7 Mar 2009

என் முதல் ஆதர்சம்! பகுதி-01

மேற்குத் தொடர்ச்சி மலை, செறிந்த சிறுகாடுகள், சற்றே விரிந்த மருத வயல்கள், மூன்று கடல்கள் நித்தியமாய் முத்தமிட்டுக் கிடக்கும் நீண்ட நெய்தல் என தமி ழகத்தின் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத நான்கு நிலச் செழுமை கொண்ட கன்னியாகுமரி மாவட் டத்தின் காஞ்சாம்புரம் என்ற சிற்றூரில் 43 ஆண்டுகளுக்கு முன்பு நானும் பிறந்தேன். தந்தையார் ஸ்ரீபத்மநாபன், பத்திரகாளி அம்மைக்கு கோயில் கட்டி வழிபட்ட குடும்பம். எனக்கு ஜாதகம் கூட எழுதி வைத்தி ருந்தார். திருவோண நட் சத்திரம், 27-ல் கண்டம், அது கடந்தால் 67 வரை ஆயுசு கெட்டி என்றெல்லாம் ஜாதக சிறு குறிப்புகள் படித்ததாக நினைவு.
எல்லாம் நலமா யிருந்த என் பிள்ளைப் பருவம் ஏழாம் வயதில் தந்தையாரின் இழப் பினை சந்தித்தது. தன் னை உருக்கி என்னை ஆளாக்கிய என் தாய் மரிய புஷ் பம் 27 வய தில் விதவை யானாள். எளிமையை மட்டுமே ஆபரணமாகக் கொண்ட அவள் இன்றுவரை என் முதல் ஆதர்சம். "கட்டிடம் கட்டிடும் சிற்பிகளாம்... கட்டிடுவோம் கிறிஸ்து ஏசுவுக்காய்' என ஒருபுறமும் "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா' என மறுபுறமும் கேட்கும் பாடல்களுடன் பலரும் என் பால்ய காலத்தின் மென்மையான விடியற்காலை பொழுதுகள் மறக்க முடியாதவை.
தொல்காப்பியர் தன் படைப்பை சமர்ப்பணம் செய்த மூத்த வித்தகன் அத்தங்கோட்டு ஆசான் பிறந்ததாகக் கருதப்படும் ஊர் எங்கள் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலை. இலங்கைக்கு கூட்டிச் செல்லுமுன் சீதையை ராவணன் சிறை வைத்து ஓய்வெடுத்து ஒப்பாரி முடிக்கச் செய்ததாகச் சொல்லப்படும் ஊர் எங்களுக்கு 3 கி.மீ. அருகில்தான் உள்ளது. அகத்திய மலையின் உச்சியில் உருவாகி மேற்காகப் பயணித்து நெல்லைச் சீமையை வளப்படுத்தும் தாமிரபரணி யை தமிழும் தமிழுலகமும் அறிந்த அளவுக்கு அதே அகத்திய மலை உச்சியில் ஊற்றெடுத்து கிழக்குத் திசை பயணம் கொண்டு குழித்துறை வழி தேங்காய்ப்பட்டினத்திற்கும் இரயுமன்துறைக்கும் இடையே அரபிக்கடல் சேரும் தாமிரபரணி ஆற்றை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். அரபிக்கடல் சேரும் முன் இந்த கிழக்கு தாமிரபரணி பெருத்து தங்கி ஓய் வெடுக்கும் ஊரும் எங்கள் ஊர் பக்கம்தான். தசாவதாரம் திரைப் படத்தில் வராக அவதாரமாய் கண்ணியச் சீற்றம் கொண்டு வரும் பூவராகன் பேசும் தமிழ் எங்கள் பகுதிக்குரி யது. 2500 ஆண்டு பழமை கொண்ட கோதேஸ்வரம் கோயில், சித்த வைத்தியம், சிறு தெய்வங்கள், சிலம்பம், களரி, வில்லுப்பாட்டு, செண்டை மேளம் என சொல்லுவதற்கு எங்கள் பகுதிக்கும் ஏராளம் விஷயங்கள் உண்டு.
எங்கள் தாமிரபரணி கடல் சேரும் இரயுமன் துறை தொடங்கி தூத்தூர் வரையான மீனவ குடியிருப்புகளின் தொடர்ச்சியாய் கொல்லாம்பழ மரக்காடுகளாலான அகன்ற கடல் மணற்பரப் பொன்று உண்டு. இரவில் பேய்கள் உலவும் பகுதியெனப் பேசிக் கொள்வார்கள்.
இப்போது அப்பகுதி கான்கிரீட் காடாகிக் கிடக்கிறதென்பது வேறு விஷயம். இம்மணல் வெளி நடுவில் நின்ற "பரக்குடி அரசு ஆரம்ப பள்ளி' தான் என் முதல் பல்கலைக்கழகம். பகல் நேரத்தில் பேய்களுக்கு சக்தி இருப்பதில்லை என்ற திடமான நம்பிக்கையோடு கொல்லாம்பழ மரக்காடுகளில் வெள்ளெலிகளை விரட்டுவதும், விழுந்து கிடக்கும் முந்திரிக்கொட்டைகளை பொறுக்கி சுட்டுத் தின்பதும் தொடக்கப் பள்ளிக்காலத்தின் மிச்சங்களாய் இன்றுவரை நிற்கும் சுகமான நினைவுகள்.
"சாம்ராட் அசோகன்' "சத்ரபதி சிவாஜி' "மாவீரன் நெப்போலியன்' என்றெல்லாம் மாதம் ஒருமுறை மணல் வெளியில் நாடகம் நடத்தி என் தமிழ் காதலுக்கு கால்கோள் விழா நடத்திய எங்கள் தமிழாசிரியர் ராமச்சந்திரன் அவர்களை என்னால் மறக்க முடியாது. அவ்வப்போது என் மனத்திரையில் வந்து போகும் முகம் அந்த என் தமிழாசிரிய ருடையது. பின்னர் நான் படித்த ஏழுதேசப் பற்று, நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி, சென்னை திரு.இருதய குருத்துவக் கல்லூரியில் எனக்கு தமிழ் கற்பித்த லொயோலா கல்லூரியின் அடைக்கலசாமி வரை என் தமிழாசிரியர்கள் வகுப்பில் பெரும் பகுதி நேரம் "கதை'யாடு வார்கள். சற்று நேரம் பாடமும் நடத்து வார்கள். ஆனால் திரும்பிப் பார்க்கை யில் அவர்களின் கதையாடல் கள்தான் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் என்னை தொடர்புபடுத்தி இணைத்திருக்கிற தென்பதை உணர்கிறபோது நெகிழ்வாலும் தூய நன்றியுணர்வாலும் நெஞ்சம் பணிகிறது. ஆசிரியர்கள் பொது வாகவும் தமிழாசிரியர்கள் குறிப்பாகவும் சமூக மாற்றத்தின் கிரியா ஊக்கிகளாக இயங்க முடியுமென்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது. ஆசிரியர்களின், சிறப்பாக தமிழாசிரியர்களின் சமூக முதன்மையை நாம் மீட்டுத்தரவேண்டுமென்ற வேட்கை எழுகிறது.
நான் ஏழுதேசப்பற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த ஆண்டு எங்கள் ஊர் வீதி அல்லோலப்பட்டது. பள்ளி விட்டுத் திரும்பும் மாலையில் அவ்வப்போது செஞ்சட்டை அணிந்த மார்க்சிஸ்டுகளின் ஊர்வலங்களால் வீதி களைகட்டி நிற்கும். "அவசர சட்டம் அரபிக்கடலில்' "இன்குலாப் சிந்தாபாத்' என நரம்பு முறுக்கேறி அவர்கள் எழுப்பிய முழக்கத்தின் உணர்வெழுச்சி அவசர சட்டமும் அரபிக்கடலும் தெரியாத எனக்குள் அக்கணங்களில் எழுப்பிய மின்னல் வெட்டுக்களை இப்போதும் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. ஆறாம் வகுப்பில் மார்க்சிஸ்டுகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பின்னர் கார்ல் மார்க்ஸ்-ஐ ஆழமாகப் படிக்க உதவியது. எனது தத்துவ இயல் படிப்பின் ஆய்வுத்தாள் கூட கார்ல் மார்க்ஸ்- ஹெகெல் (ஐஊஏஊக) இருவரின் பொருள் முதல்வாத இயங்கியலை ஒப்பீடு செய்து பேராசிரியர் களின் பாராட்டினைப் பெற்றது. எங்கள் பகுதியில் மார்க்சிஸ்டுகள் அமைத்த படிப்பக மும், இலக்கிய மேடைகளும் என் போன்ற பல இளைஞர்கள் பக்குவப்பட உதவின. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் இன்றைய மார்க் சிஸ்டுகளின் நெஞ்சறிந்த கயமையும், துரோகமும் உணர்வளவில் அக்கட்சியோடு இடைவெளி கொணர்ந்தாலும் அடித்தட்டு மக்களின் அரசியலுக்கு அவர்களின் தேவை யை எவரும் நிராகரிக்க முடியாது.
மாணவ வயதிலிருந்தே மதவெறி பிடித்துத் திரிவோரையும், கடவுளையும் மூட நம்பிக்கை களையும் வைத்து வியாபாரம் செய்வோரையும் கண்டால் அப்படியொரு ஆத்திரம் உள்ளுக்குள் பொங்கும். கண் காண முடியாத கடவுளைப் பற்றி முழுதாகத் தெரிந்தவர்கள் போல் பேசித் திரியும் மூடர்களைக் கண்ணுற நகைப்பே மிஞ்சும். மட்டுமல்ல மனசாட்சியை கடைசி மட்டும் கொன்று விட்டவனால் மட்டுமே கடவுளை விற்பனை பொருள் ஆக்க முடியுமென்பது என் எண்ணம். எல்லா மறைநெறிகளிலும் நல்லன சிதறிக் கிடக்கின்றன. எனவே இந்து மதத்திலிருந்து கிறித்துவர், இசுலாமியர்களும், கிறித்துவ மறையிலிருந்து இந்து-இஸ்லாமியர்களும், இசுலாமிய மார்க் கத்திலிருந்து கிறித்தவர்-இந்துக்களும்- இவர்கள் எல்லோருமே கார்ல் மார்க்ஸ், பெரியார், நவீன சமூக விஞ்ஞானிகள் போன் றோரிடமிருந்தும், கடவுள் மறுப்பாளர்கள் எல்லா மதங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். உரையாடும் பண்பாடு நம்மிடை வளர வேண்டும். உரையாடல் புதியனவற்றை நோக்கி நம்மை வழிநடத்தும்.
இசைஞானி இளையராஜா அவர் களை சிங்கப்பூர், ஹங்கேரி, நியூயார்க் நகரங் களுக்கெல்லாம் கூட்டிச் சென்று, ஒன்றரை கோடி ரூபாய் கடன்பட்டு மாணிக்க வாச கர் எழுதிய திருவாசகத்தை சிம்பொனி இசை பின்னணியோடு உருவாக்கிய பணியில் நான் முன் நின்றமைக்குக் கார ணம் மறைகள்- நம்பிக்கைகள் -கருத் தியல்கள் ஒன்றோடொன்று உரை யாட வேண்டுமென்பதில் எனக்கிருக் கும் ஆழமான நம்பிக்கை, இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து நாங்கள் தயாரித்த "சிம்பொனியில் திருவாசக' அனுபவம் என் வாழ் வில் மிகவும் மறக்க முடியாத அனு பவம். காலம் முழுவதும் மறக்க முடியாத இனிமையும் கசப்பும் என இருவித அனுபவங்களையும் அது தந்தது.
"சிம்பொனியில் திருவா சகம்' இசையில் வருகிற சில பாடல்களை சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் தங்கி இளையராஜா இசை அமைத்தார். அவரோடு நானும் சென்றி ருந்தேன். அவர் ஏன் "இசை ஞானி' என்பதை நேரில் கண்டு வியந்த நாட்கள் அவை. அதிகாலை எழுந்து இசை எழுத அமர்கிறவர் உணவு, இயற்கை இடைவேளைகள் தவிர்த்து இரவு 10 மணி வரை ஒரு தவயோகிபோல் அமர்ந்து எழுதுவார். நெறி செய்யப் பட்ட அன்றாட வாழ்வையும் இடைவிடாத உழைப்பை யும் ஒவ்வொரு தமிழனும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். "பொல்லா வினையேன்' என்ற பாடலில் வருகிற "மாசற்ற ஜோதி மலர்ந்த மலர் சுடரே' சரணத்திற்கு காலை முதல் இரவுவரை சிம்பொனி எழுதினார். அவர் முகத்தில் நிறைவு தெரிந்தது. "நல்லா வந்திருக்கு ஃபாதர்' என்றார். பொதுவாக இசைஞானி அவர்கள் தனது இசையைப் பற்றி அதிகம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அன்றைய தின இசை ஆக்கத்தில் அவருக்கே ஒரு "த்ரில்' இருந்ததை என்னால் உணர முடிந்தது. அடுத்த நாள் காலை அவரது அறைக்கதவை நான் தட்டிய போது அவர் பின்புறமாய் நின்று மைனா, குருவிகளுக்கு உணவு தூவிக்கொண்டிருந்தார். சென்டோசா தீவில் அவர் தங்கியிருந்த நாட்களில் தினமும் நான்கைந்து மைனா குருவிகள் அவரைப் பார்க்க அதிகாலைதோறும் வந்து கொண்டிருந்தன. மைனாக்களுக்கு உணவு தூவிய பின் கொஞ்ச நேரம் அதிகாலை சூரியனையும் கடலுமாக பார்த்துக்கொண்டிருந்தவர் அறைக்குள் வந்து முந்தைய நாள் ""மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே'' வரிகளுக்கு எழுதிய நீண்ட சிம்பொனி இசைக் குறிப்புகளை நிரா கரித்து தூரப்போட்டார். ""ஏன் சார்?'' என்றேன். ""இல்ல... நேத்தைக்கு எழுதினது நல்லாதான் இருக்கு. ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணலாமேன்னு இப்ப தோணுது'' என்று முற்றிலும் புதிதாக எழுத ஆரம்பித்தார்.
50 ஆண்டுகள் இசையிலே மூழ்கி வாழ்ந்த பின்னரும்கூட தொடர்ந்து முழுமை தேடிக்கொண்டே இருக்கிற இடைவிடாத தேடலும் உழைப்பும்தான் இசைஞானி அவர்களை அத்தனை கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக நிறுத்துகிறது. அதைவிடவும் வியப்பும் மெய்சிலிர்ப்பும் என்னவென்றால் இசைக்கருவிகளின் துணையின்றியே அவர் இசை எழுதும் லாவகம், அவரது இசைக் கருவிகளின் கரம் தழுவி உருவாக்கப்படுவதல்ல. அவரது மனவெளியில் இசை உலவித் திரிகிறது. கண்கள், காதுகள், கருவிகள் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஆயிரம் பூக்களாய் அது ஓர் நந்தவனம்போல் அவருக்குள் பூத்துக்கிடக்கிறது. அவற்றில் சிலவற்றை அவ்வப்போது பூச்செண்டாக, மாலைகளாக ஆக்குகிறார். சிம்பொனியில் திருவாசகம் உருவானதும் அப்படித்தான். இசையைப் பொறுத்தவரை இசைஞானி வாராது வந்த மாமணி, மனித வரலாறு தந்த மகத்தான இசைமேதைகளில் ஒருவர். எனினும் அவர் அகில உலக நாயகனாய் கொண்டாடப்படாமற்போனது ஏன்?
(நினைவுகள் சுழலும்)

No comments: