26 Sep 2010

தியாக தீபம் திலீபன்..


ஈழத்தின் ஊரெழுவில்
பூத்த எங்கள் பார்த்தீபா..
உன் நினைவில் நாம் இன்றும்
தினம் தினம் அழுகின்றோம்....

ஈன்றவள் உனை அன்றே
பிரிந்த நாள் முதலாய்
ஈழம் உனைத் தனதாய்
அணைத்ததுவோ அண்ணா

கல்வியில் நீ தலைமகனாம்
மருத்துவ பீட மாணவனாம்
இருந்தும் என்ன !!
ஆறாத உன் தாகம்
அணைத்ததுவா அக் கல்வி !!

கலாசாலை நீ துறந்தாய்
களவாசல் புகுந்தாய்
பட்டங்களால் தேசத்தில்
பாதைகள் வராது என்றா
பாசறை தேடி நீ
தலைவன் வழி
வந்தடைந்தாய் !!!

நாட்டுக்காய் ஒரு தலைவன் இருக்க..
ஊருக்குள் தலைமகனாய்
இருந்தாயே அண்ணா நீ
தீராத பிணக்கெல்லாம்
தீர்த்து வைத்து
காணாத துறை பலவும்
கண்டு வந்தாயே !!

நீ வரும் செய்தி கேட்டாள்
சின்னஞ் சிறுசுகள்
சிரிப்புடன் வாசல் வரும்
பெருசுகள் எல்லாம்
பாதைகள் பார்த்து நிற்கும்
உனக்குள் இருக்கும் ஆழுமை தான்
ஈழத்தில் உனை அன்று
நிலை நிறுத்தியதென்பார்கள்

காலங்கள் மாற காட்சிகளும் மாறி
காலதேவனுக்கு கடிதம் போட்டு
காத்திருந்தாய் அங்கே
ஒருவன் தன் இனத்திற்காய்
செய்திட்ட உயர் தியாகம்
உன் தியாகம் அன்றோ..
உலகத்தில் உனை தவிர
இதை செய்தோர் வேறுண்டோ

ஓர் சாண் வயிற்றை
ஓரத்தில் வைத்து விட்டு
ஓர் உண்மையை எடுத்துரைத்தாய்
அகிம்சையின் ஆலயமாம்
பாரதம் தன் கோரமுகம்
காட்டி விட்டாய்

மீட்பராக வந்தவர் தம்
முகத்திரையை கிழிக்க நீ
முடிவெடுத்த செய்தி கேட்டு
கண்கலங்கி நாம் இருந்தோம்
அன்று
கண் கலங்கி நாம் இருந்தோம்

ஊண் உருக்கி - நீ உன்
உடல் உருக்கி
உள்ளத்து உணர்வை
உறமாக இட்டுப் போனாயா !!

நல்லுாரின் வீதியிலே-நீ
“ நா ” வறண்டு இருந்த போதும்
நாடி வந்த நாட்டவருக்கு
நாதியற்ற இனம் நாம் அல்ல
என்றுரைத்தாய்
ஆயுதங்கள் மட்டுமே
ஆளும் திறம் இவர்களுக்கு
என்பதை மறுத்து
அகிம்சை முள் கூட
எம்முன்னே எம் மாத்திரம்
என்றுரைத்தாய்
சொல்லுடன் நின்றாயா - இல்லையே
செயலிலும் காட்டி விட்டாய்

தினம் தினம் உன் உடல்
உருகி உருகி கரைந்த போதும்
மங்காத தீபம் ஒன்று
உன் கண்ணில் தெரிந்ததாய்
கண்கண்ட சாட்சிகள்
பல உண்டு இவ்வுலகில்

காலுான்ற பலமற்று
நீ கட்டில் மேல் சாய்ந்த போதும்
வார்த்தைகள் எடுத்துரைக்க
உன் நா மறுத்த போதும்
“மக்கள்புரட்சி வெடித்ததா”
“மக்கள்புரட்சி வெடித்ததா”
என்று பலமுறை
வலு விழந்தும் கேட்டதாய்
அருகிருந்த பலர்
சொல்ல கேட்ட துண்டு

ஊர் கூடி உனை
“நா” ஆற கேட்ட போதும்
உலகமே உனை பார்த்து
வாய் நனைக்க கேட்ட போதும்
புன்னகையுடன் நீ
நாட்டிற்காக வந்த பின்னர்
“நா” மட்டுமல்ல - என்
நாடி கூட நடுங்காது இலட்சியத்தில்
என்றாயே..
யாருக்கு வரும் இத்துணிவு
உனை தவிர சொல்லண்ணா

கண்முன்னே உன் உயிர்
அணு அணுவாய் கரைந்த போது
கண்ணீரில் தமிழினமே
கரைந்து உருகி போனதைய்யா

பாரத அரசின் பாரா முகம் கண்டு
தமிழினமே அன்று ஒருமுறை
கொதித்து எழுந்ததையா
வரலாற்று நுால் ஒன்று
தன் இறுதி பக்கத்தை
எழுதி முடித்து
எம்கையில் தந்தபோது

உறுதியுடன் ஒன்றுரைப்போம்
நீ கண்ட கனவை
நனவாக்க நாம் உண்டு
நிம்மதியாய் படுத்துறங்கு - அண்ணா
நிம்மதியாய் படுத்துறங்கு