22 Mar 2009

சீறி நின்றால் சிவசங்கரி!பகுதி-05



பிலிப்பின்ஸ் நாட்டின் "வேரித்தாஸ்' வானொலியிலிருந்து ஈழத்தை அறிந்துகொண்டது போலவே பிலிப்பின்ஸையும் நன்கறிந்திருந்தேன்.
7107 தீவுக் கூட்டங்களால் ஆன நாடு பிலிப் பின்ஸ். மக்கள் "மலாய்' இனச் சாயல் கொண்ட வர்கள். நான் பார்த்து, உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள். ஆண்கள் பொதுவாக சோம்பேறிகள். "பலவீடு கள்' வைத்திருக்கும் பொறுப்பற்றதுகள். குடும்பச் சுமைகளை எங்கும்போல் அதிகம் சுமக்கிறவர்கள் பெண்கள். ஆனால் பணம், படிப்பு, பதவிகளைவிட "அழகாக' இருப்பதை முதல் விருப்பமாக கொண்டவர் கள். பெண்களைப் பொறுத்தவரை தேசத்தின் முதல் பொழுதுபோக்கு தலை வாருவது. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தலைவாரி பவுடர் பூசாமல் அவர்களால் இருக்க முடியாது. இரண்டாவது தேசிய பொழுதுபோக்கு துணிதுவைப்பது. எப்போது பார்த்தாலும் துவைத்துக் கொண்டே இருப்பார்கள்.
தனிப்பட்ட உடற்தூய்மை பேணுவதில் அப்படி யொரு அக்கறையும் சிரத்தையும் காட்டுவார்கள். மூன்றாவது பொழுதுபோக்கு சாப்பிடுவது, நான்காவது பாட்டு, ஐந்தாவது நடனம். அலுவலகம், பூங்கா, வர்த்தக மால்கள் எங்கு பார்த்தாலும் பாடிக் கொண்டும், காற்றிலசையும் தீபம்போல் ஆடிக் கொண்டும் இருக்கிற மக்களை இப்பூமிப்பந்தில் வேறெங்கும் நாம் பார்க்க முடியாது.
இந்தியாவில் ஆங்கிலேயர்போல் பிலிப்பின்ஸ் நாட்டை நீண்ட காலம் காலனி யாதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் நாடு, 1898-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டை அமெரிக்காவுக்கு 20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஓர் தேசிய நிலப்பரப்பையும், அதன் மக்களை யும், அந்நிலத்து வளங்களையும் மொத்தமாய் விலைகுறித்து விற்க முடிந்த காலனியாதிக்க அராஜகத் திமிர்களை நினைக்க இப்போதும் எண்ணங்கள் சூடாவதை தவிர்க்க முடியவில்லை. அமெரிக்கர்கள் 1943 வரை தங்களால் முடிந்தமட்டும் இந்த நாட்டை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கினார்கள். இடையில் ஈராண்டு காலம் ஜப்பானியர்கள் வந்து 200 ஆண்டுகளில் செய்யவேண்டிய கொடுமைகளை செய்துமுடித்தார்கள்.
இந்தியர்களை பொதுவாக அவர்களுக்கு பிடிக் காது. காரம், மசாலா சாப்பிடுவதாலும் சிரத்தையின்மை யாலும் வியர்வை நாற்றம்/ உடல் நாற்றம் கொண்டவர் கள், சரியாகப் பல் விளக்கத் தெரியாதவர்கள், பண்புடன் உரையாடத் தெரியாதவர்கள், "எக்ஸ்யூஸ்மீ, ப்ளீஸ்...., வெரி சாரி..., தேங்யூ...' போன்ற குறைந்தபட்ச மரியாதை களைகூட மதிக்காதவர்கள், பேராசை பிடித்தவர்கள், கஞ்சூஸ்கள், சுயநலமிகள், "மீட்டர் வட்டி' தொழில் செய்கிறவர்கள் - என்பதுதான் நம்மைப் பற்றி அவர் களது பார்வை. பஞ்சாப்காரர்களும், சிறிதளவில் குஜ ராத்திகளும் பிலிப்பின்சில் "மீட்டர் வட்டி, பிளேடு வட்டி' தொழில் செய்து பாரத தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.
மணிலா நகர் சென்ற மூன்றாம் மாதத்தின் ஓர் வார இறுதியில் இந்த மலைநகரில் உயர் கல்வி பயிலும் தமிழ் நண் பர்களை சந்திக்க புறப்பட் டேன். எல்லோருமாக வெந்நீர் ஊற்றுக்குளம் ஒன்றில் இரவு முழுவதும் நீந்துவதாகத் திட் டம். புதிதாக வாங்கியிருந்த "நிசான் சென்ட்ரா' வாகனத் தை நானே ஓட்டிச் சென்றேன். நெடுஞ்சாலையில் தனியாக வாகனம் ஓட்ட எனக்குப் பிடிக்கும். இடையில் ஓர் சுங்கச் சாவடி வந்தது. வரிசையில் வாகனங்கள் நீண்டு நின்றன. அப்போதுதான் எனக்கு உறைத்தது, பர்சை வீட்டில் மறந்துவிட்டு வந்திருக்கிறேன். பத்து ரூபாய்கூட (அந்த நாட்டுப் பணத்தின் பெயர் பேசோ) என்னிடமோ வாகனத்திலோ இல்லை.
வயிறு குமைந்து உடல் வியர்த்தது. லக்சுரி வாகனம் ஓட்டிக் கொண்டு 40 ரூபாய் கையில் இல்லை என எப்படி விளக்கிச் சொல் வது? அவமானப்படுத்தப் படுவோம் என அடிவயிறு கலங்கியது. இந்தியர்களை அவர்களுக்கு பிடிக்காதென்பதும் எனக்குத் தெரியும். எனக்கு முன்னால் ஏழெட்டு வாகனங்கள் நின்றன. முன்நின்ற வாகனத்தில் ஏழைச் சிறுவன் ஒருவன் "பலூத்' விற்றுக் கொண்டிருந்தான். பலூத் பிலிப்பின்ஸ் மக்களின் குறிப்பிடவேண்டிய உணவு அடையாளம். முட்டை களை அடைகாத்து அவை குஞ்சாகப் பொரிந்து வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கொதிநீரில் வேக வைப்பார்கள். இளஞ்சதை, மூக்கு, முடியோடு தரப்படும் அந்த கோழிக்குஞ்சுதான் "பலூத்'. மேலாடை யின்றி கந்தலான காற்சட்டையோடு நின்ற அந்தச் சிறு வனை உயிர் நண்பன் போல் குரலெடுத்துக் கூப்பிட் டேன். சிறுவன் "மேலும் ஒரு கஸ்டமர்' என்று மகிழ்ச்சி யில் ஓடிவந்தான். ""நண்பா எனக்கு நீ பேருதவியொன்று செய்ய வேண்டும். பெரிய இக்கட்டில் இருக்கிறேன்'' என்று அவனது தாய்மொழி, ஆங்கிலம், மானுட இயற்கை உயிர் தொடங்கிய முதலாய் தந்த "சைகை' மொழி ஆகிய மூன்றும் இணைத்துக் கேட்டேன்.
""நான் என்ன செய்யணும் சார்...'' என்றான். ""நண்பா 40 பேசோ வேண்டும்'' எனப் பரிதாபமாக கேட் டேன். எனது 43 ஆண்டு வாழ்வில், இதய நினைவுகளின் மிகப்புனிதமான அறையில் நான் பாதுகாத்து வைத் திருக்கும் உன்னதமான கணங்களில் ஒன்றாக இன்று வரை இருக்கிற நிகழ்வு இது. தேவனின் காவல் தூதன் போல் நின்ற அந்தச் சிறுபிள்ளை கணப்பொழுதுகூட யோசிக்காமல் தன் கிழிந்த காற்சட்டை பைக்குள் கைவிட்டு 40 பேசோ எடுத்துத் தந்தது. இதனை எழுதுகிறபோது என் கண்கள் பனிப்பதை தவிர்க்க முடியவில்லை. அந்த 40 பேசோ அவனது "லாபம்' அல்ல- அடுத்த நாள் வாழ்வுக்கான ஆதாரமும், முதலீடும். கண்களை மூடிக்கொண்டு எனக்குள் இன்னமும் எஞ்சியிருக்கிற மனசாட்சியின் பீடத்தில் நின்று கொண்டு ஆன மட்டும் உரக்க சொல்ல விரும்புகிறேன் : ""உலகெங் கிலும் ஏழைகளே அதிக தாராள உள்ளம் கொண்ட வர்கள். எதிர்பார்ப்புகள் எதுமில்லா புனிதத்தோடு தங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளவும் இழக்க வும் தயாராக இருக்கிற உன்னதத்தை ஏழைகளிடம் தான் நான் அதிகமாகத் தரிசித்திருக்கிறேன்''. இயேசு நாதர் தன் சீடர்களுக்குச் சொன்னது எத்துணை உண்மையானது : "ஏழைகளை நம்புங்கள். அவர்கள் எப்போதும் உங்களோடிருப்பார்கள்.'
இன்றுவரை நான் மறக்கமுடியாத மாமனித ஆளுமை, கிழிந்த காற்சட்டையோடு எனக்கு 40 பேசோ தந்த அந்த பிலிப்பின்ஸ் நாட்டுச் சிறு பிள்ளைதான். வெந்நீர் ஊற்று குளத்தில் அந்த நாள் இரவைத் தின்றுவிட்டு அடுத்தநாள் மணிலா திரும்புகையில் அந்தச் சிறுவனை காத்திருக்கச் சொல்லி ஆயிரம் பேசோவும் புத்தாடைகளும் பரிசளித்து இல்லம் சேர்ந்தேன். அந்த தேவ தூதனின் பெயர் ரமோஸ்.
வேரித்தாஸ் வானொலி தமிழ் ஒலிபரப்பில் வியாழன்தோறும் மாலை வரும் கேள்வி - பதில் -நிகழ்ச்சி நேயர்களின் வரவேற்பினை பெற்ற ஒன்று. 1996 ஆகஸ்ட் மாத ஓர் வியாழக்கிழமையன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு நான் வழங்கிய பதில் என் வாழ்வின் மறக்க முடியாத முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாக அமைந்தது.
கேள்வி கேட்ட நேயரின் பெயர் நினைவில் இல்லை. அக்கேள்விக்கு பதில் சொன்ன அந்த வியாழக் கிழமைவரை விடுதலைப்புலி பற்றின நல்லெண்ணம் பெரிதாக எனக்கு இருந்ததில்லை. நான் மாணவனாய் மார்க்சீய ஈர்ப்போடு வளர்ந்தபோதும் எங்கள் குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் ஈடுபாடு கொண்டது. "காமராஜ் அப்பச்சி' எங்களுக்கெல்லாம் சிறு தெய்வம் போல. "அவசர சட்டம் அரபிக்கடலில்' கோஷம் சிலிர்ப்பு தந்தாலும் இந்திரா அம்மையாரை பெண்கடவுள் போல கண்ட மாணவக் காலம் என்னுடையது. அவரது கம்பீர நடையும், ஆங்கில உரைகளின்போது அவர் காட்டும் முக உறுதியும் காண "தூர்தர்சன்' இரவுச் செய்திக்காக அந்த நாட்களில் காத்துக் கிடப்போம். அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது சக மாணவர்களோடு பூந்தமல்லி கரையான் சாவடியில் கண்ணீர் ஊர்வலம் நடத்தினோம். தாங்கமுடியாத துயரத்தின் அக்கணத்தில் நெஞ்சுறுதி யோடு தாயின் உடலுக்கு இறுதி நெருப்பு எழுப்பிய ராஜீவ் காந்தியை நாட்டின் நம்பிக்கையாக கருதி அவருக்காகவும் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்த நாட்கள் உண்டு. எனில், நேயரின் கேள்விக்கு எனது பதில் எப்படி இருந்திருக்குமென நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
விடுதலைப்புலிகளை என் பதிலில் வெளுத்து விளாசினேன். நாட்டுக்கு நேரு- காந்தி குடும்பத்தின் பங்களிப்பு, தியாகங்களை எடுத்துச் சொன்னேன். ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை மனித வரலாறு மன்னிக்க முடியாத குற்றங்களில் ஒன்று என்பதாக எனது பதில் நிறைவுற்றது. அதே வேளை வழமையான ஒரு நிகழ்ச்சியாகத்தான் அந்த ஒலிபரப்பும் நடந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அப்பதிலுக்கு எதிர் பதிலாக 626 நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் 614 தமிழீழ இனிய இதயங்கள் எழுதியவை. உண்மையின் மற்றொரு பக்கத்தை செவிட்டிலறைந்து எனக்குக் காட்டியவை. அவற்றில் பருத்தித் துறையிலிருந்து சிவசங்கரி என்ற மாணவி எழுதிய கடிதம் மறக்க முடியாது. "சீறி நின்றாள் சிவசங்கரி' என்று தலைப்பிட்டு 15 நிமிட முழு நிகழ்ச்சியாய் நான் ஒலிபரப்பிய கடிதம். சிவசங்கரி இன்று இருக்கிறாரா, இல்லை தினம் நூறு தமிழ் உயிர் தின்னும் சிங்களப் பேரினவாதப் பசிக்கு அவரும் இரையானாரா? -தெரியவில்லை. ஆனால் மரணம் என்னைத் தேடி வருமுன் ஒருமுறை பருத்திதுறை சிவசங்கரியின் முகம் காண வேண்டும் என்பது என் ஆசை, வேண்டுதல்.
சிவசங்கரியின் கடிதத்தை இந்த தருணத்தில் தமிழ்ச்சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள காரணம் உண்டு. கொடுங்கோல் ராஜபக்சே சகோதரர்கள் நடத்தும் தமிழின அழிப்பு யுத்தம் வரலாறு கண்டி ராத கொடூர மூர்க்கத்தனத்துடன் நடந்துவரும் நாட்கள் இவை. இந்தியாவும் இந்த இன அழிப்பு யுத்தத்தில் மறைமுகமாகப் பங்கேற்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்து வருகிறது. ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை ஈழமக்கள் தொடர் பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடுகளில் முக்கிய பங்காற்றுவதால் அது குறித்த மிகுந்த பொறுப்புணர்வுடனானதொரு விவாதம் இன்று அவசியமாகிறது.
ராஜீவ் காந்தி படுகொலையை ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத குற்றச் செயல். அக்குற்றத்திற்கான நீதியை தேடும் உரிமை அவரை இழந்த குடும்பத்திற்கும், இறையாண்மை கொண்ட இந்த தேசத்திற்கும் உண்டு. அப் படுகொலையை நியாயப்படுத்துகிறவர்கள் மிகுந்த சிக்கலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகி நிற்கும் ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறார்கள். அதேவேளை அப்படுகொலை நடந்த சூழல், படுகொலையை சுற்றின சதி, படுகொலையை காரணமாகக்காட்டி ஒட்டுமொத்த தமிழின அழிப்பிற்கே துணைபோகும் இந்திய அரசின் ஏற்றுக் கொள்ள முடியாத அணுகுமுறை ஆகியவைப்பற்றி கேள்விகள் எழுப்புவதும், விவாதிப்பதும், நீதி கோருவதும் நமது ஜனநாயக உரிமைகள், கடமைகள். தெளிவான இப்புரிதலோடு முதலில் சிவசங்கரியின் கடிதம் பேசுவதை கேட்போம்:
(நினைவுகள் சுழலும்)

No comments: