Showing posts with label இருளுக்குள் ஒர் பயணம்... Show all posts
Showing posts with label இருளுக்குள் ஒர் பயணம்... Show all posts

22 Apr 2010

இருளுக்குள் ஒர் பயணம்..

இருளுக்குள் வாழ்வதாய் - சில
இதயங்கள் அழுகின்றன
முடிவுகளை கண்டதாய் - சிலர்
முகவரிகள் தேடுகின்றனர்

அருகான விண்மீன்களின்
தொடர்புகளை மறந்து விட்டு
சூரியனின் வருகைக்காய்
சுழற்சியை கேட்கின்றனர்

ஆதவனை வேண்டி இங்கே
இருளை வெறுக்க முடியாது !!
விண்மீன்களை மறந்து விட்டு
இருளைக் கடக்க முடியாது !!

காலத்தின் ஓட்டத்தில்
சுழற்சிகளில் மாற்றம் வரும்
இருளுக்கும் பகலுக்கும்
இடைவெளிகள் இருந்து வரும்

வழிகாட்டிகளாய் விதைகளிருக்க
நரிகளைக் கண்டு ஏக்கம் என்ன ?
நினைவுகளை சுமந்து கொண்டு
இருளைக் கண்டு குழப்பம் என்ன ?

ஆண்டுகளின் ஓட்டத்தில்
சாட்சிகளுக்கு அழிவேயில்லை
அழுகைக்கு மட்டும் எங்கள்
அகராதியில் இடமேயில்லை

வீழ்ந்து கிடப்பதாய் இதை
பார்ப்பவர்கள் எண்ணக் கூடும்
பார்வைகளை வைத்து கொண்டு
பாதைகளை வரைவதில்லை

விடியலுக்கு நேரமுண்டு
இருளுக்கும் நீட்சியுண்டு - அதனால்
கனவுகளை எண்ணிக் கொண்டு
கடமைகளை மறந்திடாதீர்