16 Jul 2011

குற்றவாளிகள்....


கூண்டில் ஏற்றப்பட்டார்கள்
குற்றவாளிகள்..!
அடுக்கில் வந்தது
குற்றங்கள்
தாயை பிரிந்தது
முதல் குற்றம்.,

தவிப்போடு தவிக்கவிட்ட தந்தையும்
இணைக்கப்பட்டது,
தெருவழியே அழுத உறவுகளை
உதறி நடந்ததும்
குற்றம். 
காதலித்தது கூட
குற்றமாம்
புன்னகையோடு கூர்ந்து கேட்டாள்
பெண்ணையல்ல
“ மண்ணை ” என்றான்
அதற்காக பெயரை கூட மாற்றிக் கொண்டாயே
பெரிய தவறு
புரிந்தது அடுத்தது என்னவென்று
“ நீங்கள் பயங்கரவாதிகளா...? ”
கேள்விகள் கேட்பது அவர்கள் தொழில்
அது தான் கேட்டு விட்டார்கள்
பதில்......!!
முன்னே உயரமான கூண்டில்
மறைந்திருந்தவர் தலைக்கு மேல் இருந்தது.
கண்வரை தெரிந்தும்
சுட்டிக்காட்ட தயங்கினார்கள்
குற்றவாளிகள்.
மீண்டும் சிலுவையில் அறையப்படலாம்
அவரையல்ல “ உண்மையை ”
அதற்காய் மௌனம்
புரியாதவர்கள் மீண்டும் கேள்வியுடன்
“ நீ ”  பயங்கரவாதியா....?
இம்முறை அழுத்தி சொல்லப்பட்டது
“ நீ ”
பதில்
மீண்டும் மௌனம்.
இம்முறை தலைகளைக் குணிந்து
வரையறுக்கப்ட்ட நேரங்களைத் தாண்டி
நீண்டது விவாதம்
அங்கே பதில்களை தேடிய
நீதவான் கண்கள்
களைத்துப் போனதால்
ஒத்தி வைக்கப்பட்டது
“ தீர்ப்பு ” 
ஆனால் மீண்டும்
அதே நீதவான் தலைக்கு மேலேயே இருந்தது
பதில்
“ முற்களின் கிரீடத்துடன் அவர் ”
அந்த புனிதரின் புகைப்படத்தில்
கண்ணீராய் குருதி
இம்முறை சிலுவையை இவர்கள் சுமக்கிறார்கள்
கையசைத்து சென்றார்கள் அவரிடம்
இப்போது அவர்கள் ஆழ் மனம் சொன்னது
நீங்கள் “ குற்றவாளிகள் ” தான்
தாயை பிரிந்ததால் அல்ல
தாய் மண்ணை பிரிந்ததால்

No comments: