஜீவ்காந்தி படுகொலையில் சந்திரசாமியும் சுப்பிரமணியசாமியும் இணைந்து செயல்பட்டார்கள் என்ற ஐயமும் குற்றச்சாட்டும் கூர்த்த மதியுடைய பலராலும் முன்வைக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படு கொலை செய்யப்பட்டது 1991 மே மாதம் இரவு சரியாக 10.20 மணிக்கு. 10.25க்கு சுப்பிரமணியசாமியின் கட்சிப் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில் அவரை தொடர்புகொள் கிறார். ""என்ன ராஜீவ்காந்தி செத்துப்போனதை சொல்லத்தானே கூப்பிடுறே...'' என்று சர்வ சாதாரணமாக வேலுச்சாமியிடம் சுப்பிரமணியசாமி கேட்கிறார். இதனை படுகொலை சதி பின்னணியை விசாரிக்க மத்திய அரசு அமைத்த ஜெயின் கமிஷன், பன்னோக்கு கண்காணிப்பு ஆணையம் இரண்டுமே பதிவு செய்துள்ளன. படுகொலை நடந்த 5 நிமிடங்களுக்குள் படுகொலையின் முழு விபரங்கள் சுப்பிரமணியசாமிக்கு தெரிகிறதென்றால் ஒன்று, படுகொலை நடக்கப்போகிற விபரம் முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும், அல்லது படுகொலையை நேரடியாக கண்காணித்து உடனடி தகவல் தெரிவிக்கும்படி யாரை யேனும் அவர் ஸ்ரீபெரும்புதூரில் நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உளவுத்துறையில் யாருடனோ "ரன்னிங் கமெண்ட்ரி' போல அவர் தொடர்பில் இருந்திருக்க வேண்டும்.
நடுவண் அரசின் பன்னோக்கு கண்காணிப்பு ஆணையம் அதிர்ச்சியூட்டும் இன்னொரு தகவலையும் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு சில நாட்களுக்கு பின் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள ஏனாத்தூர் கோயிலில் சுப்பிரமணியசாமியும் சந்திரசாமியும் இணைந்து யாகம் ஒன்று நடத்தியுள்ளார்கள். ராஜீவ்காந்தி ஓர் பிராமணர். பிராமணனை கொல்லும் பழி மாபாதகம் என்பது இந்து தர்ம ஐதீகம். அப்பழியின் வினைகளிலிருந்து விடுபட செய்யப்படவேண்டிய யாகம் குறித்தும் ஐதீக விபரங்கள் உள்ளனவாம். அப்படியானதோர் யாகம் செய்யவே சுப்பிரமணியசாமியும் சந்திரசாமி யும் படுகொலை நடக்கப்போகிற இடத்திற்கு அருகிலேயே உள்ள கோயிலுக்கு வந்து யாகம் செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
படுகொலை நடந்த அன்று சுப்பிரமணியசாமி சென்னையில் இருந்திருக்கிறார். கட்சிக்காரர்கள் யாருக்கும் தெரியாமல் விமானநிலையம் அருகிலுள்ள ட்ரைடெண்ட் ஹோட்டலில் ரகசியமாகத் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அவர் மத்திய அமைச்சர். ஆனால் அன்றைய தினம் காலை முறைப்படியான தகவல்கள் எவருக்கும் சொல்லாமல் பெங்களூர் சென்று திரும்பியிருக்கிறார். ராஜீவ்காந்தி படுகொலையை நிறைவேற்றிய சிவராசன் அணியினர் பெங்களூரில் தலைமறைவானதன் பின்னணியில் சதிவலை மையம் பெங்களூரில் இருந்ததா, அவர்களை சுப்பிரமணியசாமி அன்று காலை சந்தித்தாரா என்று கேள்விகள் எழுவது குற்றவியல் முறைப்படி இயல்பானது. ""உண்மையை கண்டறியும் எந்தக் கேள்விகளுக்கும் சுப்பிரமணியசாமி ஒத்துழைப்பு தரவில்லை'' என ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் குறிப் பிட்டிருக்கிறது.
சதியில் சந்திரசாமி, சுப்பிரமணிய சாமி ஆகியோரின் பங்கு தொடர்பான கேள்விகள் வலுவாக எழத்தொடங்கிய காலத்தில், பிரதமர் அலுவலகத்திலிருந்த இப்படுகொலை தொடர்பான அதிமுக்கிய கோப்புகள் சில மாயமாய் மறைந்து விட்டதை 24-11-1997 அவுட்லுக் பத்திரிகை ஆதாரபூர்வமாக வெளியிட்டது. கோப்பு கள் மாயமானபோது பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ். நரசிம்ம ராவின் நிழல் அதிகார மையங்களாக சந்திரசாமி, சுப்பிரமணியசாமி இருவரும் செயல்பட்டு வந்தார்கள் என்று பொது வாக சொல்லப்படுவதுண்டு.
ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இன அழித்தலை எதிர்த்து இருபெரும் எழுச்சிகள் தமிழகத்தில் இதய நேர்மை யுடன் நடந்தன. முதலாவது, தமிழக வழக்கறிஞர்களின் தோழமை முன் னெடுத்தது, மற்றது மாணவர் சமுதாயம் முன்னெடுத்தது. கனன்றெரிந்த வழக்கறி ஞர் நீதி எழுச்சியை நீதித்துறைக்கும் காவல்துறைக்குமிடையேயான கலவரமாக திசை திருப்பியதில் சுப்பிரமணியசாமியின் பங்கை நாம் இன்று அறிவோம். முட்டை எறிகின்ற சிறுபிள்ளை வேலைகளை விட்டுவிட்டு சுப்பிரமணியசாமியையும் சந்திரசாமியையும் ராஜீவ்காந்தி படு கொலையில் சந்தேகத்திற்குரியவர்களாக விசாரணைக்கு மீண்டும் உட்படுத்தும் முயற்சியை தமிழக வழக்கறிஞர்களின் தோழமை செய்யுமேயானால் இந்தியா அவர்களுக்கு நன்றிக்கடன் படும்.
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக அடுத்து வரப்போகிற ஐயம் மேலும் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும், காத்திருங்கள்.
(நினைவுகள் சுழலும்)

No comments: