6 Dec 2009

விடியாத விடியல்

விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள் இங்கே


தினம் தினம் விழி மடல் திறந்து
தெருவெளி பார்க்க
அங்கே
உதிர்ந்து போன சருகுகள்
என் விழிநீரை கடன் கேட்பதும்
கடன் கொடுத்தே கரைந்து போன விழிகள்
கனவுகளை தேடுவதும்
என்று இப்படியாக
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்
இங்கே

யார் அழைத்தும் குரல் கேட்பதில்லை
அங்கே நிறைந்து கிடக்கிறது
அன்று விட்டு போன அந்த
அழு குறல்
இது நிறைந்தே செவிகள் இங்கு
புலன் அற்று புழுங்கி தவிக்கிறது
புலனாகிறது எனக்கு
இதனால் என்றும்
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

தடை தாண்டித் தடை தாண்டி
தழும்பேறி இங்கே
தவிக்கிறது தடையுடைத்த கைக் கருவி
கை பிடித்துக் கூட நடந்து
கழற்றி விட்ட உறவு அங்கே
கை வலிக்க கை ஏந்தும் நிலை பார்த்து
தவிக்கிறது தடையுடைத்த கைக் கருவி
இதனால் என்றும் எனக்கு
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

ஓய்வின்றி ஒடி திரிந்து
ஓர் வழி பார்த்து ஓரிடம் கண்டு
ஓய்வெடுத்தால் அங்கே
ஓலமிடும் ஓர் குரல் கதறல்
ஓய்வெடுத்த மறுகணமே ஓடச் சொல்ல
இதனால் என்றும்
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

இருந்தும் தெரிந்தும்
இன்றும் மீண்டும்
விடியாத இந்த விடியலுக்குள்
நான் மீண்டும் விளையாட தொடங்குகிறேன்

விடியாதா விடியாதா என்றிருந்தால்
விடியாத விடிவு ஆகிப்போய் விடும்
என்று
எனக்குள் ஒரு முடிவோடு
எனக்கான விளையாட்டை நான்
தினமும் விளையாட தொடங்கிவிடுவேன்.

விடியல் எனக்கும் தெரியும் என்ற
நம்பிக்கையுடன்.