25 Mar 2010

மௌனித்து போன தோழனுக்கு.., மௌனத்தை கலைந்த நண்பன் வரைந்தது..

கீழ் வானம் சிவந்திருக்கும்
கடலோரக் காட்சி அது
ஊருக்குள் கரு மேகம்
ஊரையே மயக்கி வைக்கும்

நிலவுக்குத் திரை போட்டு
நாம் சமைத்த சமையலுக்கு
சாட்சிகள் எதுவுமில்லை .
காட்சிகள்  மாறினாலும் - எம்
கனவுகளில் மாற்றமில்லை .
நினைவுகளிலும் அது தான்
நித்தமும் வந்து மறையும் .

அடையாளங்கள் எதுமில்லா
வெள்ளை மணல் தரையில்
நாம் வரைந்த ஓவியங்களை
விழுங்கிச் சென்ற - அலைகளுக்கு
மட்டுமே புரிந்திருக்கும்
இவர்கள் “ யார் ” என்று .

நேற்று வரை நினைவில் நின்றாய்
பங்குனி 25 ல்
பிறந்த நாள் என்றுனக்கு
குறிப்பேட்டில் குறியிட்டு வைத்திருப்பேன்
இந் நாளை..!
இ்ன்று எப்படி குறிப்பில் போட ?
சொல்லி விட்டு போயிருந்தால்
சுடர் ஏற்றி வணங்கியிருப்பேன்
நீ தான் சொல்லாமல் போனவனாச்சே!!

கை பிடித்து வைத்த தங்கை
வீதி ஓரம் காத்திருக்க
தோள் சுமந்த தோழன் உன்னை
தொலைத்து விட்ட கதை
சொல்லவா அவளுக்கு..!!

கேள்வி கேட்டு அவள் வரையும் மடல்களுக்கு
பதில் போடும் தகுதி எனக்கில்லை
என்பதறிவேன் ....
இருந்தும்,

எங்கோ ஒரு மூலையில்
எனக்கான விடைகள் இன்னும்
ஒளிந்திருப்பதாய் கணக்கில் வைத்து
அவளுக்கு ஒரு பதில் போடும் முன்னர்
உனக்கொரு மடல் வரைந்தேன்.
பதில் கொடுக்கும் நிலையில்
நீ யில்லை - வரலாற்றில்
தடையம் வைத்த நினைவாவது
இருக்கட்டுமே இதன் மூலம்.

“ பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா ”

1 comment:

Unknown said...

அன்பின் துரை தயாளன், மனதினை கனக்க செய்யும் வரிகள்.

கால ஓட்டத்தில் கடந்து சொல்லுமா இந்த வலியும்.........