29 Jul 2009

மாற்றம் ஒன்றே மாறாதது

நெருப் பாற்றை கடந்து
நெடு பயணம் நடந்து
தொலைத்து விட்ட
உறவுகளை எண்ணி
தனி மரமாய் - தாய்
நாடு கடந்து வந்தேன்

வந்த களை மாற முன்னர்
பட்ட துயர் காய முன்னர்
அன்பு கரம் ஒன்று தந்து
அருகில் நீ வந்தாய் - ஜயோ
இது புதுசு என்று
விலகிச் சென்றேன்
வேண்டாம் இது தாங்காது
என்று கூட சொல்லி பார்த்தேன்

காயங்கள் ஆறும்
கரம் பற்றி நட என்றாய்
தனி மரமாய் நின்ற எனக்கு
துனை மரமாய் அரு கமர்ந்தாய்

உண்மையை சொன்னேன் - என்
வாழ்க்கையை சொன்னேன்
நடந்து வந்த பாதையை
தொட்டு காட்டினேன்
புரிந்து கொண்டாய் - என்
வலிகளை தெரிந்து கொண்டாய்
மீட்பார் இன்றி தவித்தவேளை
மீட்பராக நீ வந் தாய்

ஏற்று கொண்டேன் மனதில்
உனை சுமப்பது என்று
உன் கரம் கொண்டு - என்
கண்ணீர் நீ துடைத்தாய்
இருளாக தெரிந்த வழிதனில்
ஒளி காட்டும் தீபம் ஆனாய்
உன் வழி காட்டளில்
மீண்டும் ஒரு புது பயணம்
ஆசையோடு தொடர்ந்தேன்
பல படி ஏறினேன்
துணிந்து நீ
அருகிருக்கும் துணிவோடு

காலங்கள் ஓடின - உலகினில்
மாற்றங்கள் ஒன்றே மாறாது
அது மீண்டும் உன் வாழ்வில்
தலையெடுத்து ஆடியது
வலிகள் இப்போது
உன் பக்கம் ஆனது
கரங்கள் என் பக்கம் வீழ்ந்தது
தூக்கி நடந்தேன் உனை
என் கரங்களில் ஏந்தி
நடந்தேன்

நடக்க நடக்க நீ என்னுள்
நான் உன்னுள் ஆக
ஆழமாய் கலந்து போனோம்
இரு விழிகளாய் இருந்து
ஓரு பாதை கண்டோம்
வாழ்க்கை இனித்தது
புதிய தாய் இருந்தது
கண்களில் நீர் இன்றி
கற்பனை உலகை
கண்டு கொண்டோம்
அதை காதல் என்று
உலகம் சொன்னது

மீண்டும் மாற்றங்கள்
எம்மை துரத்தி வந்தது
இன்று இருவரும் அகப்பட்டோம்
யாருக்கு யார்
கரம் கொடுக்க
மதம் என்ற வடிவில்
ஒரு மிருகம் இடைநடுவில்
குடிகொள்ள திகைத்து நின்றோம்
உனக்கு நானும் எனக்கு நீயும்
என்றான பின் நமக்கு
மதம் ஏது...?இனம் ஏது...?
என்று கேட்டேன்

வாழ்வு தந்து வள்ளல்கள்
வாசல் தாண்ட விட வில்லை
வாழ்க்கை தந்த நீங்கள்
வாசல் விடுங்கள் என்றாய்
புரிந்து கொண்டேன்
புரட்சி அது எனக்கு பிடித்தது
எனக்கு மட்டுமே பிடித்தது
சம் மதம் கேட்டாய்
ஓம் என்று இருந்தேன்

புது வாழ்வில்
புது பயணம்
நீ புறப்பட - மீண்டும்
ஆரம்ப புள்ளிக்கே
நான் வந்தேன்
நினைவுகள் அது...
எனக்கு சொந்தம்
அது என்கூட தங்கிவிட
அதை பற்றியபடி
மீண்டும் ஒரு பயணம்

வழி எல்லாம் நீ நடந்த
தடம் இருக்க
அதை ரசித்தே
நான் நடந்தேன்
ஒரு திருப்பத்தில்
கனவென்று நான் கண்ட காட்சி
நிஜமாக நின்றது

யார் எந்தன் உயிர் என்றேன்
அது அங்கே மெழுகாக கருகிறது
யார் எந்தன் ஒளி என்றேன்
அது அங்கே இருளுக்குள் இருக்கிறது
இது மீண்டும் காலத்தின் மாற்றமா
இல்லை என் கற்பனை மாற்றமா
புரியவில்லை எதை தொட


புரியவில்லை மீண்டும்
வலிகள் உனதா இல்லை - அந்த
வலிகள் எனதா
திகைத்து நிற்கிறேன்
அடுத்த அடி எதை நோக்கி

No comments: