Showing posts with label மறக்க முடியுமா ? பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார். Show all posts
Showing posts with label மறக்க முடியுமா ? பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார். Show all posts

14 Oct 2009

இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது..?!!



வாழ்வில் நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு.

ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர்.

வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன.

வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி

ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே

சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும்

சீவியம் பெறுவதற்கே -விடுதலை

சீவியம் பெறுவதற்கே! - என்ற தமிழீழ

வானம்பாடி சிட்டு அவர்களின் பாடலை ஒரு கடிதத்தில் அறிமுகம் செய்து என்னை சிலிர்க்கச் செய்தவரும் ம.செ.பேதுருப்பிள்ளை அவர்கள்தான்.

2002-ம் ஆண்டு வன்னிக்கு சென்றிருந்தபோது அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுடன் என்னை வரவேற்க ஓமந்தைக்கு அன்புமிகுதியால் வாழைத்தண்டும் பேழைக்குள் பூமாலை பூட்டி வந்து, ஓமந்தை வீதியில் எனக்கு அதை அணிவித்து கூச்சமுறச் செய்தவர். அன்பு செய்ய மட்டுமே தெரிந்தவர், கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறவர். 

கிளிநொச்சியில் இருந்த தனது குடிலுக்கு என்னை கூட்டிச் சென்று அம்மா- அவரது வாழ்க்கைத் துணை சுட்டுத் தந்த பருத்தித்துறை வடையின் சுவை இப்போதும் என்னால் இனிதே நினைக்க முடிகிறது.

சிங்களமும், ஆங்கிலமும் நன்றாக அறிந்த காரணத்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராயிருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மொழிபெயர்ப்புத் துணையாளராக அமர்த்தப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல என்றபோதும் மிக முக்கியமான கடமைக்கு அவர் நியமிக்கப்பட்ட காரணத்தால் ம.செ.பேதுருப்பிள்ளை என்ற பெயர் மாற்றப்பட்டு ஜார்ஜ் என்ற பெயர் தரப்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தை களின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பல்வேறு நாடு களுக்கும் சென்று வந்த ஜார்ஜ் மாஸ்டர்தான் வேரித்தாஸ் வானொலியில் என் நிறைவு நாட்களில் ""தந்தை போல் ஆனவருக்கு...'' என விளித்து நான் கடிதங்கள் எழுதிய ம.செ. பேதுருப்பிள்ளை. மனைவி மாசறு பொன், வலம்புரி முத்து, எப்போதும் புன்சிரிக்கும் இறையருள் வசந்தம், கட்டுக்கோப்பான சிவபக்தை. இவரோ கத்தோலிக்க கிறித்தவர். அன்றில் பறவைகள் போல் ஆண்டாண்டு காலம் அன்பில் ஒன்றி வாழ்ந்த இவர்களின் இல்லற ஒழுக்கம் ஒளி நிறைந்தது.

முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின் தொடக்க நாட்களில் இலங்கை ராணுவம் தங்களிடம் புலிகளின் முக்கிய இரு அரசியற் தலைவர்கள் வந்து சரணடைந்ததாக உலகிற்குப் பிரச்சாரக் கடை விரித்ததை நீங்கள் பின்னோக்கிப் பார்த்தீர்களென்றால் நினைவுபடுத்த முடியும் -பலவீனமுற்ற நிலையில் இரு வயோதிக மனிதர்கள் -வதனத்தில் வியாகுலம் பதிந்தவர்களாய் உலக ஒளி ஊடகங்களில் உலாவரப்படுத்தப்பட்டார்கள். ஒருவர் தயா மாஸ்டர், இன்னொருவர் ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் ம.செ. பேதுருப்பிள்ளை.


தொலைக்காட்சியில் அவரது முகம் கண்ட அந்நாளில் என் மனம் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன். புலிகள் இயக்கத்திற்குள் பிளவு வந்துவிட்டது. தலைமையின் மேல் மூத்த தலைவர்கள், தளபதிகள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதாக இந்த இருவரையும் காட்டி இலங்கை ராணுவம் பரப்புரை செய்தது. தமிழுலகமும் இவர்களை "கோழைகள்' "துரோகிகள்' என்பதாகப் பார்த்து முத்திரை பதிக்க முற்பட்டது.

என் மனமோ ஒத்துக்கொள்ள மறுத்தது. என்றேனும் மெய்ப்பொருள் அறிந்தே தீர வேண்டுமென உறுதி கொண்டது. வாழ்வில் என் ஆதார நம்பிக்கைகளில் ஒன்று இது. முன்பே கூட எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுது கிறேன்: ""பொய்மையின் பயணம் வேகமானது. உண்மையின் பயணமோ மெதுவானது, காயங்கள் நிறைந்தது. ஆனால் உறுதியானது. என்றேனும் ஒருநாள் பொய்மையின் குப்பைமேடுகளினின்று உண்மை உயிர்த்தெழும்''.

தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் பேதுருப்பிள்ளையும் இலங்கை ராணுவம் காட்ட விரும்பியது போல் கோழைகளாகவோ, துரோகிகளாகவோ நிச்சயம் இருக்க மாட்டார்கள் என நம்பியவனாய் இறுதி யுத்தத்தைப் பார்த்தவர்கள், களத்தின் நம்பகமான செய்திகளுக் குரியவர்கள் என என் தொடர்புக்கு வந்தோர் எல்லோரிடத்தும் உண்மையில் தயா மாஸ்டருக்கும், ஜார்ஜ் மாஸ்ட ருக்கும் என்ன நடந்ததென்று விசாரித்து வந் தேன். விடாத, விட விரும்பாத, விடாப்பிடியான என் ஐந்து மாத கால தேடலுக்கு விடை கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கிடைத்தது.

அதுவும் முதுமலை கார்குடி காட்டுப் பகுதியில் வாரணங்களும் மான் கூட்டங்களும் இரு நண்பர்களோடு கண்டு பாரதியின் வியனுலகை அமுதென நுகரும் அனுபவம் வாங்கி நின்ற பனிவிழும் நள்ளிரவொன்றில் அந்த உண்மை கிடைத்தது. காடுகளுக்குள் அச்சம் அறுத்து விட்டேத்தியாய் சுற்றித் திரிவதுபோலொரு விடுதலைச் சுகம் உலகில் வேறில்லை.

தயா மாஸ்டரும் ஜார்ஜ் மாஸ்டரும் சரண டைந்துவிட்டதாக உலகிற்குச் சொல்லப்பட்ட அந்நாளில் உண்மையில் நடந்தது இதுதான்:

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நிலப் பகுதியை அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத் தீவுக்குச் செல்வதானால் மாத்தளன், பொக்கணை, வலையர்மடம், கள்ளப்பாடு, முள்ளிவாய்க்கால் பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இருமுறை இவ்வழி யில் நானும் பயணப்பட்டிருக்கிறேன். மொத்தம் சுமார் இரண்டு கி.மீ. தூரம் இருக்கலாம் என நினைக்கிறேன். ஆடு, மாடுகளைப்போல் நான்கு லட்சம் தமிழர்களும் அடித்து விரட்டிக் கூட்டப்பட்டது இப்பகுதிகளில்தான்.

ஜார்ஜ், தயா மாஸ்டர்கள் ஆயுதம் தரித்த களப்போராளிகள் அல்ல, அரசியல் பிரிவில் இருந்தவர்கள். வேறு பணிகள் செய்கிற உடல் வலுவும் இல்லாதவர்கள். மக்களோடு மக்களாய் மாத்தளன் அடைக்கலமாதா ஆலயம் பகுதியில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் முல்லைத் தீவு சாலை கடற்கரை பரப்பிலிருந்து நகர்ந்த இலங்கை ராணுவம் மாத்தளன் பகுதியை ஊடறுத்து அச்சிறு நிலப்பரப்பையும் மக்களையும் இரு பிரிவுகளாய் துண்டாட இவர்களும் சுமார் 300 பொதுமக்களும் தீவுபோல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மாத்தளன் பகுதியில் நின்றிருந்த போராளிகள் உறுதியுடன் களமாடி வீரமரணம் தழுவ, கழுத்தில் சயனைடு குப்பி அணியாத அரசியல் பிரிவின் தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும் மக்களோடு மக்களாய் நின்று ராணுவ கட்டுப்பாட்டு நிலைக்கு தங்களை ஒப்படைத் திருக்கிறார்கள். கோழைத்தனம் என்ப திலும் ஓர் தந்திரோபாயமான முடிவு என்ற மன நிலையில்தான் அவர்கள் அம்முடிவை எடுத்ததாக அருகிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனில் தொலைக்காட்சிகளில் விடுதலைப் போராட் டத்தின்மேல் நம்பிக்கையிழந்த தொனியில் அவர்கள் பேசிட காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். குரூர வெறியோடு ரத்தக்குளியல் நடத்திக்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் கையில் பிடிபட்ட இரண்டு வயோதிபத் தமிழர்களின் நிலையை நாம் உள்ளார்ந்த, நேசம் தோய்ந்த புரிந்துணர்வோடே பார்க்கவேண்டுமென நினைக்கிறேன். 

விரிவாக இதனை இங்கு நான் எழுதத் தலைப்படு வதற்குக் காரணம் உண்மையை, உண்மையானவர்களை வரலாறு நிச்சயம் ஒருநாள் விடுவிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும், போலிகள்-பொய்யானவர்கள் ஒன்றேல் வெளிப்படுத்தப்படுவார்கள் அல்லது அற்பப் பதர்கள்போல் காலவீதியில் பரிதாபமாக விழுந்து கிடப்பார்கள் என்பதை வலியுறுத்திப் பதிவு செய்யவுமே.

போர்க்களத்தில் தமிழர்களை தோற்கடித்தவர்கள் களத்தில் சிந்தப்பட்ட தூய குருதியையும் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். உணர்வாளர்கள் என பிடரி சிலிர்த்துத் திரிகிறவர்களைச் சுற்றியே பல ஊடுருவல்கள் நிகழ்கின்றன. நீதிக்கான தேடலிலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பி சலிப்புறச் செய்யும் திட்டத்தோடு தவறான செய்திகளை பரபபுகின்றார்கள். அவற்றுள் ஒன்று, கடற்புலித் தளபதி சூசை என்ன ஆனார்? பிடிபட்ட அவரது குடும்பத்தாரை இலங்கை அரசு நன்றாகப் பராமரிக்கிறது. அவர் துரோகியாக இருக்கக்கூடும்'' என்பது போன்ற கேவலமான ஓர் பிரச்சாரத்தை உளவு அமைப்புகள் உலவ விட்டன. உண்மைக்கான தேடலுக்கு இறையருளே பதில் தந்ததால் கடந்த புதன் கடிதமொன்று வந்தது. பெயர் இல்லை இலங்கை திரிகோணமலையிலிருந்து தபால் செய்யப்பட்டிருந்தது.

கொண்ட இலட்சியம்

குன்றிடாத தங்களின்

கொள்கை வீரரின்

காலடி மண்ணிலே

நின்று கொண்டொரு

போர்க்கொடி தூக்குவோம்

நிச்சயம் தமிழீழம் காணுவோம்!

-என்ற வரிகளோடு நிறைவு செய்யப்பட்டிருந்த அந்த ஏழு பக்கக் கடிதத்தை எழுதியிருந்தவர் கடைசிவரை களத்தில் நின்ற ஓர் போராளி. கடற்தளபதி மாவீரன் சூசை அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மை விபரங்கள் சுமந்த அக்கடிதம் வரும் இதழில்.

(நினைவுகள் சுழலும்)



நன்றி நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

1 Oct 2009

நகரை காத்த வீரன்..!பகுதி-57


மானுட நாகரீகத்தின் பயணத்தை உயர்ந்த பாதைகள் நோக்கி நிறுத்திய மக்களாட்சி (Democracy) அரசியல் தத்துவத்திற்கும் மாரத்தான் ஓட்டத்திற்கும் வியப்பான வரலாற்றுத் தொடர்பு உண்டு. சென்னையில் கடந்த ஞாயிறன்று ஏழை மாணாக்கரின் கல்விக்காய் பாடுபட்டு வரும் கிவ் லைஃப் (Give Life) திட்டத்திற்காக தமிழ் மையம் அமைப்பு நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் காலை மழையில் நனைந்து கொண்டே சுமார் அறுபதாயிரம் பேர் ஓடிய காட்சியின் மறக்க முடியா சிலிர்ப்புடன் மாரத்தான் வரலாற்றைத் தேடுகிறேன்.

கிறிஸ்த்து பிறப்பதற்கு முன் 546-ம் ஆண்டளவில் பெர்சியாவும், கிரீசும் உலகின் முக்கிய இரு பேரரசுகளாய் திகழ்ந்தன. மத்திய தரைக்கடலை யும் செங்கடலையும் இணைக்க பெருவாய்க்கால் கட்டும் ஆற்றலை அன்றே பெற்றிருந்த அந்தப் பெர்சியாதான் இன்றைய ஈரான். ஆசிய, ஐரோப்பிய நிலப்பரப்பின் கணிசமான பகுதிகளை பெர்சியப் பேரரசு தன் ஆளுகைக்குள் கொண்டிருந்தது.

கிரேக்க நாடு என பொதுவாக நாம் அறியும் கிரீசுப் பேரரசு அகண்ட நிலப்பரப்பினை கொண்டி ருக்கவில்லை. நகரங்களை மையமாகக் கொண்டு சிறு நாடுகளை உருவாக்கி, சுயாட்சி உரிமை தந்து, ஓர் கூட்டாட்சிப் பேரரசாக உயர்ந்து நின்றது கிரீசு. அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற சிந்தனையாளர்களை உருவாக்கிய பேரரசு இது. இப்பேரரசில் சுயாட்சி உரிமை பெற்று மகத்துவமாய் மிளிர்ந்தவை ஏதென்ஸ், ஸ்பார்ட்டா ஆகிய இரு நகரங்கள். ஏதென்ஸ் சிந்தனை-அறிவு வலுவும், ஸ்பார்ட்டா ராணுவ வலுவும் கொண்டிருந்தன.

கி.மு.490-ம் ஆண்டு பெர்சியப் பேரரசின் பெரும்படை கிரீசுப் பேரரசை மட்டுமல்லாது ஐரோப்பிய நிலப்பரப்பு முழுவதையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் அகண்ட கனவோடு மத்திய தரைக்கடல் கடந்த ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ""மாரத்தான்'' என்ற சமவெளிப் பரப்பில் தரையிறங்கி தாக்குதலுக்குத் தயாரானது. கருத்தமர்வுகள், விவாதங்கள், தத்துவ சங்கங்கள் என அறிவுக்கிறக்கத்தில் கிடந்த ஏதென்ஸ் நகர் அலை அலையாய் வந்திறங்கி நின்ற பெர்சிய ராணுவத்தைக் கண்டு பிரமித்துப் போய் ஸ்பார்ட்டா நகரின் தோழமை உதவியை அவசரமாய் நாட வேண்டியிருந்தது. ஏதென்சுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் இடைப்பட்ட தூரம் 226 கிலோமீட்டர்கள். தொலைபேசும் வசதியில்லா அக்காலத்தில் குதிரைகளும் பாய்ந்து பறக்க முடியா மலைகளாலான அப்பரப்பை பிடிப்பிடெஸ் என்ற வீரன் செய்தியோடு 36 மணி நேரத்தில் ஓடிக் கடந்து சேர்ந்தான். ஆனால் ராணுவ வலு கொண்ட ஸ்பார்ட்டா மூட நம்பிக்கைகளின் நகராகவுமிருந்தது. முழு நிலா நாள் வரும்வரை தங்கள் ராணுவம் நகராது என்று கூறிவிட்டார்கள். ஏமாற்றத்தை சுமந்து கொண்டு 226 கிலோமீட்டர் மீண்டும் திரும்பி ஓடினான் பிடிப்பிடெஸ்.

ஏமாற்றச் செய்தி கேட்டு ஏதென்ஸ் மனம் தளர வில்லை. மாரத்தான் களத்தில் பெர்சியப் பெரும்படையை துணிவுடன் எதிர்கொண்டனர். முதல்நாள் சண்டையில் 6400 பேரை இழந்த பெர்சிய ராணுவம் பின்வாங்கி கடல் வழியே ஏதென்சு நகருக்கு தென்புறம் நோக்கி நகரத் தொடங்கியது. இப்போது இரண்டு செய்திகள் தலைநகர் ஏதென்சு நகருக்குச் சொல்லப்பட வேண்டும். ஒன்று, மாரத்தான் போர்க்களத்தை வென்ற செய்தி, இரண்டு, பெர்சியப் படைகள் ஏதென்சு நகரை இன்னொருபுறத்திலிருந்து தாக்க முயற்சிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை செய்தி. இச்செய்திகளையும் எடுத்துக் கொண்டு கால்கள் கட்டிப் பறந்தான் பிடிப்பிடெஸ். மாரத்தான் களத்திற்கும் ஏதென்சு நகருக்குமிடையே அவன் கடந்த தூரம் 41.8 கிலோமீட்டர்கள்.

ஸ்பார்ட்டா நகருக்கு இடைவிடாது ஓடித் திரும்பி 452 கிலோமீட்டர்கள் கடந்த களைப்பு, நாள் முழுதும் மாரத்தான் களத்தில் சண்டையிட்ட அயற்சி... ஆயினும் மன உறுதியை வரவழைத்துக் கொண்டு, ஏதென்சு நோக்கி ஓடினான் பிடிப்பிடெஸ். சுமார் 3 மணி நேரத்தில் சென்று சேர்ந்து வெற்றிச் செய்தியை முழங்கியவன் களைப்பினால் சோர்ந்து விழுந்து அங்கே இறுதி மூச்சு விட்டான். ஆனால் பிடிப்பிடெஸ் சொன்ன எச்சரிக்கை செய்தி ஏதென்சு நகரைக் காத்தது. அன்று ஏதென்சு நகரம் பெர்சியாவிடம் விழுந்திருந்தால் ஐரோப்பிய கலாச்சாரம், மக்களாட்சி தத்துவம்-அமைப்பு முறைகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் எழுச்சி ஆகியவை நிகழ்ந்திருக்காது என வரலாற்றுத் திறனாய்வாளர்கள் கூறுவர். அந்த பிடிப்பிடெஸ் என்ற ஒற்றை வீரன் வரலாற்றுத் திருப்புமுனையான நிகழ்வின் நினைவாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டமும் இணைக்கப்பட்டது. வியப்பென்னவென்றால் மாரத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்ட முதல் ஒலிம்பிக்கில் முதல் இடம் வென்றவர் கிரேக்க நாட்டு ஸ்பிரிடன் லூயிஸ் என்ற வீரர்.

பயிற்சி, மன உறுதி, உடற்பலம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகிய விழுமியங்களின் அடையாளம் பிடிப்பிடெஸ். இதே மதிப்பீடுகளை அடியொற்றியே அவனது நினைவாக மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறு சென்னையில் தமிழ் மையம் நடத்திய மாரத்தானும் அவ்வாறானதே.

அன்றைய தினம் அதிகாலை மழையினூடேயும் பல்லாயிரம் மக்கள் கூடி வந்து ஓடினார்கள், குடைபிடிக்க முயல வில்லை, தலைமறைக்க இடமெதையும் தேடவில்லை. வண்ணமயமான ஒன்று கூடலாயும் இருந்தது. பேதங்கள் பலவற்றை சில பொழுதேனும் இந்த ஒன்று கூடல் அறுத்திருந்தது. திருவல்லிக்கேணி வீதியை ஓடிக் கடந்தபின் "அடடா... இப்படி பழமையான கட்டிடங்களெல்லாம் சென்னையில் இருக்கின்றனவா?' என பலர் வியந்திருக்கிறார்கள்.

இந்த ஓட்டத்தினால் பெறப்படும் நிதி கிவ்லைஃப் என்ற அமைப்பினூடாக ஏழை மாணாக்கரின் கல்விக்கு வழங்கப்படும். இப்போது 14,600 பிள்ளைகளை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் இந்தியாவில் அகதி மக்களாய் வாழும் ஈழத்துக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சிறப்புக் கல்வி நிதி யொன்றை கிவ்லைஃப் அமைக்க வேண்டு மென்று இயக்குநர்களை கேட்டுள்ளேன்.

ஈழத்தமிழ் மக்களுடன் இன்று இணைந்து நடக்க விருப்பம் உடையோராய் முன்வருவோர் பிடிப்பிடெஸ் போல மாரத் தான் விழுமியங் களோடு வர வேண்டியுள்ளது. மனஉறுதி, விடாமுயற்சி, நித்திய நம்பிக்கை மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

"மறக்க முடியுமா?' எழுதத் தொடங்கிய நாட்களில் எஸ்.ஜே.இம்மானுவேல் என்ற அருட்தந்தை அவர்களைப் பற்றிக் கூறியிருந் தேனல்லவா? அவரோடு மீண்டும் உரையாடுகிற வாய்ப்புக் கிடைத்தது. வயது இப்போது அவருக்கு 79. பெரிய இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டாலும் ஆறேழு மருந்துப் பெட்டி களுடன் தமிழீழ மக்களின் நீதிக்காக எங்கு வேண்டுமானாலும் மாரத்தான் உறுதியோடு பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மன்ட் டூடு, வாடிகன் திருச்சபை உயர் அதிகாரிகள் என ஓய்வும் சலிப்புமின்றி தன் மக்களுக்காக பலரையும் சந்திக்கிறார்.

"நடந்துவிட்ட நிகழ்வுகள் உங்களை சோர்வுறச் செய்யவில்லையா?' என்று அவரை வினவினேன். ""மிகுந்த வேதனையுறச் செய்தன. ஆனால் சோர்வுறவில்லை. முன்பைவிட இப்போதுதான் நான் மன உறுதியோடும், நீதியின்பால் பசி தாகத்தோடும், நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடும் இயங்க வேண்டி யிருக்கிறது'' என்றார். "திருச்சபையின் மூத்த பணியாளராய் இருந்து கொண்டு தமிழீழ மக்கட்பணி செய்வதில் நிறுவன ரீதியான சிரமங்களை எப்படி சமன் செய்கிறீர்கள்?' என்றேன். அவர் சொன்னார்: ""திருச்சபை எனக்கு வீடு. அது தங்கி, உண்டு, ஓய்வெடுக்க. ஆனால் நான் கடமையாற்ற வேண்டிய களம் வெளியே தான் இருக்கிறது. வயல் வெளியோ, கடற் புறமோ, தொழிற்சாலையோ, அலுவலகமோ -எப்படி எல்லோரும் கடமையாற்ற வெளியே வர வேண்டுமோ அப்படித்தான் நானும். நான் இன்று கடமையாற்றும் களம் தமிழீழ மக்களின் விடுதலை'' என்றார்.

"பிரபாகரன் உயிரோடு இல்லை என நம்புகிறீர்களா?' என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் மறக்க முடியாதது. ""தலைவரது குரல் கேட்காத இந்நாட்களில்தான் அவரது குரல் முன்பைவிட பலகோடி மடங்கு பலம் பெற்றிருக்கிறது. லண்டனுக்கு வந்து பாரும். பாராளுமன்றத்தின் முன் நின்று போராடுகிறவர்களும், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுவதும் பழைய தமிழர்களல்ல. இங்கேயே பிறந்து வளர்ந்து துன்பங்கள் எதையும் அறியாத பிள்ளைகள் தான் இன்று களத்தில் நிற்கிறார்கள். இலங்கைக்குச் சென்று ஆயுதமேந்திப் போராடவும் நாங்கள் தயார் என திடமான உறுதியுடன் முழங்கு கிறார்கள். பிரபாகரனின் முகம் காண வேண்டுமென்ற கட்டாயத்தில் தமிழர்கள் இன்று இல்லை. முகம் காட்டாமலேயே எங்கட சனத்தின் மனங்களை பிரபாகரன் வியாபித்துவிட்டார். குரலெடுத்துப் பேசாமலேயே எங்கட இனத்தின் பயணத்தை இதுவரையில்லா உறுதியுடன் அவர் வழி நடத்து கிறார்'' என்றார்.

"நீங்கள் நிறைய படித்தவர். போப்பாண்டவரின் உயர் அவையிலேயே அறிஞராக இருந்தவர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களால் பேரறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர். உங்களுக்குக் கற்றுத்தர பிரபாகரனிடம் என்ன இருந்தது?' என்று நான் கேட்டு முடிக்குமுன்னரே அவர் சொன்னார்: ""எனது மண்ணையும், எனது மக்களையும், எனது மொழியை யும் நேசிப்பதற்குக் கற்றுத் தந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்'' என்றார்.

"இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் என் இனம் நடக்கிறபோதும் தீமைக்கு என்றும் அஞ்சேன்' என்ற உறுதியோடுதான் நடக்கிறோம். கடவுளிடமும், முடிவற்ற நீதியிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் நாங்கள் நேசித்த தந்தையர் நாடான இந்தியா எங்களை காப்பாற்றும் என இன்றும் நான் நம்புகிறேன்' என்று தொடர்ந்தார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடான எனது உரையாடலில் ""தமிழீழம் அமையும்போது உங்கள் வெளியுறவுக் கொள்கை எப்படியிருக்கும்?'' என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதற்கு அவர் தந்த பதில் நிச்சயம் இந்தியாவின் வெளியுறவு அமைப்பை வியப்புறச் செய்யும்.

(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

27 Sept 2009

நான் உங்களோடு தான் இருக்கிறேன்..!! பகுதி - 56


கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.

அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக் கூடியும், வடபகுதி மாதோட்ட தமிழ் குறுநில மன்னனோடு நட்பு தேடியும், தமிழகத்து பாண்டிய மன்னர்களோடு அயலுறவு அமைத்தும் இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாய் கதை உண்டு.


விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனம் அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழரின் மூதாதையர் இருந்தனர். உண்மையில் "சிங்களம்' என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை. அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனது இக் கறுவாப்பட்டைக் காகத்தான். கறு வாப்பட்டை அதிகம் கிடைத்த தால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபமெனப் பட்டது.


விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் தமிழகம் தொண்டை நாட்டினின்று ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலையிறங்கி, அனுராதபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறா நீதி, பொறை, அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் எல்லாளன் என்று பொதுவாக அறியப்படுகிறவன்.

உண்மையில் முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு இளைய தளபதியர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை யென்பதும், மாறாக வெள்ளையராட்சிக்கெதிராய் கலகம் செய்து, துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டாரக வன்னியனை போராட்ட ஒளி விளக்காய் காட்டினார் என்பதும் மிக முக்கியமான குறியீடுகள்.

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன். பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய மனிதன். பிரபாகரன் ஒருபோதும் சிங்கள மக்களை அடிமை கொள்ள வேண்டுமென்றோ இலங்கையை ஆள வேண்டுமென்றோ ஆசித்தவரல்ல. ஆண்டாண்டு காலமாய் தமிழர் வாழ்ந்த அந்நிலப்பரப்பில் தானும் தன் மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, உண்டு களித்து இன்புற்று தமிழ் பேசி வாழ வேண்டுமென்று துடித்த ஓர் நீதிமான். பேராசைகள், அகண்ட கனவுகள் இல்லாதிருந்த மாமனிதர்.

வரலாறுதான் மனிதர்களை விடுவிக்கும். ஒருநாள் வரும். "எங்கள் நாட்டின் ஒன்றுபட்ட தன்மையை காத்த மாமனிதனே' என்று பிரபாகரனை சிங்கள வரலாறு கொண்டாடும். ஏனென்றால் என் மக்கள், என் நிலம், என் மொழி என நின்று போராடினானேயன்றி அவன் சிங்கள இனத்தையும் அவர்தம் நிலத்தையும் வீழ்த்த நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என ஏதேனும் ஓர் உலக சக்தியிடம் சரண டைந்து பக்குவமாய் இலங்கையை துண்டாடியிருக்கலாம். குறைந்தபட்சம் ஈவிரக்கமின்றி பல்லாயிரம் தமிழ் மக்களை கொன்றழித்த ராஜபக்சே கொடியவர்களைப் போல் இவரும் சிங்கள மக்களை கொன்றிருக்கலாம். அவ்வாறு பிரபாகரன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நீதிமான். ஆதலால்தான் மீண்டும் சொல்கிறேன், இலங்கையின் ஒன்றுபட்ட தன்மையினையும், இறையாண்மையினையும் பாதுகாத்தது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானேயன்றி சந்திரிகாக்களும், ராஜபக்சேக்களுமல்ல. தனது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைப் போரில் சிங்கள மக்களை வேறெந்த உலக சக்தியிடமும் விற்பனை செய்ய பிரபாகரன் நினைக்க வில்லை, விரும்பவில்லை. எத்துணை பெரிய மனிதன். பண்டாரக வன்னியனும் அப்படியான ஒரு மனிதன்தான்.

அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ""ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை'' என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.

முல்லைத்தீவில் நின்று பிரபாகரன் பண்டாரகவன்னியனின் வரலாற்றுத் தோளுரசி யதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டாரகவன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர் களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டாரக வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை இதுதான் அந்தச் செய்தி:

""போராளிகளே, தமிழ் மக்களே! எல்லாம் முடிந்துவிட்டதுபோல் இன்று தோன்றலாம். ஆனால் காலம் நிற்பதில்லை. வரலாறு மீண்டு வரும். இதே முல்லைத்தீவு புதிய சமர்களைக் காணும். தமிழன், பண்டாரகவன்னியனைப்போல மீண்டும் இந்நிலத்தில் பழி தீர்த்து நீதி பெறுவான்.''

உண்மையில் களத்தின் கடைசி கட்ட உண்மைகளை வெளிநாடொன்றில் நின்று கொண்டு தொலைபேசி வழிக்கூறிய அப் போராளிகளிடம் நான் விடவிரும்பா நம்பிக்கையுடன் கேட்டேன்.

""உங்களைப்போல் ஆங்காங்கு உயிர் தப்பியிருக்கும் போராளிகளால் மீண்டும் முல்லைத்தீவைக் கைப்பற்ற முடியுமா?'' என்று. அதற்கு அப்போராளி சொன்ன பதில் வியப்பாயிருந்தது. ஒரு முறையல்ல, பலமுறை படபடவெனச் சொன்னார். ""முல்லைத்தீவிலிருந்து சிங்கள ஆமிக்காரனை அடித்து விரட்டுவது சின்ன விஷயம் ஃபாதர். ஆகிலும் சின்ன விஷயம் ஃபாதர். அடுத்த மாசமே வேண்டுமென்டாலும் நடத்தலாம். ஆனால் அதற்கு இந்தியாவின்ற உதவி வேண்டும். இந்தியாவின்ற உதவியின்றி அது சாத்தியமில்லை. சரியான கஷ்டம்.'' இந்தியா ஒரு நாள் மாறும், இந்தியாவின் மாற்றத்தை தமிழகம் ஒருநாள் நடத்திக்காட்டும் என்ற நம்பிக்கையோடுதான் உணர்வாளர் களாகிய நாம் எல்லோரும் இயங் கிக்கொண்டிருக்கின்றோம். அதே உணர்வோடுதான் பிரபாகரன் இளைய தளபதியர்களுக்கு கூறிய தாய் சொல்லப்படுவதையும் பதிவு செய்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார்...

""இப்ப இங்கெ நிற்கிற நீங்களென்டல்ல... இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என்ற சொந்த பிள்ளையாத்தான் வளர்த் தேன். பல்லாயிரம் போராளிகளை இந்த விடுதலைக்கு நாம் ஈகம் செய்தோம். அதைவிட பெரிய நம் மக்கள் செய்த தியாகங்கள்... எதையும் நாம் மறக்க முடியாது. அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதச் சுமையை உங்கட தோளிலதான் நான் நம்பிக்கையோட வைக்கிறேன். உயிரைக் கொடுக்க அச்சமில்லை என்ற நம் தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது. அதே உறுதியோடு முன் செல்லுங்கள். வரலாறு நமக்காக மீண்டும் வரும்.

இருநூறு வருஷங்களுக்கு முன்னம் பண்டாரகவன்னியன் இதே வன்னி நிலத்தில் விடுதலைப்போர் புரிந்தார். இதே முல்லைத்தீவில் வெள்ளைக்காரன்ட கோட்டையை தகர்த்தார். ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக் கொடுக் கப்பட்டு கற்சிலைமடு வில் காவியமானார். அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்மூடி, கூர் மழுங்கி, துருப்பிடித்து இனிமேல் பயன்படுத்த முடியாது எனுமளவிற்கு ஆகிக்கிடந்தது. தமிழருக் கான அந்த வாளை இருநூறு ஆண்டுகளாய் ஒருவரும் தொடவுமில்லை. ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.

துருப்பிடித்து கூர்மழுங்கிக் கிடந்த பண்டாரக வன்னியனின் வாளை இருநூறு ஆண்டுகளுக்குப் பின்- முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் துணிவுடன் கையிலெடுத்தது. இலட்சிய உறுதி, இடைவிடா பயிற்சி, அர்ப்பணம், நினைத்துப் பார்க்க முடியாத ஈகங்களால் அந்த வாளை பட்டை தீட்டி, மேலும் மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக நமது இயக்கம் அதை உயர்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்தப் போர்வாள். உறையில் கிடக்கவில்லை, தரையில் விழவுமில்லை. தமிழருக்கான அந்த வாளை, உயரே தூக்கிப் பிடித்தபடிதான் இன்றும் நாம் களமாடுகிறோம். இன்றல்ல, என்றென்றும், உலகம் முடியும்வரை உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக இதனை நான் தருகிறேன். இந்த வாள் இனி தரையில் விழக்கூடாது. கூர் மழுங்கித் துருப்பிடித்துவிடக்கூடாது. அந்தப் புனித கடமையை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.

இதே முல்லைத்தீவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களின் கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்த்த பண்டாரகவன்னியனின் வரலாறு, நாம் இதே மண்ணில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடத்திய வரலாறு மீண்டும் வரும். தினையாண் குருவிகளைப்போல் அமைதியான உழைப்பும், அக்னிக் குஞ்சுகளைப்போல் அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்றால் புலிகளின் படை மீண்டும் முல்லைத்தீவில் தரையிறங்கும். நான் உங்களோடுதான் இருக்கிறேன். புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்.


நன்றி-நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

24 Sept 2009

பிரபாகரனின் புதிய போர்முழக்கம்..! பகுதி-55


முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது.

"2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

நான் மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லா தமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும் இவர் கூர்த்த மதியுடையவர், அடர்த்தியான எழுத்தாளர். நக்கீரன் என்ற புனைப்பெயரில் நீண்ட காலமாய் எழுதி வருகிறார். இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தைகள் "ஓஸ்லோ' நகரில் நிறைவுற்ற நாளில் மின் அஞ்சல் கட்டுரையூடாக இவர் குறிப்பிட்டிருந்தார். ""முப்பது ஆண்டுகளாய் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவரது போராளிகளும் சாதித்த யாவும் இரண்டே மாதத்தில் பேச்சுவார்த்தைகளூடாய் இழக்கப்பட்டு விட்டன'' என்று. மறக்க முடியாத இந்த வரிகள் அவரது வலி மட்டுமல்ல, பலரது மனக்குமுறலாயும் இருந்தது.

அதே காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் வன்முறையற்ற வழியில் சிக்கலான தேசிய-இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த கருத்தமர் வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், எரித்ரேயா, ருவாண்டா போன்ற நாடுகளிலிருந்து கருத்துரையாளர்கள் வந்திருந்தார்கள். நானும் பங்கேற்றுக் கலந்து கொண்டேன். இரவு உணவுக்குப்பின் ஓர் தனித்த உரையாடலின் போது எரித்ரேயா நாட்டிலிருந்து வந்திருந்தவர் -பெயர் மறந்து விட்டேன், அவர் சொன்னார்: ""என்ன காரணங்களுக்காக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டார் களென்று தெரியவில்லை. பலமான நிலையில் நின்று கொண்டு தேடப்படும் சமாதானம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இன்றைய உலக ஒழுங்கு அதற்குச் சாதகமானதாயில்லை. பேச்சுவார்த்தையூடாக அவர்கள் வீழ்த்தப் படுவார்களென்றே நான் நினைக்கிறேன், அஞ்சுகிறேன்'' என்றார்.


அந்த எரித்ரேய நாட்டுக்காரர் இன்னொன்றையும் அன்று குறிப்பிட்டார். அன்று அவர் கூறியபோது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நடந்து விட்டவற்றை மீளாய்வு செய்கையில் தமிழர்களாகிய நமது ஆய்ந்தறியும் குறைபாடுகள் நிறையவே புலப்படுகின்றன. அந்த மனிதர் சொன்னார்: ""மரபு ரீதியான போர் அணிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அது மிகப்பெரிய சாதனைதான். இந்த போர் அணிகள்தான் அவர்களது இப்போதைய பெருவெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆனால் உலகம் அதிநவீன போர்க்கருவிகளை இலங்கை அரசுக்கு வழங்க முன்வரும் பட்சத்தில் இதே மரபுப் போரணிகள் விடுதலைப்புலிகளுக்கு சுமையாக மாறும்.

ஆதலால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஓர் திறமான கொரில்லா சக்தியாகவே தொடர வேண்டும். சமாதான காலத்திலும் கூட அவர்கள் கொரில்லா வாழ்க்கையே வாழ வேண்டும். குறைந்தபட்சம் மரபுப் போரணி கள் மிகக்குறுகிய கால அளவில் மீண்டும் கொரில்லா அணிகளாக மாறுவதெப்படியென்ற உத்திகளையேனும் அவர்கள் திட்டமிட்டு, பயிற்றுவித்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உலகம் சதி செய்யும் நாளில் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள்'' என்றார்.

எத்தியோப்பியாவுடன் நீண்ட போர் நடத்தி விடுதலை பெற்ற நாடு எரித்ரேயா. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இணையாக பிறிதொன்றை ஒப்பீடு செய்ய முடியுமென்றால் அது எரித்ரேய விடுதலைப் போராட்டம்தான். இன்றும் ஐ.நா. அவையில் தமிழீழ மக்களுக்கான குரல்களில் ஒன்றாக தம்மை எப்போதும் முன்வந்து அளிக்கும் இந்த நாட்டின் மக்கள் மகத்தானவர்கள். ஆயுத பலத்தை மானுட உணர்வுகளின் ஆற்றல் முறியடிக்குமென்பதை தமிழீழ மக்களுக்கு முன்னதாகவே நிரூபித்தவர்கள். அந்த நாட்டின் மனிதர் அக்கறையுடன் கூறிய மேலே நான் சொன்ன கருத்து அப்போது எனக்கு உரைக்கவில்லை. ஆனால் அவரது கூற்று அச்சொட்டான தீர்க்கதரிசனம் என்பதை நடந்துவிட்ட யாவும் நமக்குக் காட்டி நிற்கின்றன. கிளிநொச்சி விழுவதற்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் பேராயுதங்களை தாரை வார்த்துவிட்டு கொரில்லா அணிகளாய் வன்னிக் காடுகளுக்குள் பரவியிருந்தால் போராட்டம் பாதுகாக்கப்பட்டிருக்குமே என்றெல்லாம் இன்று எண்ணம் அங்கலாய்த்துக் களைப்புறுகிறது.

போராட்டப் பின்னடைவுக்கு இரண்டாவது காரணமாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது தளபதி பால்ராஜ் அவர்களின் இழப்பு. தமிழீழ வரலாற்றின் மகத்தான இம்மாவீரனை மனம் சிலிர்த்து முன்பேயே நான் பதிவு செய்துவிட்டதை வாசகர்கள் அறிவீர்கள். ""பாக்ஸ் சண்டை'' என அறியப்படும் எதிரியின் அணிகளை ஊடறுத்து அவர்களுக்குப் பின்புறமாய் நின்று கொண்டு சண்டையிடும் வித்தகத்தில் பால்ராஜ் கில்லாடி. ""பால்ராஜ் இருந்திருந்தால் அன்று தாளையடி-செம்பியன்பற்று கடற்கரையில் தரையிறங்கி வதிரையனில் நின்று பாக்ஸ் சண்டை பிடித்து ஆனையிறவை வீழ்த்த வழி செய்ததுபோல் இப்போது ஆழ்கடல் வழியாக "சாலை' கரையில் தரையிறங்கி வள்ளிபுனம் ஆற்றங்கரையோரமாய் ஊடறுத்து புதுக் குடியிருப்பு இரனைப்பாலை பகுதிகளில் நின்றிருந்த பத்தாயிரத்திற்கும் மேலான ராணுவத்தினரின் கதையை முடித்திருப்பான். பால்ராஜை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆமிக்காரன் ஓடியிருப்பான்'' என்று பிரபாகரன் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. களத்தின் இறுக்கமான தருணத்தில் கூட தன்னிலும் மேலானதோர் தளபதி இருந்தான் -அவன் பால்ராஜ் -அவன் இருந்திருந் தால் முல்லைத்தீவு பேரழிவு நடக்காதபடி சண்டை யிட்டிருப்பான்'' என்று சொல்ல முடிந்தமை பால்ராஜின் தனித்துவத்தையும் அதனிலும் மேலாய் பிரபாகரனின் உயர்வையும் வெளிப்படுத்தியதாகவே பதிவு செய்ய வேண்டியுள்ளது.


விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கு மூன் றாவது காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரைத்தது கருணம்மானின் துரோகம். கருணம்மானின் துரோகம் இரு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஒன்று போர் நடத்தும் ஆளணிகள் விடுதலைப் புலிகளுக்கு வெகுவாகக் குறைந்தது, இரண்டு இயக்கம், அதன் போர் உத்திகள், முக்கிய நபர்கள், தொடர்பான முக்கிய தகவல்களை இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து உதவியதால் விடுதலைப்புலிகளை களத்தில் எதிர்கொள்வது இலங்கை ராணுவத்திற்கு மிகவும் எளிதாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாய் அடி வாங்கி மட்டுமே பழகி திருப்பித் தாக்குதல் நடத்த தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை ராணுவத்திற்கு விடுதலைப் போராட்டத்தை திருப்பிடியத்துத் தாக்கியழிக்கும் முக்கியமான உள்ளீடுகளைத் தந்ததும், காடுகள் வழி புலிகளின் பகுதிகளை ஊடுருவிச் செல்லும் உத்திகளை, ஆளணிகளைத் தந்ததும் கருணம் மான்தான்.

உண்மையில் கருணம்மானை எப்படியேனும் சரி செய்து போராட்டத்திற்காய் வைத்திருக்க வேண்டு மென்றே இறுதிவரை பிரபாகரன் விரும்பியிருக் கிறார். தன்னுடன் வந்து வன்னியில் நிற்கும்படி பலமுறை அழைத்திருக்கிறார். ""என்னோட நின்டா சரியாயிடுவான். எதென்டாலும் கதைத்து சரியாக்கிடலாம்'' என்று தான் மூத்த தளபதிகளிடம் கருணாவுக்காய் பேசியிருக்கிறார். ஆனால் பிரபாகரன் கருணாவை நம்பிய அளவுக்கு கருணா தன்னை வளர்த்து உயர்த்திய தலைவனை நம்பவில்லை. தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை- துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரண மானான். அதேவேளை கருணம்மான் தலைவனோடு களத்தில் நின்றிருந்தால் தமிழீழ விடுதலை வரலாறு வேறு மாதிரியாய் இருந்திருக்கும்.

விடுதலைப் போராட் டத்திற்கு பின்னடைவு தந்ததாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப் பிட்டது 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கரையோரப் பகுதிகளை ஊழித் தாண்டவமாடித் தாக்கிய சுனாமி. விடுதலைப்புலிகளது போர்க்கள ஆற்றலின் முது கெலும்பாக நின்றது கடற்புலிகள் பிரிவு. கடற்புலிகளின் வளங்கள் பெருவாரியாக கடற்கரை சார்ந்தே நிறுத்தப்பட்டிருந்தன.

நீண்ட காலமாய் சிறுகச் சிறுக கடற்புலிகள் கட்டியெழுப்பிய வளங்கள், பணிமனைகள், ஆய்வுக்கூடங்கள் என கணிசமானவை சுனாமியால் விழுங்கப்பட்டன. சுனாமி விளைத்த இழப்புகளின் விபரம் அப்போது புலிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால் போராட்ட வலு குறைந்ததில் சுனாமிக்கு உள்ள பங்கை போரின் உச்ச நாட்களில் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

ஐந்தாவதாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது எல்லோரும் மிகப்பெரும் வசதியென்றும் துணையென்றும் கருதிய "அலைபேசி', "கை பேசி' -மொபைல் தொலைபேசிக் கலாச்சாரம். கடந்த பத்து ஆண்டுகளில் கை பேசி அடிமைகளாய் களத்தில் நின்ற பலரும் ஆகிவிட்டிருந்தனர். அதன் எதிர்விளைவுகளை எவரும் சரிவர மதிப்பீடு செய்யவில்லை. 2002-ம் ஆண்டுக்குப் பின், குறிப்பாக இந்தியாவும் உலகநாடுகளும் இலங்கை ராணுவத்திற்கு உயர் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கத் தொடங்கியபின் புலிகள் -அவர் தம் தளபதிகள் -ஆயுதக் கொள்வனவுகள்- கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளிலுள்ள அவர்களது வளங்கள் -போர்க்களத் திட்டங்கள் என அனைத்து தகவல்களையும் இலங்கை ராணுவத்தால் புலிகளின் கைபேசிகளை இடைமறித்துச் சேகரிக்க முடிந்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பதிவு செய்த மேலும் இரண்டு காரணங்களை இப்போதைக்கு இங்கு நான் மறு பதிவு செய்ய விரும்பவில்லை. காலம் வருகையில் அவற்றை நிச்சயம் வரலாற்றிற்காய் எழுதுவேன். இவையெல்லாம் பேசி முடித்தபின் நிறைவாக அவர் கூறியது புதியதோர் போர் முழக்கம். பண்டார வன்னியனின் வாளை தமிழரின் விடுதலைக் குறியீடாக்கி அவர் நிகழ்த்திய மறக்க முடியாத -மறக்கக் கூடாத அந்த பேருரை.

(நினைவுகள் சுழலும்)
நன்றி-நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

21 Sept 2009

அன்றே எழுந்த அச்சம் - பகுதி-54


முன்பெல்லாம்போரென்றால் சண்டைக்களத்தில்தான் சாவுகள் நடக்கும். பொதுமக்கள் -குறிப்பாக குழந்தைகள், பெண்களின் மரணம் என்பது அபூர்வமானது. இரண்டாம் உலகப் போர்வரை அப்படித்தான் பொதுவில் இருந்தது. மனிதகுலமாய் நாம் மிகவும் நாகரிகமடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் இக்காலத்தில்தான் போர்கள் அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடக்கின்றன. தயக்கங்கள் எதுவுமின்றி அனைத்துலக ஆதரவுடன் நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட முழுவீச்சிலான முதற்போர் தமிழ்ஈழ மக்கள் மீது சிங்களப்பேரினவாதம் நடத்திய இன அழித்தல் போர்தான்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், உள்ளபடியே போர்களில்லா உலகினை உருவாக்க வேண்டுமென்ற உளமார்ந்த அக்கறை உலகின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலருக்கும் இருந்தது. ஐக்கியநாடுகள் அவை மலர்ந்தது போர்களில்லா உலகுகாணும் இத்தகையோரது கனவிலும், உறுதியிலும், உழைப்பிலும்தான். போரின் கொடுமை அதனூடே வாழ்ந்து அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவ் வகையில் ஐ.நா. அவை தொடங் கப்பட்டபோது அதனை நிரப்பிய தலைவர்களும் அதிகாரிகளும் மானுடத்தை நேசித்தவர்களாய் இருந்தார்கள். உலக அமைதியின் ஆர்வலர் களாய் இருந்தார் கள்.


இன்று அவ் வாறில்லை. மிகப்பெரு வாரியாக ஐ.நா. அமைப்புகளை நிரப்பியிருப்பவர்கள் உறுப்பு நாடுகளின் அரசுகளால் அனுப்பப்படு கிறவர்களென்பதைவிட உறுப்பு நாடுகளது உளவுத் துறைகளால் தெரிவு செய்யப்படுகிறவர்கள். ஐ.நா. அவையை இன்று உண்மையில் இயக்குவது உலக நாடுகளின் அரசியற் தலைமைகளென்பதைவிட உளவு அமைப்புகளென்பதே உண்மை.

எனவேதான் உறுதியான அரசியல் ஏற் பாடுகளுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி நார்வே நாடு கொடுத்த வாய்ச்சொல் நம்பிக்கையின் அடிப்படை யில் மட்டுமே விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றபோது மிகவும் அச்சமாக இருந்தது. ஏற்கனவே பாலஸ்தீன மக்களின் போராட்டப் பின்னடைவுக்கு நார்வே நாட்டின் இடைப்பாட்டில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளும் ஒரு காரணம் என்ற கருத்தும் எனக்கிருந்தது. சிங்கம்போல் ஒரு காலத்தில் நிமிர்ந்து நடந்த யாசர் அராபத் டேய்டன் நீண்ட பேச்சு வார்த்தைகள் தோற்றபோது கழுத்துச் சுருக்கிடப்பட்ட பரிதாபமான நாய்க்குட்டிபோல் ஆகியிருந்தார். அந்நிலை தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கும் நடந்துவிடுமோ என்ற நிஜமான அங்கலாய்ப்பு இருந்தது.

போரைப்போல் கொடுமையும் குற்றமும் பாவமும் வேறொன்றில்லை. ஆயினும் யதார்த்தம் என்ன வென்றால் "வலுநிலைச் சமநிலை'தான் இன்று உலகில் பல பெரும் யுத்தங்களை தவிர்த்து வருகிறது. ரஷ்யாவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பெரும் அழிவாயுதங்கள் இருப்பதால்தான் அமெரிக்கா அந்நாட்டுடன் நேரடியான போருக்குப் போகவில்லை, போகாது. சீனா விஷ யத்திலும் இதுதான் உண்மை.

மிதவாதத் தலைவர்களை கொன்ற ழித்தது, சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டது என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு தவறுகள், குறைகளுக்கும் அப்பால் அவர்களை நாம் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் அவர்களது ராணுவ பலம் மட்டுமே ஈவிரக்கமில்லா சிங்களப் பேரின வாத அரசியலுக் கெதிரான தமி ழரின் அரசியற் பாதுகாப்பு அரண் என்ற கருத்து நிலைப்பாடே. அந்த சாதக நிலையை, உண்மையில் தமிழருக்கான ஒரே பாதுகாப்பு மிச்சமிருப்பை பேச்சு வார்த்தைகளினூடாக விடுதலைப்புலிகள் இழந்துவிடுவார் களோவென்ற அச்சம் நிஜமானதாயிருந்தது. பகிரங்கக் கடிதமெழுதத் தலைப்பட இதுவே முக்கிய காரணம்.


இன்னொன்று உலக அரங்கில் சட்ட பூர்வமான ஓர் அரசுக்கு இருக்கக்கூடிய அரசியற்பலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களுக்கு இல்லை. அமெரிக்கா -ரஷ்யா -இந்தியா போன்ற ஏதேனும் பெரிய நாடுகள் புரவலராய் அவர்களை சுவீகரித்துக்கொண்டாலொழிய, அப்படியான வசந்தநிலை விடுதலைப்புலிகளுக்கோ, தமி ழருக்கோ இருக்கவில்லை. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க வேண்டுமென்பதில் இந்திய வெளியுறவு- பாதுகாப்புக்கொள்கை தெளிவாயிருந்தது. இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் தனது மேலாண்மை திட்டங்களின்படி அமெரிக்காவும் புலிகளை பலவீனப்படுத்தவேண்டுமென்பதை கொள்கை யாகக் கொண்டிருந்தது. 2002-வாக்கில் புலிகளின் அபார ராணுவ வெற்றிகளை மதிப்பீடு செய்து, ""புலிகளையும் உள்ளடக்கிய தீர்வொன்று காணவேண்டும்'' என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா பரிசீலிக்கத் தொடங்கியது. ஆயினும் புலிகளை அரசியல்-ராணுவ ரீதியாக பலவீனப்படுத்தவேண்டுமென்ற கொள்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை. நார்வே கள மிறக்கப்பட்டது இந்நிலைப்பாட்டின் பின்னணி யில்தான்.

ஆதலால்தான் அனைத்துலக கண்காணிப் பாளர்களை புலிகள் தமது ஆளுகைப் பரப்பில் அனுமதித்தபோது மிகவும் அச்சமாக இருந்தது. முப்பது ஆண்டுகள் இலங்கை நேரடி யுத்தமும், இந்தியா-அமெரிக்க நாடுகள் மறைமுக யுத்தமும் நடத்தி சாதிக்க முடியாத ராணுவ அனுகூலங்களை பேச்சு வார்த்தை காலத்தில் "கத்தி யின்றி-ரத்தமின்றி'ப் பெற் றுக்கொள்வார்கள் என கடந்த இதழ் கட்டுரை யில் குறிப்பிட்டிருந்தது இதனையொட்டிதான். இரண்டு விஷயங்கள் இத்திசையில் நடக்குமென அஞ்சி னோம்.

அதிநவீன உளவுக் கண்காணிப்பு ஏற்பாடுகளை உலக சக்திகள் புலிகளின் நிலப்பரப்பில் எளிதாக விதைக்குமென்ற அச்சம் முதலானது -அதுபோல இயக்கத்திற்குள் பிளவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்ற அச்சம் இரண்டாவது. இதனையே எனது பகிரங்கக் கடிதத்திலும் எழுதினேன்.


இதனைச் செய்தது நிச்சயம் போரை விரும்பியும், பேச்சுவார்த்தைகளை நிராகரித்துமல்ல. தமிழ் இனத்தை நேசிக்கும் ஓர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் மட்டுமே எழுதினேன். யார்தான் போரையும் அதன் ஈவிரக்கமில்லா கொடுமைகளையும் விரும்ப முடியும்?

தொடர்ந்தும் எழுதினேன் :

* போர்க்களத்தில் நிற்கும்வரை சிறு சிறு சச்சரவுகளும், தனிநபர் ஈகோ மோதல்களும் பெரிதாக வராது. ஆனால் சண்டையில்லா காலத் தில், உரிய அரசியற் கல்வி இல்லையென்றால் இவையெல்லாம் பெரிதாக மாறும்.

* போருக்கு முகம் கொடுத்து வாழப் பழகிவிட்ட மக்களுக்கு சண்டை நிறுத்தம் மிகப் பெரிய ஆறுதலே. அதேவேளை மீண்டுமொரு யுத்தத்திற்கு மக்களை ஆயத்தம் செய்வது சவால் நிறைந்ததாயிருக்கும்.

* இயக்க உறுப்பினர்கள் சண்டை நிறுத்த காலத்தில் தங்கள் குடும்ப உறவுகளை இயல்பாகவே புதுப்பிப்பார்கள். மீண்டும் யுத்தம் வருமேயானால் முந்தைய கால அர்ப்பண அளவினை இது குறைக்க வாய்ப்புண்டு. மூத்த தளபதிகள் தங்கள் குடும்பம், பிள்ளைகள் என்று உணர்வுரீதியாக நெருக்கமாவார்கள்.

* ஒருவரையொருவர் குறை கூறி வசைபாடி வாழும் பண்பினை மரபணுவில் கொண்ட இனம் தமிழ் இனம். வெளிநாடுகளில் விடுதலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் குறைகள் கூற வருவார்கள். அவை சார்ந்து நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்டுக்கோப்பை குலைக்கும் -காட்டிக்கொடுக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

* சண்டை நிறுத்த காலத்தில் வெளி நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தேசம் காண வருவார்கள். ரேபான் கண்ணாடி, பெர்முடாஸ், சாக்லேட் பைகள், விஸ்கி போத்தல்களென மேற்குலகின் மினுக்கங்களோடு வருவார்கள். அதேகாலத்தில் தன் உறவுகளைக் காண ஊருக்குப் போகும் போராளியின் வீட்டில் அதே வறுமையும் இயலாமைகளும்தான் தொடர்ச்சி யாய் இருக்கும். அவனது மனதிற்குள் என் னென்ன உணர்வுகள் எழுமென்பது யூகிக்க முடியாததல்ல.

* எந்த மேற்குலக நாடும் இந்தியாவைக் கடந்து ஓர் அளவுக்கு மேல் தமிழர் பிரச்சனையில் இயங்காது. இது யதார்த்த உண்மை. பேச்சு வார்த்தை விருப்பங்களை யும், வியூகங்களையும் நார்வே வந்து சொல் வதற்குப் பதில் விடுதலைப் புலிகள் இயக்கமே இந்தியாவுக்கு இரண் டாம் வழிகள் மூலம் சொல்லி நல்லுறவு தேடியிருக்கலாம்.

* பேச்சுவார்த்தை களுக்குப் போயிருக்கக்கூடாது. போன பின்பு அதனை செவ்வனே கையாண்டிருக்க வேண்டும். உலகத் தமிழரிடையே அளவின்றிக் கிடக்கும் அரசியல், சட்ட, ராஜதந்திர வளங்களை ஒருமுகப்படுத்தி இலங்கையை- உலகை எதிர் கொண்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லையென்பதும், உணர்ச்சிவசப்படும் இளவயதுக் காரர்களைப்போல் பேச்சுவார்த்தைகளை அணுகியதும் மிகப்பெரிய தவறாகும். உலகின் நல்லெண்ணெத்தை வீணடித்துவிட்டதாகவே தெரிகிறது.

இவற்றோடு இன்னும் சிலவற்றை அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். இத்தருணத் தில் இதனை எழுதக்காரணம் இரண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் னடைவுக்குக் காரணங்களென வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவில் நின்றுகொண்டு கூறியதாகச் சொல்லப்படுவனவற்றில் முத லாவது -""பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டு களத்தின் ராணுவச் சாதக நிலையை இழந்தது. ஏனைய நான்கு காரணங்கள் என்ன?

(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்
ஜெகத் கஸ்பார் அடிகளார்

17 Sept 2009

வரலாற்றுப் பதிவு ! பகுதி - 53


வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்கு அதனை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பலநூறு முறை, ஏன் பல்லாயிரம் முறை வேண்டுமா, வேண்டாமா என்று யோசித்துக் குழம்பிய பின்னரே அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்யும் முடிவினை எடுத்தேன். அக்கடிதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நான் எழுதிய பதினேழு பக்கக் கடிதம். 2002-ல் அவரை நேர்காணச் சென்றபோது எழுதிக் கையிலெடுத்துக் கொண்டு போனேன். நேரில் பார்க்க எப்படியிருப் பாரோ, கடிதத்தின் விஷயங்களை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் அப்போதே தயங்கினேன். ஆனால் அவரது எளிமையும் இயல்பான அணுகுமுறையும் தந்த துணிவில் கடிதம் தாங்கியிருந்த கருத்துக்களை படபடவென்று சொல்லி முடித்துக் கொண்டு கடிதத்தையும் கொடுத்தேன். இதுபற்றி முன்பொருமுறை "மறக்க முடியுமா?' கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து இத்தொடரை படித்து வரும் வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

சராசரி அரசியல்வாதிகளைப்போல் பொதுமேடை களில் வாய்ப்பந்தல், தோரணங்கள் கட்டும் பழக்கம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இல்லையே தவிர, இயல்பான நட்புச் சூழமைவில் அவர் கலகலப்பான வாயாடி என்பதை அவரை நேர்கண்ட ஒரு நாளிலேயே தெரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. எனது எல்லா கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தந்த அவர், நான் எழுதியிருந்த அக்கடிதத்தின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் தரவில்லை. ஆனால் அவற்றை நான் கூறியபோது கூர்மையாகக் கேட்டார், அதனிலும் கூர்மையாக என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் துயரம் கவிந்ததை அக்கணத்தில் என்னால் உணர முடிந்தது.


எனது கெட்ட-நல்ல பழக்கங்களில் ஒன்று மனதில் பட்டதை கரடு முரடாகவே சொல்லிவிடுவது. பிரபாகரன் அவர்களிடம் பேசியதோடு நான் நிறுத்தவில்லை. தமிழ்ச் செல்வன் அவர்களிடமும் அக்கடிதக் கருத்துக்களை வாதிட்டேன். அவரோ வாய் திறக்கவில்லை. தனது தனி முத்திரையான புன்னகை ஆயுதத்தால் என்னை கட்டுக் குள் வைத்திருந்தார். அதற்குப் பிறகு தளபதி பால்ராஜ் அவர்களிடமும் கொட்டித் தீர்த்தேன். உள்ளத்தில் கள்ளமில்லா குழந்தையாயிருந்த பால்ராஜ் மட்டும் ""ஓம் ஃபாதர்... இதத்தான் நாங்களும் சொல்லுறம் ஃபாதர்... தலைவரும் உப்பிடித்தான் நினைக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் போயிட்டம். எப்படி இந்த முற்றுகைக்குள்ளிருந்து வெளியே வரப் போறமென்டுதான் சரியான குழப்பமா கிடக்கு'' என்றார்.

1995 முதல் 2002 வரை தமிழ்ஈழ மக்களுக்கான பணிகளில் முழுநேரப் பணியாளன் போல் ஈடுபட்டிருந்த நான், 2002-ல் இந்தியா வந்து அமைதியாக வேறு களங்களைத் தெரிவு செய்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலும் அந்தப் பதினேழு பக்கக் கடிதத்தில் இருந்தது.

வெற்றியின் நாளில் சற்றே விட்டு விலகி நிற்பதும், தோல்வியின் இடரின் பொழுதில் எதிர்கொண்டு அருகில் களம் நிற்பதும் நல் அறம் என ஆழமாய் நம்புகிறேன். எல்லா தருணங்களிலும் அதன்படி வாழ இயலாதுபோயினும் எப்போதும் அதனை உள்ளத்தில் இருத்த வேண்டுமென்பதில் இடைவிடா நினைவுபடுத்தல் செய்வதுண்டு.

துன்புறும் ஈழமக்களுக்கான பணியில் நான் தீவிரமாக உள்நுழைந்தது மிகவும் நெருக்கடியான காலத்தில். ராஜ பக்சே கொடுங்கோலர்கள் தமிழர் இன அழித்தலை ""மனிதாபி மான மீட்பு நடவடிக்கை'' என்று எப்படி மோசடி வனைந்தார் களோ அப்படி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ""சமா தானத்திற்கான யுத்தம்'' (War For Peace) என சந்திரிகா குமாரதுங்கே அம்மையார் மோசடி வனைந்த காலம். முப்படைகளும் பெரும் எடுப்பில் தமிழ் ஈழத்தின் இதயமான யாழ்ப்பாணத்தை அடிமை கொள்ள முற்றுகையிட்டு முன் நகர, பத்து லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகி வலிகாமம், தென்மராட்சி, வன்னிக்காடுகள் என தஞ்ச மடைந்த காலம். இன்று வவுனியா திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள் படும் அத்தனை இடர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டே அம்மக்கள் பட்ட காலம். அம்மக்க ளின் மீது இடைவிடா யுத்தம். உணவு, மருந்துப் பொருட்கள் தடை என சந்திரிகா அம்மையார் "சமாதானத் திற்கான' இன அழித்தல் நடத்திய காலம்.

அக்காலத்தில் இந்தியா-தமிழகம் தவிர்த்து உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் சென்றோம். துன்புறும் ஈழத் தமிழ் மானுடத்தோடு உலகத் தமிழ் உணர்வு களை, உறவுகளை இணைத்தோம். பசி, பட்டினி யிலிருந்து அம்மக்களைக் காக்க அணிதிரண்டு உழைத்தோம். யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் குழந்தைகளுக்கு புதிய குடும்பங்களில் தொட்டில் கட்டினோம். யுத்தம் சிதறடித்த பல்லாயிரம் உறவுகளை மீண்டும் இணைத்தோம்.

1996-ல் ஏழுபேர் நாங்கள் பேசுவதைக் கேட்கவந்த நகரில் 1997-ல் ஈராயிரம் பேர் வந் தார்கள். அதற்குப்பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், கரிப்பட்ட முறிப்பு, பளை, பரந் தன், ஆனையிறவு என 2000-ம் ஆண்டில் போர்க் கள வெற்றிகளின் உச்சத்தை விடுதலைப்புலிகள் தொட, ஈராயிரம் தமிழர் கூடிய நகர்களில் இருபதாயிரம் பேர் கூடினர். ஐயங்கள், அச்சங்கள் தவிர்த்து தமிழீழ விடுதலைக்காய் கடமையாற்ற பலர் முன்வந்த காலம் அது. யாழ்குடாவின் வாயிலில் புலிகளின் படையணிகள் நின்றன. "யாழ்ப்பாணத்தை பிடித்து விட்டால் தனி நாடு அங்கீகாரம் தருகிறோம்' என உலக நாடுகள் சில ரகசிய வாக்குறுதி கொடுத்திருந்ததாய் அப்போது செய்திகள் உலவிக்கொண்டி ருந்தன. புலிகளது போர்க்கள வெற்றிகளின் உச்ச தருணத்தில்தான், தமிழீழக் கனவு வெகு அருகில் வந்து விட்டதென்ற பொழுதில்தான் பணிக் களத்தை விட்டு நான் அகன்று விலகி வந்தேன். காரணம்... என்னவென்பதை அக்கடிதம் தாங்கியிருந்தது.

பதினேழு பக்க கடிதத்தை ஒருவரிச் செய்தியாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் : ""சமாதானப் பேச்சுவார்த்தை களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் ஒத்துக் கொண்டது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு. இதற்காக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல தமிழர் வரலாறும் நிரந்தரமாய் வருத்தப்படும்'' இதோ கடிதத்தின் சில பகுதிகள்:

""தமிழ்ஈழ தேசியத் தலைவர் என ஈழத்தமிழ் மக்கள் போற்றிக் கொண்டாடும் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, வணக்கம்.

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், பிழையெனின் பொறுத்தருள்க.

யுத்தக்களத்திலும் காலத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுக்கிற முடிவுகளை தமிழ் மக்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால், அமைதியின் காலத்தில் அவ்வாறு இருத்தலாகாதென்றும், கட்டற்ற விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டு மென்றும் கருதுகிறேன். அவ்வகையில் இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தற்போதைய சூழலில் தாங்கள் எடுத்துள்ள முடிவு தவறானதென்றும், இதற்காக தமிழீழ வரலாறு மிகவும் வருத்தப்படவேண்டி வருமென்றும் மிகுந்த பணிவுடன் சொல்லத் தலைப் படுகிறேன். எனது இந்நிலைப்பாட்டுக்கான கார ணங்களையும் இங்கு சமர்ப்பிக்கத் தலைப்படுகிறேன்.

1. ""ஓயாத அலைகள்'' தொடர் வெற்றிகள் மூலம் ஆனையிறவை வீழ்த்தி, யாழ்குடா நாட்டின் வாயிலில் நின்றீர்கள். தொடர்ந்து "வாழ்வா - சாவா' என்று இலங்கை ராணுவம் முன்னெடுத்த மிகப்பெரிய "அக்னிஹேலா-தீப்பிழம்பு'' நடவடிக்கையை சின்னா பின்னமாக்கிச் சிதைத்தீர்கள். அப்பாவித் தமிழர்களின் அனுதின வாழ்வை அச்சுறுத்திய விமானப்படையை உலகமே வியக்கும் வண்ணம் கட்டுநாயகே தாக்குதல் மூலம் சிதைத்தீர்கள். நாளொன்றுக்கு சராசரி 100 ராணுவத்தினர்... இலங்கை ராணுவத்தினர் தப்பியோடிக் கொண்டிருந்தனர். தொடர் யுத்தத்தின் சுமை யை தாங்க முடியாது, இலங்கை பொருளா தாரம் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டி ருந்தது. அரசியல்ரீதியாக தென்னிலங் கை கொந்தளிக்கத் தொடங்கியிருந் தது. ராணுவரீதியாக இலங்கையின் முப்படைகளும் தமது தன்னம்பிக்கை யை இழந்திருந்தன. மூர்க்கத்துடன் முன்னோக்கிச் சென்று, யாழ்குடாவையும் வென்று ஒட்டுமொத்த இலங்கை அரசமைப்பை மண்டியிடச் செய்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறொன்றும் நிச்சயம் உங்க ளுக்குக் கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. இதுவரை தமிழர்களின் உதவிக்கு வராத, நாளை தமி ழர்களுக்கான நீதிக்கு உத்தரவாதமாய் நிற்கப் போகாத உலகநாடுகளை நம்பி தாங்கள் சண்டை நிறுத் தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத் துக்கொண்டிருப்பது உண்மையில் செத்துக்கொண்டி ருக்கும் இலங்கையின் ராணுவ, பொருளாதார, அர சியல் அமைப்புகள் மீண்டும் மூச்சுபெற்று உயிர்பெறக் கொடுக்கும் வாய்ப்பாகும். இதற்காக நிச்சயம் தமிழர்களாகிய நாம் வருத்தப்பட வேண்டியது வரும்.

2. நானொன்றும் நிறைய படித்தவனல்ல -அனுபவ முதிர்ச்சி கொண்டவனுமல்ல. ஆயினும் அரசியல் விஞ்ஞான மாணவன் என்ற வகையில் என் சிற்றறிவு அறிந்து ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் தம் இறுதி இலக்கை அடை கின்றவரை போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும். சண்டை நிறுத்தம் தந்திரோபாயமான சிறு இடைவெளியாக இருக்கலா மேயன்றி, இப்போது நிகழ்வதுபோல் நீண்ட இடைவெளியாக இருத்தலாகாதென்றே கருதுகிறேன்.

3. முப்பது ஆண்டுகாலம் உங்களோடு சண்டை யிட்டு சாதிக்க முடியாத ராணுவ நலன்களையும் அனுகூலங்களையும் இச்சமாதான காலத்தில் இலங்கை ராணுவம் சாதிக்க முயலும். இந்தியா-மற்றும் உலகநாடுகளின் துணை இருப்பதால் அவற்றை நிச்சயம் இலங்கை சாதித்துவிடும்.

எவ்வாறு?

(நினைவுகள் சுழலும்)

13 Sept 2009

ஆயிரம் கேள்வி கேளு பாப்பா..! பகுதி - 52



ம.தனபாலசிங்கம் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர். ஓய்வு பெற்ற கணக்கர், ஆழமான தமிழ் அறிஞரும்கூட. அவரது இளைய சகோதரர் தமிழீழ மண் மீட்புக்காய் தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்.

ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிலரை இந்தி யாவின் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு "ரா' (தஆர) கடந்த 17 ஆண்டுகளில் விசாரித்துள்ளது. அவ்வாறு விசாரிக்கப்பட்டவர்களில் தனபாலசிங்கமும் ஒருவர். 2001-ம் ஆண்டு சிட்னி நகரில் "ரா' அமைப்பின் இரு அதிகாரிகள் அவரை நேர் கண்டனர். அவர்களுக்கு தனபாலசிங்கம் கூறிய பதிலின் ஒரு பகுதி இது:

""எனது உடல் மிகவும் பலவீனமுற்றிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராய் இருப்பதற்கு அடிப்படைத் தேவையான மனத் துணிவும், அர்ப்பண உணர்வும் எனக்கு இல்லை. தமிழர் களாகிய எமது ஆதர்சனமான அந்த மாபெரும் இயக் கத்தில் அங்கமாக இருக்க வேண்டுமென்றால் "உயிரினும் மேலாய் என் சுதந்திரத்தை மதிக்கிறேன்; உயிரே போயினும் என் விடுதலையை விட்டுக்கொடுக்கவோ, விலை பேசவோமாட்டேன்' என்று குரல் எழுப்பி முழங்கு கிற அச்சமின்மையும், உறுதியும் தேவை. அது எனக்கு இல்லை. நான் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினன் அல்லேன், பிரபாகரன் அவர்களை நான் சந்தித்தது மில்லை. ஆனால் உலகெங்கும் பல்வேறு நிலப்பரப்பு களிலும் தூரக்கடல்கள் கடந்தும் வாழ்கிற லட்சோப லட்சம் தமிழர்களைப்போல் எனக்கும் கனவொன்று உண்டு. மரணிப்பதற்கு முன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரில் காணவேண்டுமென்ற கனவு அது. பணிவுடன் அந்த மாமனிதன் முன் தெண்டனிட்டுத் தலை வணங்கி, ""நன்றியப்பா... எமக்கான மாண்பினை மீட்டுத் தந்தமைக்கு நன்றி. உன்னால் தமிழர்களாகிய நாங்கள் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறோம். நன்றி... நன்றி!'' எனச் சொல்ல வேண்டும். இது மட்டுமே ஆஸ்திரேலியாவில் வாழும் பலவீனமான இத்தமிழனுக்கு இருக்கிற இறுதிக் கனவு. தனபாலசிங்கம்போல் உலகில் இன்று கோடி தமிழர் உண்டு.

தனக்குப் பாடல்கள், பொதுவில் இசை பிடிக்கும். ஆனால் பாட வராது என நான் நேர்கண்டபோது வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறி யிருந்தார். "உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப்பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்' என்றபோது முகம் மலர்ந்தவராய்,

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா...

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'

என்று உச்சரித்துப் பதிவாக்கினார். அப்பாடலில் தொடரும் வரிகளை அவர் சொல்லவில்லை. ஆனால் தனபாலசிங்கம் போன்ற பலநூறு தமிழர்களின் உணர்வுப் பதிவுகளை இந்நாட்களில் இணையதளங்களில் கண்ணுறும்போது வரலாற்றுப் புகழ்பெற்ற அப்பாடலின் தொடரும் மறக்க முடியாத வரிகளை இங்கு எழுதவேண்டும்போல் தோன்றுகிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிற்கின்றார்.'

நடேசன் சத்தியேந்திரா லண்டனில் வாழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்ட நிபுணர். வாழ்வில் சந்திக்க வேண்டுமென விரும்பிய, விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர். அனைத்துலக அரசியல் சட்ட நுணுக் கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்டவர். 2002 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் இவரை ஈடு படுத்தியிருக்க வேண்டுமென நண்பர்கள் பலரிடம் நான் கூறிய துண்டு. நல்லவர், நடுநிலையாளர் என பலரும் சொல்லிக் கேட்டி ருக்கிறேன். அவரும் இணைய இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். ஒரு காலத்தில் பிரபாகரன் அவர்களுக்கு இணையானவராக மதிக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு அவர்களை 1990-களில் நடேசன் சத்யேந்திரா சந்தித்திருக்கிறார். 1993-ல் கிட்டு வீரமரணம் அடைந்தபோது அவரைப்பற்றி சத்யேந்திரா பின்வருமாறு எழுதினார் :

""தமிழ் ஈழத்தின் உண்மையான அறிவுஜீவிகளில் ஒருவர் கிட்டு. புத்தகங்கள் படித்தும், பிறர் பேசக்கேட்டும் பெற்றுக்கொண்டவற்றை தம் சொந்த சிந்தனைகள்போல் சித்தரிக்கும் போலி அறிவு மரபுக் காரனல்ல கிட்டு.

எப்போது, எவ்வாறு செய்ய வேண்டுமென்ற தெளிவும், நேர்மை யுமின்றி "அப்படிச் செய்திருக்க வேண்டும்', "இப்படிச் செய்யவேண்டும்' என்றெல்லாம் வாய்ப்பந்தல் கட்டும் அரைகுறை அறிவுஜீவியுமல்ல கிட்டு. விடுதலைப்பயணம் ஏதோ விரைவு ரயில் வண்டிபோல என்று நினைத்து துரித அதிரடி பலன்களை எதிர்பார்க்கும் முதிரா கனியுமல்ல கிட்டு. கிட்டு நிறைய படித்தார். தனது வாழ்வின் அனுபவங்களினூடே கற்றுக்கொண் டவைகளை படித்தவற்றோடு இணைத்தார். அந்த இணைவில் பிறந்த திட்டங்களை முன்னிறுத்தி, தான் சந்தித்த தமிழர்களை செயலுக்குத் தூண்டினார். அவரைப் பொறுத்தவரை சித்தாந்தம் என்பது யதார்த்த செயற்பாடாயிருந்தது.

கிட்டுவைப் பற்றி 1993-ம் ஆண்டு, தான் எழுதிய இவ்வரிகளை மீண்டும் மேற்கோள் காட்டி இப்போது எழுதி யுள்ள சத்தியேந்திரா அவர்கள், ""கிட்டு போன்ற ஒரு மாவீரன் -அறிவாளி - மாமனிதன் தன்னிலும் மேலாக ஒருவரை தலைவன் என ஏற்றுக் கொள்வ தென்றால் அப்படியான தகுதிகள் அத்தலைவனுக்கு இருந்திருக்க வேண்டும்.'' தொடர்ந்து எழுதும் சத்தியேந் திரா, பிரபாகரன் தன்னிடம் அவ்வப்போது கூறும் சில விஷயங் களை கிட்டு கூறுவதுண்டு. அவற்றில் சில பிரபாகரனின் ஆளுமையை வெளிப்படுத்துவதாய் இருந்தன.

"பேச்சாளர்கள் தலைவர் களாவதில்லை, ஆனால் தலை வர்கள் சில வேளைகளில் பேச் சாளர்களாகவும் இருக்க வாய்ப் புண்டு!'

"தூங்குகிறவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!'

"புதுடில்லிக்காரர்கள் வியாபாரிகள், எமது விடுதலை

வேட்கைக்கு அவர்கள் விலைபேசுகிறார்கள்!'

ஒருமுறை விடுதலைப்புலிகளின் லண்டன் அலுவலகப் பணியாளர் ஒருவர், தான் பலமுறை அணுகியும்கூட தமிழ்மக்கள் சரியான பதில் தர வில்லை, ஒத்துழைக்கவில்லை என சலித்துக் கொண்டபோது கிட்டு அப்பணியாளருக்குக் கூறினாராம், ""அதனாலென்ன... சரியான பதில் கிட்டும் வரை, ஒத்துழைப்பு வரும் வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சென்று பாரும், பேசும். உமக்குத் தெரியுமா... என்னை இயக்கத்தில் இணைய வைக்கவேண்டி தலைவர் என் வீட்டுக்கு ஆறுமுறையோ, ஏழு முறையோ வந்தார்''.

விடாமுயற்சி பிரபாகரனது ஆளுமையின் மிகப்பெரிய பரிமளிப்புகளில் ஒன்றாக இருந்தது. அதுவே ""விழ விழ எழுவோம்'' என்ற புலிகளின் தாரக மந்திரமாகவும் மாறியது. "வெற்றி -பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி -கற்றுக்கொள்வதற்கு' என்று பிரபாகரன் அடிக்கடி தளபதிகளிடமும் போராளிகளிடமும் கூறு வதுண்டாம். மக்கள் படும் துன்பங்கள்தான் அவரை கவலைக் குள்ளாக்குமேயன்றி தானும் இயக்கமும் சந்திக்கிற பின் னடைவுகள் புதிய உத்வேகத்தையே அவருக்குத் தந்திருக் கின்றன என்பதை நான் பேசிய எல்லா தளபதியர்களும் குறிப்பிட்டனர். இந்த அவரது குணாம்சம் இயக்கத்தின் இலட்சியம் நோக்கிய விடாப்பிடித்தனமான உறுதியை ஒவ்வொரு போராளியினதும் தாரக மந்திரமாக ஆக்கி யிருந்த தென்பதே உண்மை.

அதேவேளை தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பணிவும் அவரிடம் இருந்திருக்கிறது. "எங்கு பிழை விட்டோம் என்று யோசியுங்கள்' என்பதும் அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று எனச் சொல்கிறார்கள். "சர்வாதிகாரி' என இந்திய -உலக ஊடகங்கள் அவர் பற்றி உருவாக்கிய பிம்பத்திற்கு அப்பால், யதார்த்தத்தில் கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை அவர் மிகவும் ஊக்கு வித்தார் என்றே பலரும் எனக்குக் கூறினர்.

நான் அவரை நேர் கண்டபோது "அச்சம் என்பது மடமையடா' பாட்டு தனக்குப் பிடிக்குமெனக் கூறியதை முன்னர் எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட மற்றொரு பாட்டு 1960-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த "உயிர் மேல் ஆசை' படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கே.பி.சுந்தராம்பாள் பாடிய

"கேளு பாப்பா... கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா...

கேட்டால் கிடைப்பது பொது அறிவு,

இந்த கேள்வியில் வளர்வது பொது அறிவு'

என்ற பாடல். அந்தப் பாடலில் தொடர்ந்து வருகின்ற

"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

பயந்தவன் தனக்கே பகைவனானான்

என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'

என்ற வரிகளையும் சிலிர்ப்புடன் சொல்லிக் காட்டினார்.

மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்...

""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்,

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!''

என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று. உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன?

(நினைவுகள் சுழலும்)

நன்றி..
நக்கீரன்
ஜெகத்கஸ்பார் அடிகளார்

7 Sept 2009

அஞ்சாதே....!! பகுதி-51



1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது''.

ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.

எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.

எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.

மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.

எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.''

உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

(நினைவுகள் சுழலும்)
நன்றி...ஜேகத் கஸ்பார் அடிகளார்

3 Sept 2009

எம் மக்களை போக விடு...!! பகுதி - 50



"மறக்கமுடியுமா' நக்கீரனில் நான் எழுதத் தொடங்கி இது ஐம்பதாம் பதிவு. இரண்டு இதழ்களுக்கெனத் தொடங் கிய எழுத்து, காலம் தமிழ் வரலாற்றை சிலுவையிலறைந்த வலியின் கதறலாய் தொடர்கிறது. இப்போதும் நிறைவு செய்திடவே விருப்பம். எனினும் அரசியல் வெளி உண்மை அறுபட்டும், மானுடவெளி உணர்வு சலித்தும் கிடக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருள் கவிந்த பாலைவனத்தின் தூரத்துக் கூக்குரலாய் இன்னும் சில வாரங்கள் தொடரும். வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையின் தளிர்களாய் ஆங்காங்கு இயங்கிவரும் உணர்வு கொண்ட இளையர்களுக்கு இவ்விதழ் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

""எமது மக்களை போகவிடு'' (Let Our People Go) என்ற முழக்கத்தை செப்டம்பர் மாதத்திற்காய் "நாம்' (We) என்ற அமைப்பின் இளையர்கள் முன் வைக்கிறார்கள். முட்கம்பி வேலிகளுக்குள் சிறை யிடப்பட்டிருக்கும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் அவர்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையைக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு வருகிறார்கள் இந்த இளையர்கள். தமிழர்களாய், மனிதர்களாய் இவர்களோடு இணைவோம்.

ஊர் என்றதுமே புதுவை இரத்தினதுரையின் மறக்க முடியா கவிதையொன்று மனதில் விரிந்தது. தேடிக்கண்டெடுக்க இரண்டு நாட்கள் ஆயின.

நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

ஆம், உலகிடம் நம் மக்கள் இன்று வேண்டி நிற்பது ஒன்றுதான்! நாங்கள் ஊர் போய் சேர வழி செய்யுங்கள். ஊருக்குப் போனால் மீண்டும் போராட் டம் தொடங்குவார்களோ என்ற அச்சத்தில் இனத்தை யே வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திடும் திட்டம்தான் திறந்தவெளி வதை முகாம்கள். அக் டோபர் வந்துவிட்டால் அவை மரண முகாம்களாகும். ஆதலினால் அனைவரும் முழங்குவோம்: ""எமது மக்களை போகவிடு. Let Our People Go''

போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை. இதோ பதில்:

மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது. பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்: ""தினையான் குருவியை பார்த்திருக்கி றீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளி களில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி... குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்... ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாது காத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றி யும், தன்னம்பிக்கையோடும் செய்யும். நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை

வைத்தேன்

வெந்து தணிந்தது காடு: -தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார். பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்க மாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சா தீர்கள்.

போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்.

பிரபாகரன் மேலும் பேசுவார்.

(நினைவுகள் சுழலும்)

நன்றி்...
நக்கீரன்..(ஜெகத் கஸ்பர் அடிகளார்.)

30 Aug 2009

அவளத்தை தற்தவனிடமே பிசசை..!பகுதி-49



ஈழத்திலிருந்து கடந்த மாத இறுதியில் இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் வந்திருந்தார்கள். அரசியல் பேச வரவில்லை, பேசவுமில்லை. தமிழகத்துப் பேராயர்கள், ஆயர்களிடம் தங்கள் மக்களின் சிலுவைப் பாதையைச் சொல்லி நம்பிக்கையும், தோழமையும் பெறவே வந்தார்கள். அறையைத் தாழிட்டு ஆயர்களோடு நெஞ்சம் திறந்த அவர்களால் அழாதிருக்க முடியவில்லை. ஆம், ஆயர்களும் அழுதார்கள். நம்பிக்கைகள் யாவும் தகர்ந்து போய்விட்டதொரு காலத்தில் மேய்ப்பர்களுக்கும் ஆறுதல் தேவையாகிறது. மானத்தை, தன்மதிப்பை உயிரினும் மேலாய் பேணியதோர் மனிதக்கூட்டம் இன்று ஒருவேளை உணவுக்காய், அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம் ஏந்தி தலைகுனிந்து நிற்கும் அவலத்தை எந்த மேய்ப்பனால் தாங்கிக் கொள்ள முடியும்?

அக்டோபர் மாதம் அடைமழைக்காலம் தொடங்குமுன் அத்தனை மக்களும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் சாக நேரிடும் என எச்சரிக்கை அறிக்கையொன்று ஐ.நா.அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாய் ஒசசஊத ஈஒபவ ஊலடதஊநந என்ற ஐ.நா.செய்தி நிறுவனத்தில் எமக்குள்ள தொடர்புகள் கூறுகின்றன. ஆனால் கிராதக ராஜபக்சே அரசின் அருகாமைக் கூலிகள் போல் ஆகிவிட்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனும் அவரது செயலர் விஜய் நம்பி யாரும் இந்த அறிக்கை வெளி வந்து விடாதபடி அமுக்கி வைத்திருக் கிறார்களாம். தமிழர்கள் நமக்கு உலகில் இன்று நண்பர்கள் எவருமில்லை என்பது மட்டுமல்ல, நியாயத்தின் காவலர்களாய் இருக்க வேண்டியவர்கள் கூட ஒட்டுமொத்தமாய் நமக்கெதிராய் அணிவகுத்து நிற்கிறார்கள். எல் லோராலும் கைவிடப்பட்டவர் களானோம்.

மூன்று லட்சம் தமிழ் மக்கள் திறந்த வெளியில் சிறையிடப்பட்டு கடந்த வெள்ளியோடு நூறு நாட்கள் ஆயிற்று. இவர்கள் எக்குற்றமும் செய்யாதவர்கள். பலமுறை அடித்துத் துவைக்கப்பட்ட அப்பாவிகள். முக்கிய மாக, ஏழைகள். இவர்களை நூறு நாட்கள் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதமான செயல். இந்த திறந்த வெளிச் சிறைகளை பேணத்தான் இந்தியாவும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கிறது. தவறு, குற்றம், பாவம். இந்தியாவின் பணம் நமது பணம். தங்கள் வாழ்விடங்களில் மீண்டுமொரு சிறு வாழ்வை சூன்யம் விட்டுச் சென்ற புள்ளிகளிலிருந்து தொடங்கத்தான் நமது பணம் பயன்பட வேண்டுமேயன்றி அக்கிரமத்தின் சங்கிலிகளை மேலும் இறுக்கவும், அழுத்தி இறுக்கும் நுகத்தடிகளை அதிகமாக்கவுமல்ல. சட்டவிரோதமான பொதுமக்கள் சிறைகளைப் பேண துணைநிற்கும் நம் நாட்டு அதிகாரிகள் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிகிறார்கள். இறை நீதி இவர்தம் தலைமுறைகளை சும்மா விடாது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லா பகுதிகளும் கண்ணிவெடிகள் கொண்டிருப்பவை அல்ல. அதிகபட்சமாய் பத்து சத நிலப்பரப்பில் அவை இருக்கலாம். நேர்மை இருந்தால் கடந்த நூறு நாட்களிலேயே அப்பகுதிகளை அடையாளம் கண்டு சிவப்புக்கொடி நட்டிருக்க முடியும். மழைக்காலம் தொடங்குமுன் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் மனம் இல்லை. அதனிலும் மேலாய் திறந்தவெளிச் சிறைகளிலேயே பாதித்தமிழர்கள் அழிந்தும், பலவீனமுற்று வாழத் தகுதியற்றவர்களாயும் ஆகிடவேண்டுமென ராஜபக்சே அரசு நினைக்கிறது. இதற்கு உதவத்தான் நமது ஆயிரம் கோடி ரூபாய். தமிழ் மக்களைப் போக விடு என உத்தரவிடும் ஒழுக்கம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு என்று வரும்?

இன்றுவரை முல்லைத்தீவிலிருந்து எத்தனைபேர் தப்பி வந்தார்கள், அவர்கள் பெயர் என்ன, ஊர், விபரங்கள் என்னவென்ற முறைப்படியான பதிவுகள் எதுவும் இல்லை. அதனைச் செய்வதற்கு ஐ.நா.அவை நிறுவனங்கள் எதையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க வில்லை. வலுவோடு இருக்கிற தமிழ் வாலிபர்களை இரவோடு இரவாய் தினம் எட்டு, பத்து என தீர்த்துக் கட்டும் கொடுமையை படிப்படியாய் நடத்தி முடிக்கத் தோதாகத்தான் இன்றுவரை முறைப்படியான பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனை முன்பு நாம் சொன்னபோது இங்குள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை முதலாளி "புலிகளின் பிரச்சாரகர்' என்று எள்ளினார். இந்த வாரம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிக்கோப்பு உலகை உலுக்கி, நமது அச்சங்களெல்லாம் எத்துணை உண்மையானவை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இப்படியாக எத்தனை படுகொலைகள் நடந்தன? நாம் பார்த்த ஒளிக்கோப்பு காட்டும் கொடூரம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. எனில் கொடும் இரவுகளில் எத்தனை தமிழ் உயிர்கள் காற்றோடு கலந்தனவென்று எவருக்குத் தெரியும்? எனவேதான் உலக அமைப்புகளின் பார்வைக்கு வதைமுகாம்கள் வருவதை திட்டமிட்டு இலங்கை அரசு தடுத்து வருகிறது. உண்மையில் இலங்கையால் மட்டுமே முடிகிற காரியமல்ல அது. இந்தியா மட்டும் தன் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மீது கொஞ்சம் இறுக்கமும், தமிழர் மீது கொஞ்சம் இரக்கமும் வைத்தால் போதுமானது. மற்றவை தானாக நடக்கும்.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ராஜபக்சே ஊழிக்கூத்தெல்லாம் ஆடமுடியாது. இந்தியா கண்ணசைத்தால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ராஜபக்சேவை இறுக்க அணிவகுக்கும். சீனாவிடம் கூட நேரடியாகப் பேசி சரிக்கட்டும் ராஜதந்திர வலு இந்தியாவுக்கு உண்டு. இந்தியா இன்று குறி முண்டுக் கோவணம் கட்டி ராட்டை சுற்றிய மாமனிதனின் நாடல்ல. இது பெரிய வல்லரசு. செலவழிக்கும் திறனுள்ள சுமார் 40 கோடி நடுத்தர மேல் வர்க்கங்களை கொண்ட வருங்கால உலகச் சந்தை. இந்த சந்தையின் கண் சீறல்களுக்கு வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆத லால்தான் இந்தியா மனது வைத்தால் நிலை மை நிச்சயம் மாறும் என நம்பிக்கையோடு சொல் கிறோம்.



இந்தியா தானாக மாறாது. தமிழகம்தான் இந்தியாவை மாற்ற முடியும், மாற்ற வேண்டும். அக்பர், அன்புடை நேரு இப்படி ஓரிருவரது காலங்கள் தவிர்த்து புதுடில்லி தர்பார் நெஞ்சிரக்கம் கொண்டு மானுடத்தை அரவணைத்ததாய் வரலாறு இல்லை. ஆனால் தமிழகம் ஒன்றுபட்டு நினைத் தால் புதுடில்லி மாறும். எனவேதான் வசைபாடு படலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிச்சமிருக்கும் தமிழரையேனும் காத்திட எல்லா கட்சியினரும், அமைப்புகளும் இணைந்து ஒரு குரலாய் புதுடில்லியில் ஒலிக்க வேண்டுமென பாதம் விழுந்து மன்றாடுகின்றோம். உண்மையில் காங்கிரஸ் கட்சி எனக்கு பிடித்த கட்சிதான். இரண்டாம் தலை முறை தலைவர்களை அக்கட்சி அடை யாளம் கண்டு புடமிடும் காட்சி காண சிலிர்ப்பாயிருக்கிறது. நாளைய தேசம் குறித்த நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் தமிழகத்து காங்கிரஸ் பெரியோருக்கு தோழர் திருமாவளவன் மீது வருகிற கோபத்தில் கால் சதமேனும் ராஜபக்சே மீது வராதாவென்றுதான் ஒவ் வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா, அதிசயம் நடத்திக் காட்டு. பேராயர்களைப் பற்றி தொடக்கத்தில் கூறியிருந்தேன்.

எனது வாழ்வில் மறக்கவே முடியாத பேராயர் ஒருவரை நான் பதிவு செய்ய வேண்டும். அவர்தான் நினைவில் வாழும் முன்னாள் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள். மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மேல் மட்டிலா மதிப்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டவர். எப்போது அவரை சந்தித்தாலும் கலைஞரை சிலாகிப் பார். என்னை தெரிவு செய்து மணிலா வேரித்தாஸ் வானொலிக்கு அனுப்பி வைத்ததும் அவர்தான். குருகுல வாழ்வுக்கு ஒன்பதாம் வகுப்பில் என்னைத் தேர்வு செய்ததும் அவர்தான். 14-ம் வயதில் நாங்கள் 27 பேர் தெரிவு செய்யப்பட்டோம். தேர்வு நடைமுறைகளெல்லாம் முடிந்தபின் ஆசி பெறவேண்டி பேராயர் அலுவலகம் சென்று வரிசை யில் நின்றோம். பேராயர் முன் முழந்தாள்படியிட்டு அவரது மோதிரத்தை முத்தம் செய்ய வேண்டும். பேராயர்களின் மோதிரத்தை முத்தம் செய்வது கத்தோலிக்க மக்களிடையே பொது வழக்கம். எனது முறை வந்த போது நான் முழந்தாள்படியிடவுமில்லை, மோதிரத்தை முத்தம் செய்யவுமில்லை. கரங்கள் தொழுது வணக்கம் செய்தேன்.

""என்னடா... பேராயரின் மோதிரத்தை முத்தம் செய்யத் தயக்கமா?'' என்றார். நான் எப்பதிலும் சொல்லவில்லை. முதல் நாளாகிய அன்றே என் குருகுல வாழ்வு முடிந்து போகுமென்றுதான் அருகில் நின்ற ஆசிரியப் பெருமக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாமனிதர், மகான், தலைவர். குருகுல இயக்குநரான பின்னர் ஆயராக உயர்வு பெற்ற லியோன் தர்மராஜ் அவர்களை அன்றிரவே தனியாக அழைத்துக் கூறியிருக்கிறார், "அந்தக் காஞ்சாம்புரத்துப் பையனை கவனித்துக் கொள்ளுங்கள், வித்தியாசமான ஆளாய் வருவான் போல் தெரிகிறது' என்றிருக்கிறார்.

பௌத்த மகாநாயகதேரோவாக இருந்திருக்க வேண்டிய ஆஸ்வல்ட் கோமிஸ் என்ற சிங்களப் பேராயர் ஒருவர் போப்பாண்டவர் அரசு நடத்தும் உரோமாபுரி வரைக்கும் சென்று எப்படியாவது வேரித்தாஸ் வானொலியிலிருந்து என்னை நீக்க வேண்டுமென நீண்ட சதிசெய்த 2000-ம் ஆண்டில், கால்கள் அசைக்க முடியாமல் படுக்கையில் இருந்து கொண்டே சிங்களப் பேரினவாத இலங்கை திருச்சபையின் சதிக்கு செவிட்டிலறை கொடுத்து பின்வாங்கச் செய்த அந்தத் தலைவனை எப்படி நான் மறப்பேன்?

என்ன நடந்ததென்பது சுவாரசியமானது. உலகத் திருச்சபை, ஆசியத் திருச்சபை இரண்டையும் தன்வயப்படுத்தி சிங்களம் திமிருடன் நின்ற காலை மதுரை மாநகரில் படுக்கையில் இருந்து கொண்டே ""இலங்கையில் தமிழ்த் திருச்சபை அச்சுறுத்தப்படும் திருச்சபை. அவர்களால் அங்கு ஓங்கிக் குரல் எழுப்ப முடியாது. எனவே தான் அவர்களது குரலாய் தமிழகத் திருச்சபையும், ஆயர்களும் இங்கிருந்து பேச வேண்டியுள்ளது. ஃபாதர் ஜெகத் கஸ்பர் எனது நம்பிக்கைக்குரியவர். அவரது குரல் எனது குரல். எனது குரல் தமிழகத் திருச்சபையின் குரல். அவரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது'' என்று பெரிய அதிகாரிகளுக்குப் பதில் சொன்ன அந்தச் சூரியனை மனதில் நான் தொழாத நாளில்லை. எனக்காகப் பேசியதற் காகவல்ல, துன்புறும் என் இனத்திற்காகப் பேசியதால்.

(நினைவுகள் சுழலும்)

28 Aug 2009

அவரின் முகமா அது??..!! பகுதி - 48/80





மே-17 வரை நந்திக் கடற்கரை யில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்...

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். ""புலி தனியா பிரிஞ்சு வாங்கோ... பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ...'' என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். ""இனி அவன் ஆட்சிதானே... இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்... பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்...'' என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். "என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?' என்று. ""கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு'' என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், ""இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்... ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்'' என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், ""ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்'' என்றேன். "பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?' என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், "பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ' என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட "புலிகள்' என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, ""நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்'' என்பது. இன்னொன்று ""எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்'' என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. ""புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்'', ""ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்'', ""எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்'', ""எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்'' என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து "சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. "உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது' என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

(நினைவுகள் சுழலும்)