21 Sept 2012

நீரும் நிலவும் ....


விம்பத்தின் தோற்றம் மட்டும் 
நீரோடு நிலவுக்கு 
உறவென்று ஆகாது 
சட்டத்தின் சாட்சிகள் ஒன்றே
அவனுக்கு அவளென்ற 
உரிமையை கோராது

சாத்திரங்கள் தோத்திரங்கள் ஒருபோதும் 
உடலுக்கு உறவென்ற 
உணர்வினைக்  கோராது
மனதோரம் கூடும் ஆசைகள் ஒன்றே
ஈருயிரும் ஓருயிராய் 
ஆக்கிடப் போதுமே ..

உன்னோடு நானும் ஒன்றாக வேண்டி
உறங்காத இரவுகள் பல
உயிரற்று உதிர்ந்து போனதை 
நீ அறிவாயா !!
இதயத்தினோரம் உன் உருவங்கள் கீறி
உயிர் கொடுத்து வாழ்ந்த கதை 
உயிரே நீ உணர்வாயா !!
எட்டத்தில் நின்று கொண்டு
 என் எதிர்த் திசையை
பார்த்துக் கொண்டு
மனதிற்குள் நீ சொல்லும் 
காதல் மொழிகள்
 என் காதுகள் காண
காத்திருந்த தறிவாயா ...!

எங்கெங்கோ அலைந்து அலைந்து
உன் எதிர்திசையில் நான் நடந்து
உலகத்தின் சுற்றுப்பாதை 
சுழற்சி என்பதை உனைக்
கண்டடைந்த போதே
நானறிந்தேன்..
கடலுக்குள் அலையாக 
அலைக்குள் நுரையாக 
உனைக் கரைதொட்ட நாள் முதலாய்
எந்தன் எச்சங்கள் உன்னில் 
ஒட்டிக் கொண்டலைவதை 
நானறிந்தேன்...

போதும் இந்த பொல்லாத 
விந்தை விளையாட்டு 
இனிமேலும் தாங்காது 
எனதுள்ளம் வலிமையாயினும் 
வலிக்கிறதே தோழி...!
ஓரங்கள் எங்கும் ஓடி ஒழிந்து
உனக்குள் நான் வந்து 
ஓராண்டாகிறது 
ஒருமுறை இதயக் கதவுகளை
திறந்து காட்டடி - தீ(நீ)யே
சுட்ட வலி உன்னாலே 
ஆறட்டுமே தோழி ....




No comments: