12 Mar 2009

அந்த ஈழத்து பிள்ளைகளா பயங்கரவாதிகள் பகுதி-02



சைவப் பேருலகத்தின் உச்சாடனங் களில் எனக்கு மிகவும் பிடித்தது "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்ற மந்திரம். "தென்னகத்தில் அவனை சிவன் எனப் பெயரிட்டு அழைக்கிறோம். ஏனைய உலகினர் அவனை "இறைவன்' என்று அறிகின்றனர் என்பதாக அர்த்தப்படும் உச்சாடனம் அது. சிவபுராணத்தில் "மாணிக்க வாசகர், ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க' என்பார். அதாவது ""ஒருவனாக இருக்கிற இறைவன் -உலகினரால் பலராகப் பார்க்கப்படுகிறவன்!' இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். கலைஞர், ஜெயலலிதா, ராமதாசு, வைகோ, விஜயகாந்த், தங்கபாலு என நம்மூர் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் போல் பரலோகத்திலும் ஏகப்பட்ட கடவுளர்களென்றால் நிலைமை எப்படியிருக்குமென கற்பனை செய்து பாருங்கள்?!
தென்னாடுடைய சிவனுக்கு சிம்பொனியில் பின்னணி இசைத்தது ஹங்கேரி நாட்டின் "புத்த பெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா'. ஐரோப்பாவின் பழமையானதும் பெருமை மிக்கதுமான இசைக்குழுக்களில் ஒன்று இது. 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஹிட்லரின் நாஜிப்படைகள் மேற்கு ஐரோப்பாவை துவம்சம் செய்த காலத்தில்கூட அகதி இசைக்குழுவாய் கட்டுக்கோப்பு காத்த பாரம்பரியம் கொண்டது. 146 பேர் கொண்ட இக்குழுவை லஸ்லோ கோவாக்ஸ் என்பவர் இப்போது இயக்குகிறார். 32 வாத்திய வகையோடு இவர்கள் இசை மீட்டும் நேரம் மலர்களும், தென்றலும், மேகங்களும் மட்டுமே வாழ்கிற பூமியில் எதிர்பாராது தரையிறங்கிய அனுபவமாக இருக்கும்.
புத்தபெஸ்ட் நகர் ஷெரட்டன் விடுதியில் நாங்கள் எல்லோரும் தங்கியிருந்தோம். புலர்ந்தால் இசைப்பதிவு. முன்தினம் முழுதும் இயக்குநர் லஸ்லோ கோவாக்சுடன் அமர்ந்து இசைஞானி திட்டமிட்டிருந்தார். இரவு உணவுக்குப் பின் இசைஞானி அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். கர்ம வினையில் முழு நம்பிக்கை கொண் டவர் இசைஞானி. கர்மவினை உண்மையாகவே இருந்தாலும் 80 கோடி ஏழை மக்களையும், ஏகப்பட்ட மூடமைகளையும் கொண்ட நமது நாட்டிற்கு அக்கோட்பாடு சரிப்பட்டு வராதென்பது எனது நிலைப்பாடு. உரையாடல் விவாதமாகி, விவாதம் பக்குவமான வாக்குவாதமாக சூடேறிக் கொண்டிருந்தது.
"நீங்கள் மாணிக்க வாசகருக்காக ஊர் சுற்ற வேண்டுமென் பது உங்கள் கர்மா' என்றார். "மகிழ்ச்சி' என்றேன். "உங்க ளோடு பேசி என் நேரத்தை வீணடிக்க வேண்டு மென்பது எனது கர்மா' என்றார். "மிகவும் மகிழ்ச்சி' என்றேன். இப்படியே போன வாக்குவாதம் மாணிக்க வாசகரின், பக்தி இலக்கியங்களின் "அருள்நெறி' தத்துவத் தளத்திற்கு நகர்ந்தது. கிறித்துவ அருள்நெறியில் மிகவும் ஆழமான ஈர்ப்பு கண்டு ஈடுபாடு கொண்டவன் நான். கிறித்துவ அருள் நெறியின் அடியோட்டங்களை சைவ-வைணவ பக்தி இலக்கியங்களிலும் நான் அனுபவித்திருக்கிறேன்.
வாக்குவாதத்தில் இசைஞானியை வெல்வது எளிதல்ல. அவரது வாதங்கள் யதார்த்தமாகவும் கூர்மையாகவும் இருக்கும். ஆனால் அவருக்கு நான் வைத்த ஒரு கேள்வி திடீரென நிலைமையை சூடாக்கியது. ""சார்... கர்மா உண்மையென்றே கொள்வோம். ஆனால் இறையருள் விரும்பின் இக் கணமே தலைமுறைகள் சுமக்கும் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்து வினைகளிலிருந்து விடுதலை தர முடியுமல்லவா? எனில் கர்மாவை விட இறையருள்தானே பெரிது? என்றேன். ""தயவு செய்து போய் தூங்குங்க ஃபாதர். இதுக்கு மேலே இருந்தீங்கன்னா நாளைக்கு ரெக்கார்டிங் கெட்டுப் போகும்'' என்றார். அமைதியாக நான் எனது அறைக்கு நகர்ந்தேன்.
அன்றிரவு "அறிவுத் திமிர் பிடித்து அலைகிறது ஒன்று...' என அழகாக என்னைத் திட்டி வெண்பா கவிதையொன்று எழுதி தன் கோபம் தீர்ந்த பின்னர்தான் தூங்கச் சென்றிருக்கிறார் இசைஞானி. இசைக்கு நிகராக வெண்பாவில் அவர் செய்யும் வித்தகங்களை தமிழுலகம் அறியவில்லையே என்ற ஆதங்கம் இப்போதும் எனக்கு உண்டு. என்னை திட்டி எழுதிய கவிதையை அடுத்தநாள் அவர் எனக்குத் தரவில்லை. பத்திரமாகத் தன் பையில் வைத்திருந்து, இசைப்பதிவெல்லாம் முடிந்து இந்தியா திரும்பும் வழியில் ஜெர்மனி நாட்டு பிராங்க்பர்ட் விமான நிலைய "டியூட்டி ஃப்ரீ' கடையில் இனியதொரு அன்பளிப்பை வாங்கித் தந்துவிட்டு, "இந்தா இந்தக் கவிதையையும் வைத்துக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தார். இன்றும் அக்கவிதையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அவ்வப்போது படித்து சிரித்துக்கொள்வேன்.
இசை ஆக்கம் நிறைவுற்றபின் முதற்பிரதியை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய், திரு.அத்வானி ஆகியோருக்கு நேரில் சென்று கொடுத்தோம். குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓர் மூத்த சகோதரர்போல் இசைஞானி யின் கரம் பற்றி தான் உட்கார்ந்து தமிழ் எழுதும் மர நிழலை டாக்டர் அப்துல் கலாம் காட்டியதும், தனது மேஜை கணினியில் திருவாசகம் இசைத் தகடை எங்கள் எதிரிலேயே கேட்டு ரசித்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்.
"சிம்பொனியில் திருவாசகம்' தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து இசைஞானி திருவாசகம் போன்ற ஆக்கங்களை தருவார் என்ற எதிர்பார்ப்பும், தரவேண்டுமென்ற அன்புக் கோரிக்கைகளும் பல திசைகளிலிருந்தும் எழுந்தன. ஆனால் பலரும் எதிர்பார்த்தபடி "திருவாசகம்' அதுபோன்ற புதிய ஆக்கங்களுக்கான திருப்புமுனையாக அமையவில்லை. ஏற்கனவே இசைஞானி படைத்திருந்த பல்லாயிரம் அற்புதமான பாடல்கள் வரிசையில் மேலும் ஒரு முத்தான படைப்பாக நின்றுவிட்டது. கடந்த இதழில் ஏன் இளையராஜா அகில உலக நாயகனாக கொண்டாடப்படவில்லை என எழுப்பியிருந்த கேள்விக்கான பதிலும் அதில் உள்ளது.
இசைஞானி இளையராஜா போன்ற அதிசயப் பிறவிகளின் முழுத் திறமையும் வெளிப்பட நிதி செலவிடும் அறக்கட்டளைகளோ, வர்த்தக நிறுவனங்களோ நம்மிடையே இல்லை. தப்பித் தவறி எங்களைப் போன்ற தனிநபர்கள் முயற்சி செய்ய முன்வரும்போது அதை மதித்துப் போற்றுகிற தகைமையும் அவரிடம் இல்லை. என்னைக் கேட்டால் படைப்பாளி வர்த்தகம் தொடர்பானவற்றில் நேரத்தை வீணடிக்காதிருப்பது நல்லது. திருவாசகத்தின் இன்னொரு பக்க கதையை ஓரிரு வரிகளில் சொல்வதானால், இத்திட்டத்தை நிறைவு செய்ய ஈராண்டு காலம் வேறெந்த வேலையும் செய்யாமல் ஒரு பிச்சைக்காரன்போல் நன்கொடை கேட்டு கேட்டு ஊரெல்லாம் அலைந்தேன். உரிய பணம் கிட்டாததால் நிறைய கடன் வாங்கி னேன், அதை வெளியீடு செய்யுமுன் பரிதாப மான ஒரு மனிதனாய் நூறு முறையாவது இசைஞானியின் வீடு, பிரசாத் ஸ்டுடியோ என அலைந்தேன். அதை வெளியீடு செய்த வெல்கேட்ஸ் என்ற டுபாக்கூர் நிறுவன உரிமை யாளர்கள் நான்கு மாநில போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள், திருவாசகத் திற்கான வெளிநாட்டு விற்பனை உரிமை இன்றுவரை எவருக்கும் கொடுக்கப் படவில்லை. முதலீடு செய்து உழைத்த எங்களிடம் அந்த இசைக்கான எந்த உரிமையும் இன்று இல்லை''.
இசைஞானி அவர்களுக்கு கடிதமொன்று எழுதிக் கொடுத்துவிட்டு பிரிந்தேன். அக்கடிதத்தின் நிறைவு வரிகள் இவை: ""இசைஞானி அவர்களே, மீண்டும் என் வாழ்நாளில் உங்களை சந்திக்காதிருக்கவே விரும்புகிறேன். ஒருவேளை சந்திக்க நேரின் உங்கள் மீது வெறுப்பேதும் எமக்கு இல்லை என்பதை உணர்வீர்கள்''.
ஹங்கேரி நாட்டில் இசைப்பதிவு முடித்து இந்தியா திரும்புமுன் ஜெர்மனி நாட்டில் குடிபுகுந்து வாழும் ஈழத்தமிழ் அறிவுஜீவி அருட்திரு.எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களை தரிசிக்கச் சென்றேன். 76 வயதில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார். அவர் தனது வாழ்வு பயணத்தை மாற்றிய அனுபவமொன்றை அப்போது என்னுடன் பகிர்ந்து கொண்டார். தமிழுலகோடு நக்கீரனூடாக அவரின் அந்த அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இன்று ராஜபக்சேபோல் 1995-ல் சந்திரிகா குமாரதுங்கே. அதிபர்களின் பெயரும் காலமும் மாறுமேயன்றி தமிழர் அழிப்பில் சிங்களப் பேரினவாதம் கடந்த 30 ஆண்டுகளாய் இடைவிடாத அசுரத்தனத்தை கடைபிடித்து வந்துள்ளது. 1995-ல் பெரும் எடுப்பில் முப்படைகளையும் திரட்டி யாழ்ப்பாணத்தை பிடிக்கப் புறப்பட்டார் சந்திரிகா. குறைந்தது 50,000 மக்கள் மடியக் கூடும் என்ற அச்சத்தில் யாழ்ப்பாண மக்களை வன்னிக்கு நகரும்படி விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த முடிவை அன்று யாழ்ப்பாண திருச்சபையில் பெரிய பதவி வகித்த அருட்திரு. எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களிடம் சொல்ல இரண்டு பெண்புலிகள், 19-20 வயதிருக்கும்... வருகிறார்கள். கபடற்ற சிறுபிள்ளைத்தனத்தோடு வந்தவர்கள், ""ஃபாதர், நீங்களும் வெளிக்கிடோணும்'' என்கிறார்கள். முதலில் முடியாது என்கிறார் ஃபாதர். ஆனால் பெண்புலிகளின் கள்ளமற்ற பிள்ளைத்தனமான உரையாடலில் மனம் நெகிழ்ந்து வெளியேற ஒத்துக் கொள்கிறார்.
தன் உடைமைகளையெல்லாம் மூட்டை கட்டுகிறார். விளக்குமாற் றைக் கூட விட்டு வைக்கவில்லை. மூட்டை கட்ட பெண்புலிகளும் உதவு கிறார்கள். சுமார் மூன்று மணி நேர உரையாடலில் அந்தப் புலிப்பிள்ளை களை இவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தன்னிடம் இருந்த இரு விலை உயர்ந்த பேனாக்களை நினைவுப் பரிசாக அப்பிள்ளைகளுக்குத் தருகிறார். பெற்றுக்கொண்ட வேகத்திலேயே ஃபாதரிடம் திருப்பிக் கொடுக்கிறார்கள் இருவரும். ஒரு பிள்ளை திருப்பிக் கொடுக்கையில் இவ்வாறு சொன்னதாம். ""ஃபாதர் எங்கட வாழ்க்கை இன்றைக்கோ, நாளைக்கோ... அடுத்த வாரம் ஆமி (ஆழ்ம்ஹ்) வந்திடுவான். நாங்க பெரும் பாலும் உயிரோட இருக்கமாட்டம். எங்களுக்கு எதுக்கு ஃபாதர் இந்த வடி வான பேனா? நீங்களே வச்சிருங்கோ. வேறெ ஆருக்காவது பிரயோசனப்படும்''.
ஃபாதர் இம்மானுவேல் தனியாக அறைக்குச் சென்று அழுதார். ""27 ஆண்டு காலம் துறவியென்று வாழ்ந்த என்னால் ஒரு விளக்குமாற்றைக் கூட விட்டுச் செல்ல மனம் வரவில்லை. 19, 20 வயதில் ஒரு பேனாவோடு கூட பற்று வைத்துக்கொள்ள விரும்பாத இந்தப் பிள்ளைகளின் முன்னால் எனது துறவு ஒரு கபட வேடம்'' என்று தனக்குத்தானே சொல்கிறார். இந்த ஈழத்து பிள்ளைகளையா உலகம் பயங்கரவாதிகள் என்று சொல்கிறது? என்ற கேள்வி அவரது சமூக மனசாட்சியை குத்திக் கிழித்துப் பிறாண்டியது. அன்று அவர் உயிரில் எழுந்த ஈழ முழக்கம் இன்றும் அணையாது உலகின் பல அரங்குகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வோடும் அனுபவங்களோடும் எனக்கு எவ்வாறு நேரடி அறிமுகம் வந்ததென்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
(நினைவுகள் சுழலும்)

No comments: