22 Nov 2009

நாம் என்ன மரணித்தா போனோம்


கண்ணீர் சிந்தி கரைந்து போகாதீர்
நெஞ்சு வெடித்து சிதைந்து போகாதீர்
தலைகுனிந்து தாழ்ந்து போகாதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்

வரிகளில வடித்து வாழ வைக்காதீர்
சிதைகளில் இட்டு சீரழிக்காதீர்
கரங்களில் ஏந்தி காயம் ஏற்காதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்

தீபங்கள் ஏற்றி வருந்தாரீர்
பூக்களை துாவி கலங்காதீர்
கைகளை கூப்பி வணங்காதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்

உறுதி மிக்க தலைவன் பின்
உணர்வு மிக நடந்த போதும்
உங்கள் கரம் பற்றி
உணவருந்தி சென்றபோதும்
எதை சொல்லி சொன்றோம் நாம்
நாம் என்ன மரணித்தா போனோம்

கருமேகம் எமை சூழ்ந்து வந்த போதும்
பகை வந்து எம் நிலம் ஆண்டபோதும்
உணர்வோடு உங்கள் கரம் பற்றி
உறுதியோடு எதை சொல்லி சொன்றோம்
நாம் என்ன மரணித்தா போனோம்

மரணிக்க வேண்டாம் என்றே
மரணத்துக்கு மரணம் கொடுத்தோம்
மரணத்தை கடந்து வந்து உம்
மனங்களில் குடி இருந்தோம்
பின்னும் ஏன்
மரணத்தை என்னி நீங்கள்
மரணிக்க வேண்டும் இங்கே

உங்கள் கரம் நிறைய
நாம் தந்த சுமை இருக்க

கண்ணீர் துடைக்க எப்படி முடியும்
பூத்துாவி வருந்தவா முடியும்
கைகூப்பி தொழவா முடியும்
எதற்காக கண்ணீர் இங்கே
செந்நீர் சிந்தும் என் தேசம் கண்டு
கண்ணீர் சிந்தும் நேரமல்ல
வெண்ணீர் கொண்டு வீரம் பேச
இது விவேகமான நேரம் அல்ல

குணிந்திருந்த தலை போதும் இனி
கூப்பி இருந்த கரம் போதும்
கட்டுண்ட கரம் உடைத்து
புது களம் திறப்போம் புலத்தினிலே.

நாம் அங்கு மரணித்து போகவில்லை
இங்கு தான் மரணித்து போவோம் இனி.

No comments: