28 Oct 2012

வானவில் வீரர்கள்


வெள்ளை மணல்
வேர்களை
இறுகப் பற்றுவதில்லை
இருந்தும் கால்கள் 
நிலையாக நின்று கொண்டது ,
விடுதலை என்பது தாகமானால்
காதலும் கண்ணீரும் 
அலைகளாய்ச் சூழ்ந்திருந்தாலும்
போர்க்குணம் மட்டும் 
விழிகளில் தாண்டவமாடும் .

முதியவர் முதல் சிறியவர் வரை
துப்பாக்கி முனைகளில் தம்
வாழ்வைத் தேடினர்
தாயைத் தேடும் விழிகளில்
தாயகம் என்பது கண்ணீராய் மாறி
விழிகளின் காப்பரனாகும் .
ஏக்கங்கள் வயதிற்கானாலும்
தாக்கங்கள் குழந்தையையும் சூழும்
மண்ணிலிருந்து 
நீரைப் பிரித்தாலும்
தாயகத்தில் இருந்து - தாயை 
பிரிக்க முடிந்த தில்லை

ஓர் இனம் - தன்னை 
தானே கைகளால் 
கருவறுத்துக் கொன்றது .
வாழ்தலைக் காட்டிலும் 
வீழ்வது  மேல் என்று
மண்டியிடா மானத்தை 
சுறுக்கிட்டு - தன்னைத் 
தானே துாக்கிலும் இட்டது .
மிச்சமான உதிரிகள் 
இருப்பதை விற்று 
சந்ததிக்கு
வீரியம் ஊட்டிட 
வாழ்ந்திட துடிக்குது

தோல்வியின் பயம் 
கண்களை மூடும் போது
துரோகங்கள் அங்கே
விழித்துக் கொள்ளும்
தியாகங்களும் துரோகங்களும் 
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ள
தாயின் மார்பகங்கள் 
அறுத்து எறியப்படும் ,
ஆக்கிரமிப்பு 
அவள் கால்களுக்கிடையில் 
வேலிகள் நட்டு வைக்கும் ,
‘‘ விடுதலை ” சிறைப்பட்டுக் கொள்ள
‘‘ வீரர்கள் ” சுறுக்கிட்டுக் கொள்வார்கள் .

விண்ணதிரும் முழக்கங்களுடன்
விடைபெறும் வேளையில்
வேள்வித் தீயில் ஆகுதியானவர்
விழிகளின் முன்னே
நர்த்தனம் ஆடுவர்
வெற்றியும் தோல்வியும்
வாழ்வும் வரலாறும் 
அவர்களை 
நொடிக்கும் தீண்டியதில்லை
வழிகாட்டி-ய வழி
விழி முன்னே
வேர்களை துாண்டும் - துளி 
நீர்களாக மாறி
வெண்மண லினுள் 
மாண்டனர்.






No comments: