15 Mar 2009

இந்த புண்ணிய பூமியில்..!பகுதி-03ஈழத்தமிழ் மக்களின் வீரம், தியாகம், வலிகள் நிறைந்த சமகால வரலாற்றுடன் என்னை நேரடியாக இணைத்த "வேரித்தாஸ் வானொலி' நிலையம் பிலிப்பின்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில் உள்ளது. 17 ஆசிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யும் இந்த அனைத்துலக வானொலியின் தமிழ் பிரிவிற்கு 1995-ம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன். மணிலா நகருக்கு என்னை அனுப்பி வைத்தது குமரி மாவட்டத்திலுள்ள மணலிக் குழிவிளை என்ற கிராமம். மணிலா வாழ்வையும் ஈழத்தமிழ் மக்களோடான எனது அனுபவங்களையும் ஆரம்பிக்குமுன் மக்கள் அரசியல், நீதி அமைப்பு, மக்கள் போராட்டம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தன்மைகளை எனக்கு கற்றுத் தந்த மணலிக் குழிவிளையைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும்.
146 கிறித்துவக் குடும்பங்களையும் தூய மிக்கேல் அதிதூதர் கோயிலையும் கொண்டிருந்த மணலிக்குழி விளை ஊருக்கு 1991-ல் நான் பொறுப்பேற்ற போது குமரி மாவட்டத்தின் "குட்டி அயோத்தி' என்று பிரபல்யம் பெற்றிருந்தது. பாபர் மசூதியை இடித்ததுபோல் 1992 செப்டம்பர் நள்ளிரவில் தூய மிக்கேல் அதிதூத ரும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்! காவல் துறையினர் வந்து சேருவதற்கு முன்னரே காலை புலர்வதற்குள் ஊரில் இருந்த செங் கற்கள், தென்னை ஓலைகள் கொண்டு தற்காலிக கோவிலொன்றை பல்லாயிரம் மக்கள் முன்னின்று எழுப்பிவிட்டதால் அது அயோத்தி போல் "நீண்ட சர்ச்சைக்குரிய' இடமாக மாறவில்லை, மதக் கலவரமும் தவிர்க்கப்பட்டது. செங்கிஸ்கானின் படையணிபோல் மின்னல் வேகம் காட்டி மூன்று மணிநேரத்தில் தற்காலிக கோயிலை எழுப்பிய பக்கத்து ஊரான என் அன் பிற்குரிய சகாயநகர் மக்களை நான் காலம் முழுதும் மறக்க முடியாது.
முன்னாள் மத்திய அமைச்சரும், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவரும், தனிவாழ்வில் மிகுந்த பண் பொழுக்கம் பேணும் மதிப்பிற்குரியவரு மான திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்தான் எங்கள் எதிரணிக்குத் தலைவர். கோயிலில் வழிபாடுகளை நிறுத்தக்கோரி அவ்வப்போது போராட்டம் நடத்த வந்துவிடுவார். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முற்று முழுதாய் அவர்களோடு நின்றது. திருமணம், மரணம் போன்ற உணர்வோடு தொடர்புடைய சடங்கு களைக் கூட மணலிக்குழிவிளை கோயிலில் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. கண்டன ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தோம். திக்கணங்கோடு சந்திப்பிலிருந்து ஊர்வலம் தொடங்குவதாக ஏற்பாடு. காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மீற முடிவு செய்தோம்.
இந்திய வரலாற்றில் கிறிஸ்தவர்கள் தடை உத்தரவை மீற முடிவெடுத்தது அதுவே முதல்முறை. தடைமீறும் துணிவெல்லாம் பொதுவாக கிறித்துவர்களுக்கு இல்லாததால் அதிகபட்சம் 500 பேர் வரக்கூடும் என எதிர்பார்த்தோம். காவல்துறையும் அவ்வாறே கணித்து கைது செய்து கொண்டு செல்வதற்காய் 10 பேருந்து களை நிறுத்தியிருந்தது. நான்கு புறமிருந்தும் சாலைகளை மூடவும் செய்தார்கள். 4 மணிக்கு ஊர்வலம் புறப்படுவதாய் திட்டம். 4.15-க்கு திக்கணங்கோடு சந்திப்பில் ஒன்றரை லட்சம் மக்கள் திரண்டிருந்தார்கள். சாலைகள் மூடப்பட்டிருந்ததால் குளம், கால்வாய், குன்றுகள், வயற்பரப்பெல்லாம் கடந்து வந்திருந்தார்கள். அப்படியொரு ஆவேசக் கனலை மக்களிடையே உணர முடிந்தது. வெறும் 500 பேரை நாங்கள் எதிர்பார்த்திருக்க ஒன்றரை லட்சம் பேர் திரண்டதில் திக்கு முக்காடிப் போனோம். தடையை மீறினால் தடியடி, துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவோடு சுமார் 1000 காவல் துறையினர் அணிவகுத்து நின்றனர்.
போதாக்குறைக்கு இளைஞர் கூட்டம் கையெறிகுண்டுகளை உயர்த்திக்காட்டி ""பயப்படாதீங்க ஃபாதர்... ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்'' என்று கூக்குரலிட்டு உள்ளுக்குள் உதறலெடுக்க வைத்தார்கள்.
கொஞ்சம் பேரையே எதிர்பார்த்ததால் ஒலிபெருக்கி ஏற்பாட்டினைக் கூட நாங்கள் செய்திருக்கவில்லை.
எங்கள் நல்ல நேரம் திக்கணங்கோடு சந்திப்பிலுள்ள ஓர் கட்டிடத்தின் முதல் மாடியில் ஒலிபெருக்கி சேவை வாடகைக் கடையொன்று இருந்தது. அவசரமாக அம் முதல் மாடியிலேயே குழல்களை கட்டி மக்களை அமைதிப்படுத்த முயன்றோம். மக்களின் ஆவேசம் எவ்வகையிலும் அடங்குவதாக இல்லை. அன்றைய மாநில அரசு மீதும் மாவட்ட நிர்வாகம் மீதும் அந்த அளவுக்கு கோபம் மக்களிடையே இருந்திருக்கிறது. எனக்கோ நாடி நரம்பெல்லாம் அச்சத்தின் பிடி. துப்பாக்கிச் சூட்டினை தவிர்க்க முடியாதோ... எத்தனை உயிர்கள் இழக்கப் போகிறோமோ... கூடி வந்திருந் தோரில் பாதிப்பேர் பெண்கள்... ஒருவருக்கு ஏதேனும் நடந்தால்கூட காலம் முழுதும் அக்குற்றப்பழி உணர்விலிருந்து விடுபட முடியாது... இயேசுவே, மாதாவே இரக்கம் கொள்வீர்... இங்கிருக்கும் எல்லோரும் பத்திரமாய் வீடு திரும்ப வேண்டும்.... நான் பேச சக்திகொடு- என்று மனம் பதறி மன்றாடியபடியே ஒலிபெருக்கி முன் நின்றேன். சற்றேறக் குறைய ஒரு மணிநேரம் பேசியிருப்பேன். என் வாழ்வின் உரை அது. ஏதோ ஒன்று என்னை பேச வைத்தது. என்ன பேசினேன் என்று இன்றுவரை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் உரை முடிந்ததும் கையெறி குண்டுகள் காட்டிய காளைகள் உட்பட அனைவரும் அமைதியாகக் கலைந்தனர். தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பணிக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் என் கரங்களைப் பற்றி, கட்டித் தழுவி "குறைந்தபட்சம் 20 பேர் இன்று சாவார்கள்' என்று நினைத்தேன்... காப்பாற்றி விட்டீர்கள்... நீங்கள் இருக்க வேண்டியது கோயிலில் அல்ல, அரசியலில் என்று ஆசீர்வதித்தார்!(?). அந்த தருணத்தில் அற்பமான "ஹீரோ' உணர்வு வந்து போனதை மறைக்க விரும்பவில்லை.
மக்கள் கலைந்து நானும் என் இல்லம் திரும்பிய போது மாலை 7 மணி. உடல் களைத்திருந் தது. "தேநீர்' வேண்டும்போல் தோன் றிற்று. ஆனால் சமையற்கட்டுக்கு சென்று அடுப்பு மூட்டும் தெம்பு கூட இல்லாததுபோல் உணர்ந் தேன். ஒரு விதமான தனிமை என்னுள் பரவி நின்றது. உள் ளுக்குள் கேள்வி. எது உண் மை? சற்று நேரத்திற்கு முன் ஒன்றரை லட்சம் மக்களுக்கு முன் கதாநாயகன் போல் நின்றதா, இல்லை ஒரு குவளை தேநீர் செய்ய சலிப்புற்று நிற்கும் இந்தத் தனிமையா? இந்தத் தனிமைதான் மரணம்வரை என்னோடு எப்போதும் நடந்து உடன் வருகிற உண்மை என்பதை அன்று தீர்மானமாய் உணர்ந்தேன். அன்றைய நாளுக்குப்பின் இன்றுவரை இடையில் 16 ஆண்டுகள் ஓடி விட்டது. ஒரு கண மேனும் பெருங் கூட்டங்களிலோ கரவொலிகளிலோ நான் மூழ்கிப் போனதில்லை.
அதன்பின்னரும் கட்டுக்கோப்பு டன் பல போராட்டங்களை நடத்தினோம். ராஜகோபால், கந்தசாமி என்ற இரு தமிழ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சி, காவல் துறை தலைவர்களாக வந்தனர். அதுவரை இருந்து வந்த வட இந்திய அதிகாரிகளை விட பிரச்சனையை கவனமாகப் புரிந்து கொண்டார்கள். மணலிக்குழி விளைக்கு நிரந்தர தீர்வு காணவென்று மாநில அரசு அன்றைய அமைச்சர்கள் கு.லாரன்ஸ், நடேசன் பால்ராஜ், நாகூர் மீரான் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அமைத்தது. சண்டை போட்ட இருதரப்பினரும் உட்கார்ந்து பேசினோம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராஜகோபால் இதய நேர்மையுடன் செயற்பட்டார். மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் சுமுகமான ஓர் உடன்பாடு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தைகள் முடிந்து ஆட்சித்தலைவர் அலுவலக அறையை விட்டு வெளியே வருகையில் எதிரணி யிலிருந்த ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் ஒருவர் என் கரங்களை பற்றிக்கொண்டு தனியே கூட்டிச் சென்றார். ""ஃபாதர்... 3 வருஷமா நாம சண்டை போட்டது உண்மைதான். ஆனா நீங்க "நம்ம' ஆளு. மூணு வருஷமா தெனம் நீங்க எங்க ஊரத்தாண்டி தான் போய்க்கிட்டிருந்தீங்க. ஒரு வார்த்தை யாராவது தரக்குறைவா பேசியிருக்காங்களா? ஏன்னா நீங்க "நம்ம ஆளு'. ஒண்ணு ஃபாதர்... நம்ம சாதியிலே உங்கள மாதிரி அழகா "இங்கிலீஷ்' பேசுற யாரையும் இதுவரை நான் பார்க்கல. ரொம்ப பெருமையா இருக்கு ஃபாதர்' என்று ஆனந்தக் கண் கலங்கினார். இந்திய மதவாத அரசியலின் எல்லைக்கோடுகளை திட்டவட்டமாகவும் துல்லியமாகவும் நான் புரிந்துகொண்ட நாள் அது.
முப்பத்து முக்கோடி தெய்வங்கள் பரிபாலனம் செய்யும் இந்த பூமியில் கடவுளர்களை மாற்றிக்கொள்வது சுலபம். இந்து நாளை கிறித்தவராகலாம். கிறித்தவர் அடுத்த நாள் இசுலாமியராகலாம். இன்று சிவன், நாளை இயேசு, அடுத்தநாள் அல்லா என்று அணி மாற்றிக் கொள்வதில் பெரிய சிரமங்கள் இங்கு இல்லை. ஆனால் நாடார் நாடாராகவும், முதலியார் முதலியராகவும், கள்ளர் கள்ளராகவும், பள்ளர் பள்ளராகவும், பறையர் பறையராகவும், வன்னியர் வன்னியராகவும், ரெட்டியார் ரெட்டியாராகவும், செட்டியார் செட்டியாராகவும்தான் வாழவும் சாகவும் முடியும். பூலோக வாழ்வில் இந்தச் சங்கிலியிலிருந்து விடுதலை இல்லை. கடவுளை விட, தெய்வங்களை விட சாதிகள் வலுவாகவும், சாசுவதமாகவும் இருக்கும் இடம் இப்பூமிப்பந்தில் எங்கள் இந்தியா என்ற புண்ணிய பூமி மட்டும்தான்!
மணலிக்குழிவிளை தூய மிக்கேல் அதிதூதருக்கு புதிய கோயில் கட்டும் அடிக்கல் விழாவிற்கு அன்றைய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜேஷ் பைலட் வந்திருந்தார். விழா அரங்கில் அவர் பறக்க விடுவதற்காக நான்கு ஜோடி அமைதிப் புறாக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார் இப்போதைய பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம்.ஆரூண். திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கறுப்பு பூனை பாதுகாப்பு படையினரை கீழிறங்கச் சொல்லிவிட்டு தானே வாகனம் ஓட்டி வந்து, நீங்கமறுக்கும் புன்னகையோடு மணலிக்குழிவிளை மண்ணில் நின்று, "நானும் பசுமாடு வளர்த்து, பால் கறந்து விற்று வாழ்க்கையோடு போராடிய ஒரு தகப்பனின் மகன்தான்' என பேசத் தொடங்கி அன்று வந்திருந்த மக்களின் மானசீக நேசத்தை வென்று, மத்திய அமைச்சராய் எனக்கு கிடைக்கும் அடுத்த மாதச் சம்பளத்தை உங்கள் ஆலயத்திற்கு அனுப்பி வைப்பேன் என வாக்களித்து, வாக்களித்தபடியே அடுத்தமாதம் இரண்டாம் வாரத்தில் 18116 ரூபாயும் அனுப்பி வைத்த ராஜேஷ் பைலட் அவர்களை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
பொதுவாக மரணச் செய்திகள் எனக்கு கண்ணீர் தருவதில்லை. ராஜேஷ் பைலட் சாலைவிபத்தில் இறந்த செய்திகேட்டு கண்ணீர் தானாகக் கசிந்தது. இந்தியா, அரசியல் பண்பும் இதயநேர்மையும், வசீகரமும் கொண்ட ஒரு தலைவரை இழந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட் அவர் களை சந்தித்தபோது பழைய புகைப்படங்களை காட்டினேன். நெகிழ்ந்தார். தந்தையின் அறிவார்வமும், தன்மையாகப் பழகிடும் பாங்கும், நெஞ்சார்ந்த நேர்மையை ஒளிர்வித்துக் காட்டும் வசீகரமும் இவரிடமும் கண்டேன். இயற்கை நம்பிக்கை அடையாளங்களை அவ்வப்போது தந்துகொண்டுதான் இருக்கிறது.
மூன்றாண்டு காலம் ஓயாத சண்டை சச்சரவாய் இருந்த மணலிக் குழிவிளை பிரச்சனை சுபமாய் முடிய, கொஞ்சம் அமைதியாகப் பணியாற்றலாம் என்றுதான் பிலிப்பின்ஸ் மணிலா நகர் ""வேரித்தாஸ்'' வானொலிக்குப் புறப்பட்டேன். அங்கு கிடைத்த மறக்க முடியாத நினைவுகள்?
(நினைவுகள் சுழலும்)
 

No comments: