25 Mar 2009

மனிதநேயம் உள்ளோரே....! பகுதி-06சிவசங்கரி யின் கடிதம் பேசுவதை கேட்போம்.


""1987-89 காலப்பகுதி யில் எமது மண்ணில் இந்தியப் படைகளால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகளின் கணக்கு தெரியுமா உங்களுக்கு? அப்படை களால் சிதைக்கப்பட்ட பெண்களின் உயிர்களை மீட்டுத்தர உங்களால் முடியுமா? வீட்டுக்கொரு பிள்ளையாக இருந்த எத்தனை இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டு, பெற்றோர்கள் மலடாக்கப்பட்டனரே, ஏன்? உங்களது பிரதேச வல்லாண்மையைக் காட்டுவதற்கு, சுதந்திரத் திற்காக ஏங்கும் இந்தச் சிட்டுக்குருவியின் சின்ன இறகுகளை ஏன் சிதைத்துக் கொன்றார் கள்? மொழியால் ஒன்றானவர்கள் என்பதால் தமிழர்களிடம் தார்மீக ஆதரவை வேண்டி நின்றதற்குத் தண்டனையா இது? எதற்காக எம்மை நாசம் செய்தார்கள்? நம்பிக்கை துரோகம் என்றால் என்ன? மனித நேயம் உள்ளோரே, தயவு செய்து பதில் தாருங்கள்.
""எனது கடைக்குட்டியையாவது விட்டுவைத்தார்களில்லை' என்று இன்னமும் அழுது புலம்பும் எனது சின்னம்மாவின் வேதனைக்கு காரணமானவர்கள் யார்? அவளது சொத்தாக விருந்த மூன்று முத்துக் களையும் பலியெடுத்த வர்கள் யார்? ஏன் அவள் வம்சமழிக்கப் பட்டு மலடாக்கப்பட வேண்டும்? 1987-ல் இந்தியப் படைகள் ஆடிய கோரத்தாண்டவத்தில் தனது மூன்று பிள்ளைகளையுமே பலி கொடுத்துவிட்டுப் பைத்தியமாகிப் பிதற்றுகிறாளே! அது உங்களுக்கு கேட்கிறதா? பாவிகள். மூன்று பிள்ளை களையும் சுடுவதற்காக வரிசையில் நிறுத்திவிட்டுத் துப்பாக்கிகளை உயர்த்தியபோது "என்னைக் கொன்று விட்டு எனது குழந்தைகளை விட்டுவிடுங்கள்' என்று அவர்களின் அழுக்குப்படிந்த அந்த பூட்ஸ் கால்களில் விழுந்து அவற்றின் உதைகளுக்கூடாக கெஞ்சினாளே! கேட்கவில்லையா உங்களுக்கு? எங்கோ இருக்கும் இந்தச் சிறிய மண்ணின் உயிர், அந்த இராட்சதப் படைகளுக்குப் பெறுமதியானதாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவளை சுட்டார்கள். சுருண்டு விழுந்தாள். மூர்ச்சை யாகிப் போனாள்.
இதற்குள் குழந்தைகளை சுட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். மூர்ச்சையானவள் விழித்துக்கொண்டபோது குருதி வெள்ளத்தில் குழந்தைகள் கிடந்தார்கள். உடம்பால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனால் எழுந்திருக்க முடியாமல் இருக்க அவளால் எப்படி முடியும்? உருண்டாள்; தவழ்ந்தாள்; குழந்தைகளின் உடலில் உயிரை தேடி னாள். அவளது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அவளது பெண்குழந்தையின் உடலில் உயிர் இருப்பதை உணர்ந்து கொண்டாள். எங்கேயோ இருந்து வந்த தெம்பில் எழுந்து குழந்தையைச் சுமந்தாள். சுடுகாடாக்கப்பட்டு நிசப்தம் நிறுவப்பட்ட அந்த பாதை வழியில், தனது தோள் பட்டையிலிருந்து வழியும் குருதியை யும் பொருட்படுத்தாது சுமந்து சென்றாள். ஆனால், அவளது உள்ளத்தின் உறுதியுடன் உடம்பின் குருதி ஒத்துழைக்கவில்லை. அது தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்ததால் மீண்டும் விழுந்தாள். குழந்தையை நகர்த்தி நகர்த்தி ஊர்ந்து சென்றாள். எங்கிருந்தோ வந்த இரு புண்ணிய வான்கள் உதவிக்காக மாட்டு வண்டியை கொண்டு வந்தார்கள். இருவரையும் மாட்டு வண்டியில் ஏற்றினார்கள். இருந்தும் என்ன பயன்? அதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது.
இப்போது இந்த இடத்தில் நின்று கொண்டு, அந்த மாட்டு வண்டியோடு கிடக்கும் அதே தாயருகில் நின்று கொண்டு சொல்லுங்கள். ஏன்? எதற்காக அவளது வம்சத்தையே அழித்தார்கள்?
வீதிவலம் வந்த இந்தியப்படைகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, எனது தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டி லும் இருந்த ஆண்கள் இழுத்துச் சுடப்பட்ட ஞாப கங்கள் இன்னும் நெஞ்சுக்குள் கனக்கின்றனவே! 15 அப்பாவி இளைஞர்களை அன்று கொன்றுவிட்டு, 15 எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகள் இன்று பருத்தித் துறைப் பகுதியில் கொல்லப்பட்டனர் என்று சொன்னதை கேட்டதோடு நிறுத்திக்கொண் டோம், இந்திய வானொலி செய்தியைக் கேட் பதை. புரிந்துகொண்டோம், இந்தியப் படை களுக்கும் ஸ்ரீலங்காவின் படைகளுக்குமிடையி லான ஒரேயொரு வித்தியாசம் எண்ணிக்கை மட்டுமே என்பதை! இத்தனை நாட்களாக மனித னாக பிறந்ததற்காகவல்ல, பெண்களாக பிறந்து விட்டோமே என்பதற்காக எமக்குள்ளேயே எம்மை வெறுத்துக்கொண்டிருந்தோம். அந்த அளவுக்கு நாம் இம்சை களை அனுபவித்துக்கொண்டி ருந்தோம் என்பதை உங்களுக்கு நாம் எப்படி விளங்கப்படுத்துவது?
1987-ல் உலோகப் பறவைகள் உணவுப் பொட்டலங்களை வீசியபோது உதவுகிறார்கள் என்று உவகை கொண்டோம். ஆனால், அதே உலோகப்பறவைகளே எமது உறவுகளின் உயிரை வன்னிக்காடுகளில் குடித்தபோது உணர்ந்துகொண் டோம் -அவர்கள் தமது வல்லாதிக்கத்தை ஆய்வு செய்து கொள்கிறார்கள் -கொண்டார்கள் என்பதை!
எமது தீவு சிறியது என்பதற்காகவோ, இல்லை இச்சிறிய நிலத்தில் பிறந்துவிட்டோம் என்பதற் காகவோ என்றும் நாம் வேதனைப்பட்டதில்லை; வேதனைப்படவும் மாட்டோம். ஆனால், ஓர் இராட்சச நாட்டுக்கருகில் எமது மண் அமைந்து விட்டதே என்பதற்காக இப்போதெல்லாம் அடிக்கடி வருந்திக்கொள்கிறோம். அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்குள்ளும் அகப்பட்டு நசிந்து விடாமல் தப்புவதற்கு நாம் படும்பாடு - புழுக்களுக்கு மட்டுமே புரியும்! தாங்கள் வாழ்வதற்காக வாழ்பவர் களை வதைத்துக் கொல்லும் அமெரிக்காவிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடுள்ளது? அமெரிக்கர் கள் தமது ஏகாதிபத்தியத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிறார்கள். இவர்கள்...? உள்ளுக்குள்ளே அடங்காது செட்டைக்குள்ளே சின்னதாய் தெரிகிறது "அகிம்சைவாதம்'. இந்த உன்னதக் கோட்பாட்டிற்குள் தலையை புதைத்துக்கொள்ளும் தீக்கோழிகள் இவர்கள்.... எனினும், முழு உடலும் அம்மணமாய்த் தெரிகிறது.
மேலே நான் எழுதியவை எல்லாம் உங்களுக்கு தவறாகத் தெரியலாம். ஆனால் எம்மைப் பொறுத்த வரை இது எமது வாழ்க்கையில் என்றுமே காய்ந்து போகாத - இன்னமுமே சீழ்வழிந்து கொண்டிருக்கிற இரணம். இதைச் செய்தவர்களிடம் - செய்யக் காரணமானவர்களிடம் எங்காவது மனிதாபிமானம் ஒளிந்திருந்ததாக நீங்கள் தேடிக்கண்டு பிடிக்க முயலலாம்; அது உங்களால் முடியலாம். ஆனால் நாம் ஏழை மக்கள்; எமக்காக எம்மை வருத்தி உழைப் பவர்கள். எமது வஞ்சிக்கப்பட்ட வாழ்விற்காக, பறிக்கப்பட்ட உரிமைக்காக எமது இரத்தத் தைச் சிந்தி நாமே போரா டிக் கொண்டிருப்ப வர்கள். இதற்கு குறுக்கே தமது சுயநல விளையாட்டை விளை யாடி, எம்மை வதைத்தவர் களை - வஞ்சித்தவர்களை மறப்பதற்கும், மன்னிப்பதற் கும் நாம் மகாத்மாக்களல்ல - மனிதம் மறுக்கப்பட்ட மனிதர்கள்!
நாம் வங்காள தேசத்துச் சுதந்திரத்தையா - வாங்கித் தருமாறு யாசித்தோம். எதற்காக இங்கு வந்து தர்பார் நடத்தினார்கள்?
எம்மை பொறுத்தவரை எமக்கு எமது பத்தாயிரம் உறவுகளின் உயிர்களைவிடவும், முடமாக்கப்பட்ட எமது சகோதரர்களின் கால்களைவிடவும், பறிக்கப்பட்ட எமது சகோதரர்களின் சந்தோஷங்களைவிடவும், தெருவோர வீடுகளில் தொலைக்கப்பட்ட சிரிப்புகளை விடவும், அழிக்கப்பட்ட எமது தாய்மார்களின் வாரிசுகளைவிடவும், இராமலிங்கத்தினதும், இராசையா வினதும் குடும்பங்களிலிருந்து பிடுங்கப்பட்ட நிறை வான வாழ்வைவிடவும், எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலை வேள்விக்கு தம்மையே ஆகுதியாக்கிக் கொண்டிருந்த அந்த அத்தனைப் போராளிகளின் உயிர்களைவிடவும் பெறுமதியானது, இந்த உலகில் எதுவும் கிடையாது.
ஏனைய்யா... உரிமைகள் மறுக்கப்படுகிற போது அதை எதிர்த்து போராடுபவன் பயங்கர வாதி. அவனது உரிமைகளை பறிப்பதற்கு ஆயுதங் களை கொடுத்துப் படைகளை ஏவிவிடுபவன் தியாகியா?
இவ்வாறு எழுதியதையிட்டு நீங்கள் எம்மை கொலைவெறியர்கள் என்று நினைக்கக்கூடும். உண்மையில் அதற்காக நாம் வேதனைப்பட முடியாதவர்களாவேயுள்ளோம். ஏனென்றால் நடந்து விட்ட நிகழ்வுகளின் தாக்கங்கள் இன்னும் எம்மை தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றன.
எம்மைச் சூழவும் இழப்புகளும், இறப்புகளுமே நிரந்தரமாகிவிட்டதைக் காணும்போதெல்லாம், அதை எம்மீது திணித்தவர்கள்மீது எமது உணர்வு எப்படி இருக்கும் என்பதே இக்கடிதம்.
தேசங்களையும், அவர் களின் பரம்பரைகளையும் கருதி அவர்கள் செய்த கொடுமைகளை எம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆனால் நாம் வன்முறைக்கு வாடிக்கையாளர்களல்ல. தமிழகத்தின் 6 கோடி தமிழர்களை நினைக்கும் போதெல்லாம் ஏற்படும் பயத்தில், சிங்களவர்கள் எம்மை தாக்கி அழித் தார்கள் - அழிக்கிறார்கள்; சந்தேகம், அவர்களை துரத்த அவர்கள் எம்மை துரத்துகிறார்கள். ஆனால் தமிழகத்திலோ எம்மை ஈழத்தமிழர்கள் என்று தெரியுமே ஒழிய, தமிழர்கள் என்று புரிவதில்லை.
எனவே, புரிந்துணர்வுகள் நிராகரிக்கப் பட்ட நிலையில் எங்கள் இருப்பை உறுதி செய்திடும் அடிப்படை அவாவுடன் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
இதில் யாரும் உதவ வருகிறார்களோ இல்லையோ உபத்திரவம் தராமல் இருக்க வேண்டுமென்பதே எமது உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பு.
மதிப்புடன்
சிவசங்கரி.
சீறி நின்ற சிவசங்கரிக்கு ஆதரவாய் 1000-த்திற்கும் மேலான கடிதங்கள் வந்தன. அவற்றுள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், ஒரு தலைவனை இழந்த தேசமும், இரண்டு தலைமுறைகளை இழந்து எதிர்கால நம்பிக்கைகளும் தளர்ந்து நிற்கிற தமிழீழ தேசியமும் பரஸ்பர மன்னிப்பு, உள்ளார்ந்த ஒப்புரவு, புதிய நட்புறவு என்ற திசையில் தேடல்களை கட்டமைத்தாக வேண்டிய காலகட்டம் இது.
ராஜீவ்காந்தி படுகொலை தொடர் பான முழு உண்மைகளையும் அறிய முற்படுவது அத்தேடலுக்கு உதவும். சீறி நின்ற சிவசங்கரி ஓர் சிறு பொறியை உரசி, சிமிழ் வெளிச்சம் தந்திருக்கிறார்.
அப்படுகொலையின் சதிவலைப் பின்னல்களை முழுதாக அறிவது சாத்திய மில்லை என்றாலும் வெளிப்படையாக பலரும் கேட்க அஞ்சும் சில கேள்விகளை எழுப்பினால் உண்மைக்கு அருகில் ஒருவேளை நம்மால் வர முடியும்.
அத்தகு கேள்விகளை அனைத்துலகப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், அரசி யல் ஆய்வாளர்கள், உயரதி காரிகள் ஊடாக நான் கேட்டிருக்கிறேன். மறுக்கவும் மறைக்கவும் முடியாத அக் கேள்விகள் உங்களை அதிர வைக்கும். காத்திருங்கள்.
(நினைவுகள் சுழலும்)
 

No comments: